லண்டனில் முதல்வர் விஜய் - நடிகர் அஜித் சந்திப்பா? ரசிகர்கள் இடையே எகிறும் எதிர்பார்ப்பு

  • சென்னை: தொழில் முதலீடுகளை ஈர்க்க லண்டன் செல்லும் முதல்வர் விஜய் சில்வர்ஸ்டோனில் நடிகர் அஜித் பங்கேற்கும் கார் பந்தயத்தை நேரில் கண்டு ரசிக்க உள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. இது விஜய் - அஜித் ரசிகர்களிடையே பெரும் எதிர்பார்ப்பை ஏற்படுத்தியுள்ளது.

    Advertisement

    தமிழக முதல்வர் விஜய் வரும் செப்டம்பர் 10 ஆம் தேதி முதல் 16 ஆம் தேதி வரை லண்டன் பயணம் செல்ல திட்டமிட்டு இருக்கிறார். தொழில் முதலீடுகளை ஈர்ப்பதற்காக முதல்வர் விஜய் லண்டன் செல்ல உள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. இது தொடர்பான அதிகாரப்பூர்வ தகவல் இதுவரை வெளியாகாவிட்டாலும் விரைவில் அறிவிப்பு வெளியாகக் கூடும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

    Advertisement

    அஜித்தை சந்திக்கும் விஜய்

    லண்டன் செல்லும் முதல்வர் விஜய் அங்கு பல்வேறு நிகழ்ச்சிகளிலும் பங்கேற்க திட்டமிட்டு இருக்கிறார். அந்த வகையில், நடிகர் அஜித்தின் கார் பந்தயத்தை விஜய் நேரில் பார்க்க இருப்பதாகவும் தகவல் வெளியாகியுள்ளது. லண்டனில் சில்வர்ஸ்டோன் பந்தயத்தில் அஜித் குமாரின் ரேசிங் கம்பெனி சார்பில் அஜித் பந்தயத்தில் பங்கேற்க இருக்கிறார். இந்த கார் பந்தய நிகழ்ச்சி 11 மற்றும் 12 ஆம் தேதிகளில் நடைபெற உள்ளது.

    இந்த கார் பந்தயத்தை தமிழக முதல்வர் விஜய் நேரில் சென்று பார்க்க கூடும் என்று ரசிகர்கள் மத்தியில் எதிர்பார்ப்பு எழுந்துள்ளது. பந்தயத்தின் போது அஜித்தை நேரில் சந்தித்து முதல்வர் விஜய் வாழ்த்து தெரிவிக்க உள்ளாரா? என்ற எதிர்பார்ப்பும் ஏற்பட்டுள்ளது. தமிழ் திரையுலகின் உச்ச நட்சத்திரங்களாக சம காலத்தில் விஜய் - அஜித் இருந்து வந்தனர். தற்போது விஜய், சினிமாவுக்கு முழுக்கு போட்டுவிட்டு முழு நேர அரசியலில் களம் இறங்கியுள்ளார்.

    Advertisement

    கார் பந்தயத்தில் அஜித்

    முதல்வராகவும் விஜய் பொறுப்பேற்று இருக்கும் நிலையில், அஜித் தொடர்ந்து படங்களில் நடித்து வருகிறார். பட வேலைகளுக்கு நடுவே கார் பந்தயத்திலும் அஜித் தீவிரமாக பங்கேற்று வருகிறார். சமீபத்தில் சென்னையில் மோட்டார் ஸ்போர்ட்ஸ் சிட்டி அமைக்கப்படும் என்று முதல்வர் விஜய் அறிவித்து இருந்தார். அப்போது, முதல்வர் விஜய்க்கு அஜித் நன்றி தெரிவித்து இருந்தார்.

    இந்த சூழலிதான், விஜய் - அஜித் சந்திப்பு லண்டனில் நடைபெறலாம் என்று எழுந்து இருக்கக் கூடிய தகவல் இருவரின் ரசிகர்களையும் உற்சாகத்தில் ஆழ்த்தியுள்ளது. தமிழக முதல்வர் விஜய் தனது லண்டன் பயணத்தில் தொழில் நிறுவனங்களின் தலைவர்களை சந்திப்பது, அங்கு வசிக்கும் தமிழ் சமூகத்தினருடனான சந்திப்பு உள்ளிட்ட நிகழ்ச்சிகளிலும் பங்கேற்க உள்ளதாகவும் கூறப்படுகிறது.

    Advertisement

    மலேசிய பிரதமர் தமிழகம் வருகை

    இது ஒருபக்கம் இருக்க மலேசிய பிரதமர் அன்வர் இப்ராஹிம் பிரிக்ஸ் மாநாட்டில் பங்கேற்க இந்தியா வருகை தருகிறார். அவர் வரும் 13 ஆம் தேதி சென்னைக்கு வருகை தர திட்டமிட்டு இருப்பதாகவும் முதல்வர் விஜய்யை இந்த பயணத்தின் போது சந்திக்க விரும்புவதாகவும் கூறப்படுகிறது. இதற்காக முதல்வர் விஜய்யின் வெளிநாடு பயணம் தள்ளிப்போகலாம் என்று மற்றொரு தகவல் வெளியாகிவருகிறது. எனவே முதல்வர் விஜய்யின் வெளிநாடு பயணம் குறித்து தமிழக அரசு தரப்பில் அதிகாரப்பூர்வ அறிவிப்பு வெளியானவே பிறகே உறுதியாக தெரியவரும்.

    English Summary

    Vijay Ajith: Reports indicate that Chief Minister Vijay, who is traveling to London to attract industrial investments, plans to personally watch the car race at Silverstone in which actor Ajith is participating. This has generated great anticipation among the fans of both Vijay and Ajith.