சிறப்பு முகாமா? சித்திரவதை கூடமா? திருச்சி சிறப்பு முகாமை நிரந்தரமாக மூடனும்! கொந்தளித்த வேல்முருகன்

  • சென்னை: திருச்சியில் செயல்பட்டு வரும் ஈழத்தமிழர் சிறப்பு முகாமில் உண்ணாவிரதத்தில் ஈடுபட்டுள்ள 5 பேருடன் உடனடியாக பேச்சுவார்த்தை நடத்தி, அவர்களின் கோரிக்கைகளுக்கு உரிய தீர்வு காண வேண்டும் எனவும், அந்த சிறப்பு முகாமை நிரந்தரமாக மூட வேண்டும் என தமிழக வாழ்வுரிமைக் கட்சித் தலைவர் வேல்முருகன் வலியுறுத்தியுள்ளார்.

    Advertisement

    இதுதொடர்பாக அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில்," திருச்சி சிறப்பு முகாமில் அடைக்கப்பட்டுள்ள ஈழத்தமிழர்கள், தங்களின் அடிப்படை மனித உரிமைகளுக்காக 5 ஆவது நாளாக ஐந்து பேர், உண்ணாவிரதப் போராட்டத்தில் ஈடுபட்டிருப்பதும், அவர்களில் 3 பெண்களின் உடல்நிலைக் கவலைக்கிடமாக இருப்பதாகவும் வெளியாகியுள்ளத் தகவல்கள் மிகுந்த வேதனையளிக்கின்றன.

    Advertisement

    இனப்படுகொலையில் தப்பி குற்றுயிரும் குலையுயிருமாகப் பாதுகாப்பு தேடித் தமிழ்நாட்டை நம்பி வந்த ஈழத்தமிழர்களை, ஆண்டுக்கணக்கில் சிறப்பு முகாம் என்றப் பெயரில் சிறை போன்ற சூழலில் அடைத்து வைப்பது மனிதாபிமானத்திற்கும், சனநாயக விழுமியங்களுக்கும், மனித உரிமைகளுக்கும் எதிரானச் செயலாகும்.

    திருச்சி சிறப்பு முகாமை நிரந்தரமாக மூட வேண்டும் என்பது, தமிழக வாழ்வுரிமைக் கட்சி நீண்ட காலமாக வலியுறுத்தி வரும் கோரிக்கையாகும். உண்ணாவிரதத்தில் ஈடுபட்டுள்ள 5 பேருக்கு மட்டுமல்லாமல், திருச்சி சிறப்பு முகாமில் நீண்டகாலமாகத் தடுத்து வைக்கப்பட்டுள்ள அனைத்து ஈழத்தமிழர்களின் நிலையும், மனிதாபிமான அடிப்படையில் மறுபரிசீலனை செய்யப்பட வேண்டும். அவர்கள் விரும்பினால் பாதுகாப்பான மூன்றாம் நாடுகளுக்குச் செல்லத் தேவையான சட்ட, நிர்வாக மற்றும் தூதரக நடவடிக்கைகளை தமிழக அரசு, ஒன்றிய அரசுடன் இணைந்து உடனடியாக மேற்கொள்ள வேண்டும்.

    Advertisement

    இந்தியாவிலேயே வாழ விரும்பும் ஈழத்தமிழர்களுக்கு நடைமுறையில் உள்ள இந்தியச் சட்டங்களின்படி குடியுரிமை அல்லது சட்டப்பூர்வ நிரந்தர வாழ்வுரிமை கிடைக்கத் தேவையான நடவடிக்கைகளை ஒன்றிய அரசு மேற்கொள்ளவும், அதற்காகத் தமிழக அரசு தொடர்ந்து வலியுறுத்த வேண்டும். மேலும், உண்ணாவிரதத்தில் ஈடுபட்டுள்ள 5 பேருடன் உடனடியாக பேச்சுவார்த்தை நடத்தி, அவர்களின் கோரிக்கைகளுக்கு உரிய தீர்வு காண வேண்டும்.

    உடல்நிலை பாதிக்கப்பட்டுள்ள 3 பெண்களுக்கு உயர்தர மருத்துவ சிகிச்சை அளிக்க வேண்டும். நீண்டகாலமாக நிலுவையில் உள்ள வழக்குகள் மற்றும் நிர்வாக நடவடிக்கைகளை விரைந்து முடித்து, திருச்சி சிறப்பு முகாமை நிரந்தரமாக மூடி, மனித உரிமைகளுக்கு மதிப்பளிக்கும் மாற்று நடைமுறையை செயல்படுத்த வேண்டும்.

    Advertisement

    ஈழத்தமிழர்களின் உயிரும், உரிமைகளும் நிர்வாக அலட்சியத்திற்கு பலியாகக் கூடாது. மனிதாபிமான அடிப்படையில் உடனடியாகத் தலையிட்டு, இப்பிரச்சினைக்கு நிரந்தரத் தீர்வு காண தமிழக அரசும், ஒன்றிய அரசும் காலம் தாழ்த்தாமல் தேவையான அனைத்து நடவடிக்கைகளையும் மேற்கொள்ள வேண்டும் என்று வலியுறுத்திக் கேட்டுக்கொள்கிறேன்." என கூறியுள்ளார்.

    English Summary

    Velmurugan urges immediate talks with fasting detainees and calls for the permanent closure of the Trichy Special Camp.