சென்னை: மத்திய உள்துறை அமைச்சர் அமித்ஷா தலைமையில் சென்னையில் இன்று தென்மாநில முதல்வர்கள் மாநாடு தொடங்கி நடைபெற உள்ளது. இந்த மாநாடு தொடங்குவதற்கு முன்பாகவே மாநாட்டின் துணை தலைவராக முதல்வர் விஜய் அறிவிக்கப்பட்டுள்ளார்.
மத்திய உள்துறை அமைச்சர் அமித்ஷா தலைமையில் தென்மாநில முதல்வர்கள் மாநாடு இன்று தொடங்கி நாளை வரை நடைபெற. உள்ளது. இந்த மாநாட்டின் தலைவராக அமித்ஷா இருக்கிறார். இந்த மாநாட்டில் தமிழ்நாடு முதல்வர் விஜய், கர்நாடகா முதல்வர் டிகே சிவக்குமார், ஆந்திர முதல்வர் சந்திரபாபு நாயுடு, கேரளா முதல்வர் விடி சதீசன், தெலுங்கானா முதல்வர் ரேவந்த் ரெட்டி, புதுச்சேரி யூனியன் பிரதேச பிரதிநிதிகள் பங்கேற்க உள்ளனர். இந்தமாநாட்டில் பங்கேற்க அமித்ஷா இன்று மாலை 6 மணிக்கு சென்னை வருகிறார். அதன்பிறகு சென்னை விமான நிலையத்தில் இருந்து காரில் சென்னையை அடுத்த கோவளம் நட்சத்திர விடுதிக்கு செல்ல உள்ளார். அங்கு அவர் தங்க உள்ளார். அதன்பிறகு இரவு 9 மணிக்கு அனைத்து மாநில முதல்வர்களுடன், அமித்ஷா இரவு உணவு சாப்பிடுகிறார். அதன்பிறகு நாளை காலை 10 மணிக்கு தனியார் ஹோட்டலில் தென்மாநில முதல்வர்களின் மாநாடு தொடங்கி மாலை 3 மணி வரை நடைபெற உள்ளது. இந்த மாநாட்டில் தென்மாநில பிரச்சனைகள் பற்றி விரிவாக விவாதிக்கப்பட வாய்ப்புள்ளது. தென்மாநிலங்களின் பாதுகாப்பு, நதி நீர் பிரச்சனைகள் மற்றும் லோக்சபா தொகுதி மறுவரையறை உள்ளிட்ட பல்வேறு அம்சங்கள் பற்றி விவாதிக்கப்பட வாய்ப்புள்ளதாக கூறப்படுகிறது. இந்நிலையில் தான் தற்போது புதிய அறிவிப்பு வெளியாகி உள்ளது. மாநாட்டின் தலைவராக அமித்ஷா உள்ள நிலையில் துணை தலைவர் பொறுப்பு முதல்வர் விஜய் வசம் உள்ளது. பொதுவாக எந்த மாநிலத்தில் மாநாடு நடக்கிறதோ அந்த மாநில முதல்வருக்கு இந்த பொறுப்பு வழங்கப்படுவது வழக்கமான ஒன்றாக உள்ளது. தற்போது சென்னையை அடுத்த கோவளத்தில் மாநாடு நடைபெற உள்ளதால் முதல்வர் விஜய்க்கு துணை தலைவர் பொறுப்பு வழங்கப்பட்டுள்ளது. இந்த மாநாட்டையொட்டி கோவளத்தில் அமித்ஷா, முதல்வர்கள் தங்கும் ஹோட்டல் தீவிர கண்காணிப்புக்குள் கொண்டு வரப்பட்டுள்ளது. ஹோட்டலை சுற்றி 3 அடுக்கு போலீஸ் பாதுகாப்பு போடப்பட்டுள்ளது. தீவிர சோதனைக்கு பிறகே ஒவ்வொருவரும் ஹோட்டலுக்குள் அனுமதிக்கப்பட்டு வருகின்றனர் என்பது குறிப்பிடத்தக்கது.