சென்னை: ஜெம் கிரானைட்ஸ் நிறுவன உரிமையாளர் வீரமணி தொடர்பான வழக்கை விசாரிக்க 4 பேர் கொண்டு சிறப்பு புலனாய்வுக் குழு அமைக்கப்பட்டுள்ளது. இந்த குழுவில் கூடுதல் ஆணையர் தேன்மொழி, இணை ஆணையர் திஷா மிட்டல், கண்காணிப்பாளர்கள் முத்தரசி மற்றும் கீதாஞ்சலி ஆகியோர் உள்ளனர். இவர்கள் சென்னை காவல் ஆணையர் அமல்ராஜ் தலைமையில் விசாரணை நடத்த உள்ளனர்.
ஜெம் கிரானைட்ஸ் நிறுவன உரிமையாளர் வீரமணி சிறுமிகளை பாலியல் வன்கொடுமை செய்த வழக்கில் ஆகஸ்ட் மாதம் 29ஆம் தேதி சென்னை மத்திய குற்றப்பிரிவு காவல்துறையினரால் கைது செய்யப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டார். இவருக்கு உடந்தையாக இருந்ததாக கூறப்படும் சாந்தி, மகேந்திர சிம்கன், உதவியாளர் கணேசன் ஆகியோரும் கைது செய்யப்பட்டுள்ளனர்.
இவரிடம் நடத்தப்பட்ட விசாரணை அடிப்படையில் அவருக்கு சொந்தமான வீடுகள், அலுவலகங்களில் சோதனை நடைபெற்றது. இந்த வழக்கு தொடர்பான முக்கிய ஆவணங்கள், டிஜிட்டல் சான்று, வீடியோக்களை கைப்பற்றும் நோக்கில் விசாரணை தீவிரமாக நடந்து வருகிறது. இந்த வழக்கில் கைது நடவடிக்கையை தவிர்க்க பல கோடி ரூபாய் பணம் கைமாறியதாக குற்றச்சாட்டுகள் எழுந்துள்ளன. இதனால் வழக்கின் விசாரணை அதிகாரிகளாக இருந்த உதவி ஆணையர் யாஸ்மின், ஆய்வாளர் மகேஷ் குமார் மற்றும் காவல் ஆய்வாளர் ராஜலட்சுமி ஆகியோருக்கு சம்மன் அனுப்பப்பட்டுள்ளது. இவர்களிடம் வழக்கை முடித்து வைக்க முயற்சிகள் மேற்கொள்ளப்பட்டதா, அவ்வாறு நடவடிக்கை எடுக்க யாரேனும் அதிகாரிகள் அல்லது பிற நபர்கள் யாரும் நிர்பந்தம் கொடுத்தார்களா என்ற கோணங்களில் விசாரணை நடத்தப்பட உள்ளது. ஜெம் கிரானைட்ஸ் வீரமணி வழக்கு தொடர்பாக பல்வேறு பூதங்கள் கிளம்பி வருகிறது. இந்த வழக்கின் போது சென்னை காவல் ஆணையராக இருந்த அருண் குமார், சென்னை தெற்கு கூடுதல் ஆணையராக இருந்தகண்ணன் ஆகியோரும் காத்திருப்போர் பட்டியலில் வைக்கப்பட்டுள்ளனர். விசாரணை தீவிரப்படுத்தப்பட்டுள்ள நிலையில், தற்போது சிறப்பு புலனாய்வுக் குழு அமைக்கப்பட்டுள்ளது. 4 பேர் கொண்ட சிறப்பு புலனாய்வுக் குழுவை அமைத்து டிஜிபி மகேஷ் குமார் அகர்வால் உத்தரவிட்டுள்ளார். இந்த குழுவில் கூடுதல் ஆணையர் தேன்மொழி, இணை ஆணையர் திஷா மிட்டல், கண்காணிப்பாளர்கள் முத்தரசி மற்றும் கீதாஞ்சலி ஆகியோர் உள்ளனர். இவர்கள் சென்னை காவல் ஆணையர் அமல்ராஜ் தலைமையில் விசாரணை நடத்த உள்ளனர். பாதிக்கப்பட்ட சிறுமிகள் ஏற்கனவே வாக்குமூலம் அளித்துள்ளனர். அவை வீடியோவாக பதிவு செய்யப்பட உள்ளது. இதில் அரசியல் பிரமுகர்கள், காவல்துறை முக்கிய பிரமுகர்கள் பணம் பெற்றதாக சொல்லப்படுகிறது. சாந்தி தான் வீடியோவை பதிவு செய்தாரா? சிறுமிகளை அழைத்து வந்தவர்கள் யார் உள்ளிட்ட பல்வேறு கோணங்களின் அடிப்படையில் விசாரணை தீவிரப்படுத்தப்பட்டுள்ளது.