தமிழ்நாடு, கேரளாவின் கல்குவாரியா? நீங்க மட்டும் நல்லா இருந்தா போதுமா? வெடித்த தவாக வேல்முருகன்!

  • சென்னை: தமிழகத்திலிருந்து கேரளாவுக்கு கனிம வளங்களை எடுத்துச் செல்ல தடை விதிக்கப்பட்டிருக்கும் நிலையில், அந்த முடிவை மறுபரிசீலனை செய்ய வேண்டும் என கேரளா அரசு தமிழக அரசை வலியுறுத்தி வருகிறது. இந்த நிலையில் தமிழ்நாடு, கேரளாவின் கல்குவாரியா? இயற்கை வளங்கள், கார்ப்பரேட்டுகளின் இலாபத்திற்கானதா? என தமிழக வாழ்வுரிமைக்கட்சித் தலைவர் வேல்முருகன் கேள்வி எழுப்பியுள்ளார்.

    Advertisement

    தமிழகத்தின் பல்வேறு பகுதிகளில் கட்டுமான பணிகளுக்கு தேவையான கருங்கல், ஜல்லி, எம்-சாண்ட் போன்ற கனிம வளங்கள் வெட்டி எடுக்கப்பட்டு வருகிறது. இந்த நிலையில் தமிழ்நாட்டை தவிர்த்து கேரளா, கர்நாடகா உள்ளிட்ட அண்டை மாநிலங்களுக்கு அதிக அளவில் கனிம வளங்கள் அனுப்பப்பட்டு வந்தது.

    Advertisement

    இதனால் தமிழகத்தில் கட்டுமான பணிகளுக்கு கருங்கல் ஜல்லி போன்றவற்றுக்கு தட்டுப்பாடு ஏற்பட்டது. தமிழ்நாட்டில் உள்ள கட்டுமான பணிகளுக்கும் உட்கட்டமைப்பு திட்டங்களுக்கும் கனிம வளங்களின் தேவையை பூர்த்தி செய்ய, தமிழ்நாட்டிலிருந்து கேரளா உள்ளிட்ட அண்டை மாநிலங்களுக்கு கனிம வளங்களை கொண்டு செல்ல தமிழக அரசு மூன்று மாதங்களுக்கு தற்காலிக தடை விதித்துள்ளது.

    கனிம வளங்கள்

    இந்த தடையை நீக்க கோரி கேரள முதலமைச்சர் சதீசன் தமிழ்நாடு அரசுக்கு கடிதம் எழுதியுள்ளார். தற்போது கன்னியாகுமரி, நெல்லை, தென்காசி உள்ளிட்ட மாவட்டங்களில் இருந்து கேரளாவுக்கு கனிம வளங்கள் கொண்டு செல்லப்படுவதில்லை. இதனால் தங்கள் வாழ்வாதாரம் பாதிக்கப்படுவதாக தமிழகத்திலும் கேரளாவிலும் போராட்டங்களும் வெடித்துள்ளது.

    Advertisement

    வேல்முருகன்

    இந்த நிலையில்தமிழ்நாடு, கேரளாவின் கல்குவாரியா? இயற்கை வளங்கள், கார்ப்பரேட்டுகளின் இலாபத்திற்கானதா? என தமிழக வாழ்வுரிமைக்கட்சித் தலைவர் வேல்முருகன் கேள்வி எழுப்பியுள்ளார். இதுதொடர்பாக அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில்," தமிழ்நாட்டில் இருந்து பிற மாநிலங்களுக்கு கனிம வளங்களை எடுத்துச் செல்வதற்கு விதிக்கப்பட்டுள்ள கட்டுப்பாடுகளில் தளர்வு வழங்குமாறு கேரள முதலமைச்சர் தமிழ்நாடு முதலமைச்சருக்கு கடிதம் எழுதியிருப்பது, தமிழ்நாட்டின் இயற்கை வளங்களை மீண்டும் எல்லைத் தாண்டிச் சுரண்ட அனுமதி கோரும் முயற்சியாகவே இருக்கிறது.

