சென்னை: சட்டமன்ற தேர்தலில் வெற்றி பெற்று தவெக ஆட்சியமைத்துள்ளது. விஜய் முதலமைச்சராகியுள்ளார். அவருடன் 9 பேர் அமைச்சராக பதவியேற்றார்கள். ஆனால் சுமார் 10 நாட்களுக்கு மேலாகியும் அமைச்சரவை விரிவாக்கம் செய்யப்படவில்லை. தவெக அமைச்சரவை நாளை விரிவாக்கம் செய்யப்படவுள்ளது. இதில் அதிமுக வேலுமணி, சி.வி சண்முகம் அணியினர் இடம்பெறுவார்களா என்கிற எதிர்பார்ப்பு எழுந்துள்ளது. ஆனால் அதிமுக அமைச்சரவையில் இடம்பெற விசிக, கம்யூனிஸ்ட்கள் எதிர்ப்பு தெரிவித்துள்ளனர்.
தவெக அமைச்சரவையில் அதிமுக இடம்பெற்றால் எங்கள் ஆதரவை மறுபரிசீலனை செய்வோம் என கம்யூனிஸ்ட்கள் கூறினர். தவெக அமைச்சரவையில் இடம்பெற வேண்டுமென விசிக, ஐயூஎம்எல், கம்யூனிஸ்ட்களுக்கு தவெக சார்பில் அமைச்சர் ஆதவ் அர்ஜுனா நேரடி அழைப்பு விடுத்துள்ளார். தவெகவின் அழைப்பு குறித்து திருமாவளவன் பதில் அளித்துள்ளார்.
சென்னையில் செய்தியாளர்களுக்கு பேட்டியளித்த விசிக தலைவர் திருமாவளவன், "தவெக அமைச்சரவையில் இடம்பெறுவதற்கு அழைத்த ஆதவ் அர்ஜுனா நன்றி. அவரின் அழைப்புக்கு மதிப்பு தெரிவிக்கிறோம். இந்த அழைப்பை நிராகரிக்க முடியாது. எல்லோருக்குமானவர் அம்பேத்கர் நூல் விழாவிலேயே விஜய் விசிகவுக்கு வெளிப்படையாக அழைத்தார். அது எங்களை அழைத்ததற்கான செய்தியாக தான் பார்த்தோம். அப்போது தவெக கூட்டணியில் இணையும் சூழல் உருவாகவில்லை. வேளச்சேரியில் முதல்வர் விஜய் என்னை நேரில் சந்தித்தபோது அமைச்சரவையில் இடம்பெறுவது குறித்து அழைப்பு விடுத்தார். தவெக கூட்டணியில் நாங்கள் தேர்தலை சந்திக்கவில்லை. திமுக கூட்டணியில் இடம்பெற்று 2 தொகுதிகளில் வெற்றி பெற்றோம். தவெக ஆட்சியமைப்பதற்கு வெளியில் இருந்து ஆதரவளித்தோம். அமைச்சரவையில் பங்கு கொடுத்தால் தான் ஆதரவு என்பதில் உடன்பாடில்லை. அதனால் நிபந்தனையுடன் ஆதரவளிக்கவில்லை. பொதுச்செயலாளர், துணைப் பொதுச்செயலாளர் பொருளாளர், முதன்மைசெயலாளர் உள்ளிட்ட மூத்த நிர்வாகிகளிடம் அழைப்பு குறித்து கலந்து பேசி முடிவு செய்வோம். முன்பு கம்யூனிஸ்ட்கள் எடுத்த அதே நிலைப்பாட்டை எடுத்தோம் இப்போது அவர்கள் மீண்டும் அழைப்பு விடுத்துள்ளதால், ஏன் முடிவு செய்யவில்லை என்று எங்கள் கட்சியினர் கேள்வி எழுப்பக் கூடும். அதனால் தவெகவின் அழைப்பு குறித்து நிர்வாகிகளுடன் ஆலோசித்து முடிவு செய்வோம்" என்றார்.விஜய் போட்ட விதை
திருமாவளவன் முடிவு