சென்னை: தமிழ் பத்திரிகைத்துறையின் மூத்த பத்திரிகையாளரும், பல இளம் பத்திரிகையாளர்களுக்கு வழிகாட்டியாக திகழ்ந்தவருமான பெரியசாமி உடல்நலக்குறைவு காரணமாக நேற்று (ஜூன் 22) காலமானார்.
பத்திரிகைத் துறையில் சுமார் 40 ஆண்டுகளுக்கும் மேலான அனுபவம் கொண்ட பெரியசாமி (வயது 70), தமிழ் ஊடக உலகில் தனக்கென ஒரு முத்திரையைப் பதித்தவர். அவர் தனது பத்திரிகைப் பணியை சுதேசமித்திரன் மற்றும் மணிச்சுடர் நாளிதழ்களில் தொடங்கி, பின்னர் சன் தொலைக்காட்சி மற்றும் ஜெயா தொலைக்காட்சி உள்ளிட்ட முன்னணி ஊடக நிறுவனங்களிலும் பணியாற்றியுள்ளார்.
அனைத்து பத்திரிகையாளர்களிடமும் அன்போடு பழகும் பெரியசாமி அவர்கள் இளம் பத்திரிகையாளர்களுக்கு ஆசானாக திகழ்ந்துள்ளார். பெரியசாமி அவர்களை இழந்துவாடும் குடும்பத்தினர் மற்றும் சக பத்திரிகையாளர்களுக்கு சென்னை பத்திரிகையாளர் மன்றம் ஆழ்ந்த இரங்கலைத் தெரிவித்துக் கொள்கிறது. பெரியசாமி அவர்களின் உடல் இறுதி அஞ்சலிக்காக இன்று (23.06.26) மதியம் 2 மணிமுதல் 3 மணிவரை சென்னை பத்திரிகையாளர் மன்றத்தில் வைக்கப்படும் என்று சென்னை பத்திரிகையாளர் மன்றம் சார்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.