இடைத்தேர்தல் பிரச்சாரக் குழுவில் எஸ்பி வேலுமணி, சிவி சண்முகம் இல்லை.. அதிமுகவில் சலசலப்பு

  • சென்னை: மதுராந்தகம், தாராபுரம் இடைத்தேர்தல் பிரச்சாரக் குழுவில் அதிமுக அதிருப்தி அணியைச் சேர்ந்த எஸ்.பி.வேலுமணி, சி.வி.சண்முகம் உள்ளிட்டோருக்கு இடம் அளிக்கப்படாதது, அதிமுகவில் சலசலப்பை ஏற்படுத்தியுள்ளது. தாராபுரத்திற்கு எஸ்பி வேலுமணியும், மதுராந்தகத்தில் சிவி சண்முகமும் அதிமுகவுக்கு பெரிய அளவில் உதவுவார்கள் எனக் கருதப்படும் சூழலில் இவர்கள் புறக்கணிக்கப்பட்டுள்ளது அதிமுகவினர் இடையே அதிருப்தியை ஏற்படுத்தியுள்ளது.

    Advertisement

    தமிழகத்தில் 7 சட்டப்பேரவைத் தொகுதிகள் காலியாக இருக்கும் நிலையில், 5 தொகுதிகளில் தேர்தல் வழக்குகள் இருந்த காரணத்தால், மதுராந்தகம் (தனி) மற்றும் தாராபுரம் (தனி) சட்டப்பேரவைத் தொகுதிகளுக்கு மட்டும் வரும் அக்டோபர் 6 ஆம் தேதி இடைத்தேர்தல் நடத்தப்படுவதாக தேர்தல் ஆணையம் அறிவித்துள்ளது.

    Advertisement

    தமிழகத்தில் அக்டோபர் 6-ஆம் தேதி மதுராந்தகம் (தனி) மற்றும் தாராபுரம் (தனி) ஆகிய 2 தொகுதிகளுக்கும் இடைத்தேர்தல் நடைபெறுகிறது. இரு தொகுதிகளிலும் திமுக, தவெக, அதிமுக ஆகிய 3 முக்கிய கட்சிகள் சார்பில் வேட்பாளர்கள் அறிவிக்கப்பட்டுள்ளனர்.

    கடந்த சட்டமன்ற தேர்தலில் அதிமுக சார்பில் வெற்றி பெற்று, பின்னர் சட்டப்பேரவை உறுப்பினர் பதவியை ராஜிநாமா செய்துவிட்டு, தவெகவில் இணைந்த மதுராந்தகம் மரகதம் குமரவேல், தாராபுரம் சத்தியபாமா ஆகிய இருவருமே தவெக சார்பில் வேட்பாளர்களாக அறிவிக்கப்பட்டுள்ளனர்.

    மதுராந்தகம் தொகுதியில் எழும்பூர் முன்னாள் சட்டமன்ற உறுப்பினரும், திமுக சட்டத்துறை இணைச் செயலாளருமான வழக்கறிஞர் ஐ. பரந்தாமன் வேட்பாளராக அறிவிக்கப்பட்டுள்ளார். தாராபுரம் தொகுதியில் வழக்கறிஞர் எஸ். சுகன்யா போட்டியிடுவார் என்று திமுக அறிவித்துள்ளது. அதிமுக சார்பில் மதுராந்தகம் தொகுதியில் கணிதா சம்பத், தாராபுரம் தொகுதியில் பானுமதி ஆகியோர் வேட்பாளர்களாக அறிவிக்கப்பட்டுள்ளனர்.

    Advertisement

    இடைத்தேர்தல் வேட்பாளர்களை அறிவித்துள்ள முக்கிய கட்சிகள் தேர்தல் பிரச்சாரத்திற்கு குழு அமைக்கும் பணியை மேற்கொண்டு வருகின்றன. அதன்படி அதிமுகவில் இடைத்தேர்தல் பிரச்சாரங்களை ஒருங்கிணைக்கும் குழுவில் கே.பி.முனுசாமி, ஓ.எஸ்.மணியன், திண்டுக்கல் சீனிவாசன், அக்ரி கிருஷ்ணமூர்த்தி ஆகியோர் இடம்பெற்றுள்ளனர்.

    இந்தக் குழுவில், எடப்பாடி பழனிசாமி மீது அதிருப்தியில் இருக்கும் எஸ்பி வேலுமணி, சி.வி.சண்முகம், நத்தம் விஸ்வநாதன் உள்ளிட்டோர் இடம் பெறாதது, அதிமுகவின் ஒரு பிரிவினரிடையே வருத்தத்தை ஏற்படுத்தியுள்ளது.

    வட தமிழகத்தில் அதிமுகவில் செல்வாக்கோடு திகழும் சி.வி.சண்முகத்தை மதுராந்தகம் தொகுதி இடைத்தேர்தல் பணிகளுக்காக களமிறக்கவேண்டும் என அதிமுகவினர் எதிர்பார்க்கின்றனர். அதேபோன்று கொங்கு பகுதியான தாராபுரத்தில் முன்னாள் அமைச்சர் எஸ்பி வேலுமணி களப்பணியாற்றினால் கூடுதல் பலம் என்றும் அதிமுகவினர் கருதுகின்றனர்.

    Advertisement

    ஆனால், எஸ்பி வேலுமணி, சிவி சண்முகம் உள்ளிட்டோர் எடப்பாடி பழனிசாமியின் ஆலோசனை கூட்டங்களைப் புறக்கணித்து வருகின்றனர். எடப்பாடி பழனிசாமியும் இறங்கிச் செல்வதாக இல்லை.

    இடைத்தேர்தலில் தாராபுரத்திற்கு எஸ்பி வேலுமணியும், மதுராந்தகத்தில் சிவி சண்முகமும் அதிமுகவுக்கு பெரிய அளவில் உதவுவார்கள் எனக் கருதப்படும் சூழலில் இவர்கள் புறக்கணிக்கப்பட்டுள்ளது அதிமுகவினர் இடையே அதிருப்தியை ஏற்படுத்தியுள்ளது.

    English Summary

    The exclusion of SP Velumani and CV Shanmugam—key figures from the AIADMK's dissident faction—from the by-election campaign committees for Maduranthakam and Dharapuram has caused a stir within the party. Their sidelining has sparked dissatisfaction among AIADMK cadres.