ஐஏஎஸ் அதிகாரிகளுக்கு மட்டும் ஏன் இந்த சிறப்பு சலுகை? கேள்விகளால் துளைத்த சென்னை ஐகோர்ட் நீதிபதி

  • சென்னை: முன்னாள் அமைச்சர் வேலுமணிக்கு எதிரான டெண்டர் முறைகேடு வழக்கில் உயர்நீதிமன்றம் சரமாரியாக கேள்வி எழுப்பியுள்ளது. வழக்கு தொடர அனுமதி அளிக்கும் விஷயத்தில் குற்றம் சாட்டப்பட்ட 2 ஐஏஎஸ் அதிகாரிகளிடம் விளக்கம் கேட்டது ஏன்? ஐஏஎஸ் அதிகாரிகளுக்கு மட்டும் ஏன் இந்த சிறப்பு சலுகை? என சென்னை ஐகோர்ட் கேள்வி எழுப்பி உள்ளது.

    Advertisement

    அதிமுக ஆட்சியில், உள்ளாட்சித் துறை அமைச்சராக எஸ்.பி.வேலுமணி பதவி வகித்தார். அப்போது சென்னை, கோவை மாநகராட்சிகளில், சாலைப் பணிகள் மேற்கொள்ள எஸ்பி வேலுமணி உறவினர்கள், நெருக்கமானவர்களுக்கு டெண்டர் வழங்கியதில், 98.25 கோடி ரூபாய் அளவுக்கு முறைகேடு நடந்ததாக, திமுக தரப்பில் லஞ்ச ஒழிப்புத் துறையில் புகார் அளிக்கப்பட்டது.

    Advertisement

    இதையடுத்து வேலுமணி உள்ளிட்டோருக்கு எதிராக வழக்குப் பதிவு செய்யப்பட்டது. இந்த வழக்கில், குற்றப்பத்திரிக்கை தாக்கல் செய்யும்படி பிறப்பித்த உத்தரவை அமல்படுத்தவில்லை என லஞ்ச ஒழிப்புத்துறைக்கு எதிராக, அறப்போர் இயக்கம் சார்பில், நீதிமன்ற அவமதிப்பு வழக்கு சென்னை உயர்நீதிமன்றத்தில் தாக்கல் செய்யப்பட்டது. இந்த வழக்கு, நீதிபதி என்.ஆனந்த் வெங்கடேஷ் முன் சமீபத்தில் விசாரணைக்கு வந்தது.

    அப்போது, லஞ்ச ஒழிப்புத் துறை தரப்பில் வழக்கறிஞர் அருண் அன்புமணி ஆஜராகி, "வழக்கில் குற்றம் சாட்டப்பட்டுள்ள இரண்டு ஐஏஎஸ் அதிகாரிகளுக்கு எதிராக வழக்கு தொடர அனுமதி கோரி, மத்திய அரசுக்கு கடிதம் அனுப்பப்பட்டது. அதில், சில விளக்கங்களை கேட்டதை அடுத்து, இது சம்பந்தமாக பிப்ரவரி 27 ஆம் தேதி விளக்கம் அளித்து, பொதுத் துறை செயலருக்கு கடிதம் அனுப்பப்பட்டு உள்ளது" என்றார்.

    Advertisement

    இதையடுத்து நீதிபதி, 'கடந்த பிப்ரவரி 27 ஆம் தேதி முதல் இந்த விவகாரம், பொதுத்துறை செயலரிடம் நிலுவையில் உள்ளது. அதுகுறித்து, பொதுத்துறை தரப்பில் எந்த விளக்கமும் இல்லை. கடந்த ஐந்து மாதங்களாக பொதுத்துறை செயலர், இந்த கோப்புகள் நிலுவையில் வைத்தது ஏன் என அப்போது பொதுத்துறை செயலராக பதவி வகித்த ஓய்வுபெற்ற ஐஏஎஸ் அதிகாரி ரீட்டா ஹரிஷ் தாக்கர், 'வீடியோ கான்பரன்ஸ்' வாயிலாக ஆஜராகி விளக்கம் அளிக்க உத்தரவிட்டார்.

    இதையடுத்து, கோப்புகளை கடந்த பிப்ரவரி மாதத்தில் இருந்து நிலுவையில் வைத்திருந்தது ஏன் என்பது குறித்து, தற்போதுள்ள பொதுத்துறை செயலரும் மனு தாக்கல் செய்ய வேண்டும் என தெரிவித்த நீதிபதி, விசாரணையை ஆகஸ்ட் 3 ஆம் தேதிக்கு தள்ளிவைத்தார்.

    Advertisement

    இந்த வழக்கு இன்று மீண்டும் நீதிபதி ஆனந்த் வெங்கடேஷ் விசாரணைக்கு வந்தது. அப்போது லஞ்ச ஒழிப்புத்துறை சார்பில் ஆஜரான தலைமை குற்றவியல் வழக்கறிஞர் ஜான் சத்யன், "ஐஏஎஸ் அதிகாரிகளுக்கு எதிராக வழக்கு தொடர்வது தொடர்பான ஆவணங்கள் ஜூலை 22 ஆம் தேதி மத்திய அரசுக்கு அனுப்பி வைக்கப்பட்டது" என விளக்கம் அளித்தார்.

    இதனைத் தொடர்ந்து நீதிபதி ஆனந்த வெங்கடேஷ்," வழக்கு தொடர அனுமதி அளிக்கும் விஷயத்தில் குற்றம் சாட்டப்பட்ட ஐஏஎஸ் அதிகாரிகளிடம் விளக்கம் கேட்டது ஏன்? இது போன்ற நடைமுறையை இதுவரை கேள்விப்பட்டது இல்லை. ஐஏஎஸ் அதிகாரிகளுக்கு மட்டும் ஏன் இந்த சிறப்பு சலுகை? இது போன்ற நடைமுறையை நிறுத்த வேண்டும்" எனக் கூறி வழக்கு விசாரணையை ஆகஸ்ட் 24 ஆம் தேதிக்கு ஒத்திவைத்தார்.

    English Summary

    High Court has raised a barrage of questions regarding the tender irregularities case involving former Minister Velumani. High Court questioned why explanations were sought from the two accused IAS officers regarding the granting of sanction to prosecute them, and asked why such special privilege is extended only to IAS officers.