    ஜல்லி, எம் சாண்ட்

    கேரள அரசு, தேசிய நெடுஞ்சாலை மற்றும் விழிஞ்சம் துறைமுகம் உள்ளிட்ட முக்கிய கட்டுமானப் பணிகளுக்கு தமிழ்நாட்டின் கல், ஜல்லி உள்ளிட்ட கனிம வளங்கள் அவசியம் எனக் கூறி தளர்வு கோரியுள்ளது. கேரளா தனது இயற்கை வளங்களை பாதுகாப்பதில் கடுமையான நிலைப்பாட்டை கடைப்பிடிக்கிறது.

    Advertisement

    கேரள அரசு

    தன் மாநிலத்தின் மலைகளை வெட்டி எடுக்க ஒப்பந்தங்கள் போடப்பட்ட பிறகும் வெட்ட அனுமதிக்காமல் பாதுகாக்கும் கேரள அரசு, தமிழ்நாட்டின் மலைகளையும் பாறைகளையும் வெட்டி தனது வளர்ச்சிக்காகப் பயன்படுத்த அனுமதி கேட்பது எந்த வகையிலும் நியாயமல்ல. இதில் கவனிக்க வேண்டிய உண்மை என்னவென்றால், கேரளாவின் விழிஞ்சம் துறைமுகமும், தமிழ்நாட்டின் காட்டுப்பள்ளி துறைமுகமும், நாட்டின் பல விமான நிலையங்களும், அதானி குழுமத்தின் ஒப்பந்த நிர்வாகத்தின் கீழ் செயல்பட்டு வருகின்றன.

    இயற்கை வளங்கள்

    இன்று துறைமுகங்கள், விமான நிலையங்கள், விரைவுச் சாலைகள் என்ற பெயரில் பெருநிறுவனங்களின் இலாபத்திற்காக, இயற்கை வளங்கள் வேகமாகச் சுரண்டப்படும் சூழல் உருவாக்கப்பட்டுள்ளது. தமிழ்நாட்டில் இருந்து வெளியே பிற மாநிலங்களுக்குச் செல்லும் பல்லாயிரக்கணக்கான சுமையுந்து (லாரி) வாகனங்களில் கொண்டு செல்லப்படும் கற்களும், எம் சாண்டும், மணலும் வெறும் கட்டுமானப் பொருட்கள் அல்ல.

    Advertisement

    தமிழக அரசு

    தமிழரின் மலைகள், தமிழரின் நீராதாரங்கள், தமிழரின் சுற்றுச்சூழல் பாதுகாப்பு, தமிழரின் எதிர்கால வாழ்வுரிமை ஆகியவற்றையே சுமந்து செல்கின்றன. உலகமே காலநிலை மாற்றம், எல் நினோ போன்ற இயற்கைப் பேரிடர்களால் அச்சமடைந்து வரும் இந்தக் காலகட்டத்தில், இயற்கை வளங்களை விற்று வளர்ச்சி என்ற மாயையை உருவாக்காமல், அவற்றைப் பாதுகாப்பதே உண்மையான முன்னேற்றமாகும். எனவே, தமிழக அரசு தற்போது எடுத்துள்ள கனிம வளப் போக்குவரத்து கட்டுப்பாட்டு முடிவில் எந்தவித தளர்வும் அளிக்கக் கூடாது.

    தமிழக வாழ்வுரிமைக் கட்சி

    அதுமட்டுமல்லாமல், தமிழ்நாட்டின் கனிம வளங்கள் தமிழ்நாட்டு மக்களின் தேவைக்கே பயன்படுத்தப்படும். அண்டை மாநிலங்களின் கட்டுமானங்களுக்கோ, பெருநிறுவனங்களின் இலாபத்திற்கோ, வெளிநாடுகளுக்கோ தமிழ்நாட்டின் இயற்கை வளங்கள் வழங்கப்பட மாட்டாது என்ற, உறுதியான கொள்கை அறிவிப்பைத் தமிழக அரசு வெளியிட வேண்டும் என்று தமிழக வாழ்வுரிமைக் கட்சியின் சார்பில் வலியுறுத்திக் கேட்டுக் கொள்கிறேன்." என கூறியுள்ளார்.

    English Summary

    Velmurugan opposes Kerala's request to ease Tamil Nadu's mineral export restrictions, calling for stronger protection of natural resources.