'வெற்றிப்பயணம்' திட்டத்தை முதல்வர் விஜய் தொடங்கி வைத்தார்.. எந்தெந்த பேருந்துகளில் பயணிக்கலாம்?

  • சென்னை: தமிழ்நாட்டின் பெரும்பாலான பஸ்களில் பெண்கள் இலவசமாக பயணிக்கும் வகையில் காந்தி ஜெயந்தியை முன்னிட்டு 'வெற்றிப்பயணம்' திட்டம் இன்று தொடங்கப்படுகிறது. சென்னை கோயம்பேட்டில் உள்ள பஸ் நிலையத்தில் தொடங்கி வைத்தார் முதல்வர் விஜய். பெண் பயணி ஒருவருக்கு விலையில்லா டிக்கெட்டை கொடுத்து திட்டத்தை முதல்வர் விஜய் தொடங்கி வைத்தார். இந்த 'வெற்றிப்பயணம்' திட்டத்தில் 84 லட்சம் பேர் பயன்பெறுவார்கள் என்று அரசு அறிவித்துள்ளது.

    Advertisement

    தமிழகத்தில் பெண்களுக்கான கட்டணமில்லா விடியல் பயண திட்டத்தை முன்னாள் முதல்வர் ஸ்டாலின் தலைமையிலான தி.மு.க. அரசு கடந்த 2021ம் ஆண்டு அறிமுகம் செய்தது. இந்த திட்டத்தின்படி, மாநகர மற்றும் நகர்ப்புற சாதாரண அரசு பஸ்களில் மட்டும் பெண்கள் இலவசமாக பயணிக்கிறார்கள். கிராமப்புற பேருந்துகள் எல்லாமே சாதாரண பேருந்துகள் என்பதால் மக்கள் எளிதாக பயணிக்கிறார்கள். ஆனால் நகர்புறங்களில் சாதாரண பேருந்துகள் எண்ணிக்கை மிகமிக குறைவு என்கிற நிலை தான் இப்போது வரை உள்ளது.

    Advertisement

    இந்த சூழலில் கடந்த சட்டசபை தேர்தலின்போது த.வெ.க. தேர்தல் அறிக்கை வெளியிட்டது. அந்த அறிக்கையில், த.வெ.க. ஆட்சி அமையும்போது மகளிர் பயணத்திட்டம் அனைத்து நகர்புற அரசு பஸ்களிலும் விரிவாக்கம் செய்யப்படும் என்று வாக்குறுதி அளிக்கப்பட்டிருந்தது.

    தேர்தலில் வெற்றி பெற்று த.வெ.க. தலைவர் விஜய் தலைமையிலான கூட்டணி அரசு பொறுப்பேற்றுள்ளது , கடந்த ஆகஸ்டு 24-ந்தேதி சட்டசபையில் 110 விதியின் கீழ் அறிவிப்பை வெளியிட்ட முதல்வர் விஜய், தற்போது செயல்படுத்தப்பட்டு வரும் மகளிர் கட்டணமில்லா பயணத் திட்டம் விரிவாக்கப்பட்டு, 'வெற்றிப் பயணம்' என்ற பெயரில், மகாத்மா காந்தி பிறந்த நாளான வரும் அக்டோபர் 2-ந் தேதி முதல் செயல்படுத்தப்படும் என்று அறிவித்தார்.

    Advertisement

    இத்திட்டத்தில் பயன்பெற, வருமான உச்சவரம்பு மற்றும் பயண எண்ணிக்கையில் கட்டுப்பாடுகள் எதுவும் இல்லை என்றும், வெற்றிப் பயணத் திட்டம், இதர சேவைகளிலும் படிப்படியாக விரிவுபடுத்தப்படும் என்றும் முதல்வர் விஜய் தனது அறிவிப்பில் குறிப்பிட்டிருந்தார்.

