சென்னை: திமுக முன்னாள் அமைச்சர் கே.என். நேரு, அவரது சகோதரர் கே.என்.ரவிச்தந்திரன் ஆகியோர் தொடர்புடைய இடங்களில் லஞ்ச ஒழிப்புத் துறை சோதனை நடத்தி வருகிறது.
சென்னையில் அடையாறு, ஆர்.ஏ.புரம், அண்ணாநகர், திருவான்மியூர் உள்பட 10-க்கும் மேற்பட்ட இடங்களில் லஞ்ச ஒழிப்புத் துறை சோதனை நடத்தி வருகிறது.
சட்டவிரோதமாக பல்வேறு நிறுவனங்களை மிரட்டி பார்ட்டி ஃபண்ட் வாங்கியதாக குற்றச்சாட்டின் அடிப்படையில் லஞ்ச ஒழிப்புத் துறையினர் சோதனை நடத்தி வருவதாக தகவல்கள் வெளியாகியுள்ளன. திருச்சி தில்லை நகரில் 5ஆவது குறுக்குத் தெருவில் இருக்கும் கே.என்.நேருவுக்கு சொந்தமான வீட்டில் லஞ்ச ஒழிப்புத் துறை சோதனை நடத்தி வருகிறது. காலை 7 மணி முதலே லஞ்ச ஒழிப்புத் துறை சோதனை நடைபெற்று வருகிறது. லஞ்ச ஒழிப்புத் துறை கண்காணிப்பாளர் மணிகண்டன் தலைமையில் 10 பேர் கொண்ட குழுவினர் இந்த சோதனையில் ஈடுபட்டு வருகிறார்கள். சென்னை, திருச்சி, கோவை என 19-க்கும் மேற்பட்ட இடங்களில் லஞ்ச ஒழிப்புத் துறை சோதனை நடத்தப்பட்டு வருகிறது. இந்த தகவலறிந்த மாநகராட்சி மேயர் அன்பழகன், திமுக பிரமுகர்கள், திமுக முன்னாள் அமைச்சர் அன்பில் மகேஷ் உள்ளிட்டோர் கே.என்.நேருவின் வீட்டின் முன் குவிந்துள்ளனர். இதையடுத்து சம்பவ இடத்திற்கு மாநகர போலீஸ் துணை கமிஷனர், உதவி கமிஷனர் உள்ளிட்ட 30-க்கும் மேற்பட்ட காவல் துறையினர் வரவழைக்கப்பட்டு பாதுகாப்பு பணியில் ஈடுபடுத்தப்பட்டுள்ளனர். தொடர்ந்து கே.என். நேரு வீட்டில் இருந்து வெளியே வந்த போலீஸார் அங்கிருக்கும் கட்சியினரை அப்புறப்படுத்தும் முயற்சியில் ஈடுபட்டு வருகிறார்கள். திருச்சியில் கே.என்.நேரு உள்பட தமிழகம் முழுவதும் 19 இடங்களில் லஞ்ச ஒழிப்புத் துறை ரெய்டு நடத்தப்பட்டு வருகிறது. செந்தில் பாலாஜி, எ.வ.வேலு ஆகியோரை தொடர்ந்து கே.என்.நேரு வீட்டிலும் லஞ்ச ஒழிப்புத் துறை சோதனை நடத்தப்படுவது திமுக தலைமைக்கு அதிர்ச்சியை கொடுத்துள்ளது.