சென்னை: கடும் எதிர்ப்புக்கு நடுவே சென்னை பரந்தூர் விமான நிலையத்துக்கு 90 சதவீத நிலங்கள் கையகப்படுத்தப்பட்ட நிலையில் இந்த திட்டத்தை கைவிடுவதாக முதல்வர் விஜய் நேற்று அறிவித்தார். ஆனால் பரந்தூருக்கு பதில் வேறு எங்கு விமான நிலையம் அமைக்கப்படும் என்பதை விஜய் தெரிவிக்கவில்லை. இந்நிலையில் தான் பரந்தூருக்கு மாற்றாக வேலூரில் உள்ள விமான நிலையத்தை மேம்படுத்தலாம் என்று பலரும் ஐடியா கொடுத்து வருகின்றனர். அப்படி என்ன வசதி வேலூரில் உள்ளது? பரந்தூரை விட வேலூரில் விமான நிலையம் அமைப்பது எப்படி தமிழகத்துக்கு சாதகமாக அமையும் என்பது பற்றி இங்கு பார்க்கலாம்.
தமிழக சட்டசபையில் 110வது விதியின் கீழ் அறிவிப்புகள் வெளியாகும்போது அதுபற்றி விவாதிக்க முடியாது. கேள்விகள் எழுப்ப முடியாது. மாநிலத்தின் கொள்கை முடிவு, அவசரகால அறிவிப்புகள் உள்ளிட்டவை இந்த விதியின் கீழ் வெளியிடப்பட்டு வருகிறது. ஒவ்வொரு முதல்வர்களும் 110வது விதியின் கீழ் பல்வேறு அறிவிப்புகளை வெளியிடுவது வழக்கம். அந்த வகையில் தமிழக சட்டசபையில் நேற்று 110வது விதியின் கீழ் முதல்வர் விஜய் முக்கிய அறிவிப்புகளை வெளியிட்டார். அப்போது முதல்வர் விஜய் ''சென்னையிலுள்ள மீனம்பாக்கம் விமான நிலையம் ஆண்டுக்கு 30 மில்லியன் பயணிகளைக் கையாள்கிறது. இதனால் புதிய விமானம் நிலையம் அமைக்கும் தேவை ஏற்பட்டுள்ளது. ஆனால், முந்தைய அரசு விவசாயிகளைப் பெரிய அளவில் பாதிக்கும் வகையிலும், குடியிருப்புகளை அதிக அளவில் அகற்றும் வகையிலும் விமான நிலையத்தை அமைப்பதற்கான முயற்சிகளை மேற்கொண்டது. ஏகனாபுரம் மற்றும் இதர கிராம மக்கள் இந்த விமான நிலையம் அமைக்க எதிர்ப்பு தெரிவித்து வருகின்றனர். சென்னை பரந்தூர் மற்றும் அதனைச் சுற்றியுள்ள 12 கிராமங்களில் அமைய இருக்கும் விமான நிலையத்தை எதிர்த்து போராடும் மக்களுடன் நான் உறுதியாக நிற்கிறேன். 2024 அக்டோபர் மாதம் விக்கிரவாண்டியில் நடந்த பொதுக்கூட்டத்திலேயே பரந்தூரில் புதிய விமான நிலையம் அமைப்பதற்கு எதிர்ப்பு தெரிவித்திருக்கிறேன். பரந்தூரில் இந்த திட்டம் அமையக்கூடாது என கூறியிருந்தேன். இப்போது பரந்தூரில் புதிய விமான நிலையம் அமைக்க மேற்கொண்ட நடவடிக்கைகள், இந்த அரசால் கைவிடப்படும். விமான நிலையத்துக்கு வேறு இடத்தை தேர்வு செய்யப்பட்டுள்ளது. தொழில்நுட்ப ரீதியிலான சாத்திக்கூறுகளை ஆராய்ந்து அந்த இடம் இறுதி செய்யப்படும்'' என்றார். இதன்மூலம் பரந்தூர் விமான நிலைய திட்டத்தை தமிழக அரசு கைவிட்டுள்ளது. கடந்த திமுக ஆட்சியின் போது, பரந்தூர் பகுதியில் ரூ.27,500 கோடியில் புதிய விமான நிலையம் அமைக்க ஏறத்தாழ 90 சதவீதத்திற்கும் மேலான நிலம் கையகப்படுத்தப்பட்டு இருந்தது. போராடி விவசாயிகளிடம் பேச்சுவார்த்தை நடத்தப்பட்டு சமாதான முயற்சி மேற்கொண்ட நிலையில் தற்போது அந்த திட்டம் ரத்தாகி உள்ளது. இந்நிலையில் தான் பரந்தூருக்கு பதில் வேலூரில் சர்வதேச தரத்தில் விமான நிலையம் அமைக்கலாம் என்று பலரும் கருத்து தெரிவித்து வருகின்றனர இதற்கு சில முக்கிய காரணங்கள் உள்ளன. வேலூரில் அப்துல்லாபுரத்தில் விமான நிலைய கட்டுமான பணிகள் நிறைவடைந்துள்ளன. இருப்பினும் இந்த விமான நிலையம் இன்னும் செயல்பாட்டுக்கு வரவில்லை. 