    இதன் மூலம் மாணவிகள் தொலைதூரத்தில் உள்ள கல்லூரிகளுக்கு செல்ல முடியும் என்றும், பணியிடங்களுக்குச் செல்லவும், மருத்துவம் மற்றும் அத்தியாவசிய சேவைகளுக்காக கட்டணமின்றி பஸ்களில் பயணிக்க முடியும் என்றும் அரசு நம்புகிறது. இத்திட்டத்திற்காக ஆண்டுதோறும் ரூ.6 ஆயிரம் கோடி செலவு ஏற்படும் என்று கணித்துள்ள அரசு, அதற்கான நிதியை ஒதுக்கீடு செய்ய முடிவு செய்துள்ளது.

    Advertisement

    தற்போதைய சூழலில் தமிழ்நாட்டில் உள்ள 7 அரசு போக்குவரத்துக்கழகங்களின் நகர சாதாரண பேருந்துகள் மற்றும் 40 கி.மீ. வரையிலான மலைப்பகுதி சாதாரண பேருந்துகளில் பெண்கள் கட்டணமின்றி பயணம் செய்து வருகின்றனர். ஆனால் வெற்றிப் பயண திட்டத்தின் மூலம் இச்சேவை மாநகர, நகர்ப்பகுதிகளில் இயங்கும் எக்ஸ்பிரஸ், எல்.எஸ்.எஸ்., டீலக்ஸ் அரசு பஸ்கள், புறநகர் சாதாரண அரசு பஸ்கள் மற்றும் 40 கி.மீ.க்கு மேற்பட்ட மலைப்பகுதி சாதாரண அரசு பஸ்களுக்கும் விரிவுபடுத்தப்பட்டுள்ளது. ஒட்டுமொத்தமாக 12,692 பஸ்கள் இத்திட்டத்தின் கீழ் கொண்டு வரப்படுகிறது.

    அதாவது, 7 அரசு போக்குவரத்துக்கழகங்களால் இயக்கப்படும் மொத்தமுள்ள 18,413 பேருந்துகளில், 12,692 பேருந்துகள் (69 சதவீதம்) இந்த திட்டத்திற்கு பயன்படுத்தப்பட உள்ளது. அதுபோல், மொத்தமுள்ள 1 லட்சத்து 94 ஆயிரத்து 649 நடைகளில், 1 லட்சத்து 65 ஆயிரத்து 312 நடைள் (85 சதவீதம்) இந்தத் திட்டத்தில் செயல்படுத்தப்படும். இதன் மூலம் நாளொன்றுக்கு சுமார் 84.32 லட்சம் பெண்கள் பயனடைவார்கள் எனறு அரசு நம்புகிறது.

    Advertisement

    வெற்றிப் பயண பேருந்துகளின் மின்னணு பயணச்சீட்டு எந்திரங்களுடனான (இ.டி.எம்.) இணைப்பு பணி ஏற்கனவே நிறைவு பெற்றது. கடந்த மாத இறுதியில் சோதனை மற்றும் சரிபார்ப்பு பணிகளும் நடந்து முடிந்துவிட்டது கடந்த ஆகஸ்டு 27-ந் தேதியன்று சோதனை ஓட்டமும் நடந்தது.
    இந்த நிலையில் இன்று (வெள்ளிக்கிழமை) இந்த திட்டத்தை முதல்வர் விஜய், சென்னை கோயம்பேட்டில் உள்ள பஸ் நிலையத்தில் காலை 10 மணியளவில் தொடங்கி வைத்தார். விலையில்லா டிக்கெட்டை மகளிருக்கு கொடுத்து முதல்வர் தொடங்கி வைத்துள்ளார். தமிழகம் முழுவதும் பெண்கள் இந்த திட்டத்தின் மூலம் இலவச அரசு பஸ் பயணம் இன்று முதல் மேற்கொள்ள முடியும்.

    English Summary

    To mark Gandhi Jayanti, the 'Vettri Payanam' (Journey of Success) scheme—enabling women to travel for free on most buses in Tamil Nadu—is being launched today. Chief Minister Vijay will inaugurate the scheme at the Koyambedu bus terminus in Chennai around 10:00 AM. The government has announced that 8.4 million people will benefit from this initiative.