2019ம் ஆண்டிலேயே விமான நிலையத்தை செயல்பாட்டுக்கு கொண்டு வர திட்டமிடப்பட்ட நிலையில் நிலம் கையகப்படுத்துதலில் தொடர்ந்து தாமதம் ஏற்பட்டு வருகிறது. மொத்தம் 10.77 ஏக்கர் பட்டா நிலம் மட்டும் இன்னும் கிடைக்கவில்லை. இதற்காக ரூ.28 கோடி ஒதுக்கப்பட்டாலும் கூட அது வெளியிடப்படாதால் அந்த விமான நிலையம் இன்னும் பயன்பாட்டுக்கு வராமலேயே உள்ளது. இதனால் பரந்தூருக்கு பதில் குறைந்த செலவில் வேலூர் விமான நிலையத்தை சர்வதேச விமான நிலையம் அளவுக்கு தரம் உயர்த்த முடியும். சென்னையின் மையப்பகுதியில் இருந்து பரந்தூர் சுமார் 70 கிலோமீட்டர் தொலைவில் உள்ளது. ஆனால் வேலூருக்கும், சென்னைக்கும் இடையே 137 கிலோமீட்டர் தான் தொலைவு. வாகனங்களில் 3 மணிநேரத்தில் சென்று விடலாம். சற்று தொலைவு என்றாலும் கூட வேலூர் முக்கிய இடமாக உள்ளது. இங்கு புதிதாக விமான நிலையம் அமைக்க வேண்டாம்.ஏற்கனவே உள்ள விமான நிலையத்தை மேம்படுத்தினாலே போதும்.இதனால் ஏற்கனவே வேலூரில் பயன்பாட்டில் இருக்கும் விமான நிலையத்தை தரம் உயர்த்துவதற்கான நடவடிக்கையில் ஈடுபடலாம். நீர் ஆதாரத்தை எடுத்து கொண்டால் பாலாற்றில் இருந்து நீர் பெறும் 9 பாசன குளங்களை பயன்படுத்தி கொள்லளாம். ஜெட் ரக விமானங்கைள இயக்கும் வகையில் ஓடுபாதையை மாற்றம் செய்வதற்கான செலவு என்பது பரந்தூர் விமான நிலையத்திற்கு ஆகும் செலவை விட மிக மிகவும் குறைவாகும். இதனால் பரந்தூருக்கு மாற்றான இடம் என்றால் வேலூராக அமைகிறது. சென்னை மற்றும் அதனை சுற்றிய பகுதிகளுக்கு கட்டுமான பணிகளுக்கு மணல், சரளை கற்கள் வேலூரில் இருந்து தான் செல்கிறது. எண்ணூர் துறைமுகம், அனல் மின் நிலையம் மற்றும் அரக்கோணம் ராஜாளி விமானப்படை தளம் ஆகியவற்றின் கட்டுமான பணிகள் வேலூரின் மணல், சரளை கற்கள் தான் பயன்படுத்தபப்ட்டது. வேலூரி ல் விமான நிலையம் அமைக்கும்பாது அதற்கு தேவையான மூலப்பொருட்கள் அங்கேயே கிடைக்கும். வேலூரை எடுத்து கொண்டால் நிறைய கல்வி நிறுவனங்கள் உள்ளன. விஐடி பல்கலைக்கழகம் இங்கு தான் அமைந்துள்ளது. சமீபத்தில் டெல்லி முதல்வர் ரேகா குப்தாவின் இளைய மகன் நிகுஞ்ச் குப்தா கூட வேலூர் விஐடியில் தான் கல்லூரி படிப்பை முடித்து பட்டம் பெற்றார். அதேபோல் சுகாதாரத்துறை வசதிகளும் நன்றாக உள்ளதோடு, சுற்றிப்பார்க்கவும் நிறைய இடங்கள் உள்ளன. ஆந்திராவும் பக்கத்திலேயே உள்ளது. இதனால் ஆந்திரா செல்லும் தொழில்களை நம் மாநிலத்துக்கு இழுக்க முடியும். அதுமட்டுமின்றி வேலூரில் இருந்து தமிழகத்தின் பல்வேறு இடங்களுக்கு சாலை மார்க்கமாகவும், ரயில் மார்க்கங்களும் உள்ளன. வேலூரில் இருந்து தமிழகத்தின் 4 பக்கங்களுக்கும், ஆந்திராவிற்கும் எளிதாக செல்வதற்கான போக்குவரத்து வசதி உள்ளது. இதனால் எளிதாக வேலூரை பொதுமக்களால் அணுக முடியும். இதனால் வேலூர் மட்டுமின்றி ராணிப்பேட்டை உள்பட அதனை சுற்றிய மாவட்டங்களிலும் தொழில் வளர்ச்சி உள்பட பல்வேறு துறைகளில் வளர்ச்சி கிடைக்கும். இதனால் சென்னையில் விமான நிலையத்தை தரம் உயர்த்துவது, 2வது விமான நிலையம் அமைப்பது உள்ளிட்ட பணிகளுடன் மாநிலத்தில் உள்ள பிற விமான நிலையங்களை மேம்பாட்டுக்காக மத்திய அரசுடன் சேர்ந்து செயல்பட வேண்டிய தருணம் இது என நிபுணர்கள் கருத்து தெரிவித்துள்ளனர். அதுமட்டுமின்றி பரந்தூருக்கு பதில் வேலூர் விமான நிலையத்தை சர்வதேச அளவில் தரம் உயர்த்த வேண்டும் என்றும் அவர்கள் கூறுகின்றனர். தமிழகம் தற்போது குலசேகரப்பட்டினத்தில் இருந்து ராக்கெட் ஏவுவதை உறுதி செய்துள்ளத. அந்த வகையில் விமான பயணம் தொடர்பான விவரங்களுக்கம் தமிழக அரசு கவனம் செலுத்த வேண்டும் என அவர்கள் விரும்புகின்றனர்.