சென்னை: முதல்வர் விஜய் தலைமையிலான தமிழக அமைச்சரவை நாளை மறுநாள் விரிவாக்கம் செய்யப்பட உள்ளதாக தகவல் வெளியாகி இருக்கிறது. நாளை கேரளாவில் இருந்து ஆளுநர் அர்லேகர் சென்னை வரவிருக்கும் சூழலில், காங்கிரஸ் கட்சியைச் சேர்ந்த 2 பேர் அமைச்சராக பொறுப்பேற்க உள்ளது தெரிய வந்துள்ளது.
மே 10ஆம் தேதி தமிழ்நாட்டின் முதல்வராக விஜய் பதவியேற்றார். அவருடன் சேர்ந்து 9 அமைச்சர்கள் பொறுப்பேற்று கொண்டனர். ஆனால் அவர்களுக்கு இலாகா ஒதுக்கவே சுமார் ஒரு வாரமாகிவிட்டது. இதன்பின் அந்தந்த துறையின் அமைச்சர்கள் பொறுப்பேற்று கொண்டனர். ஆனால் இன்னும் போக்குவரத்து, பத்திரப்பதிவு, இந்து சமய அறநிலையத்துறை உள்ளிட்ட துறைகளுக்கு அமைச்சர்கள் நியமனம் செய்யப்படவில்லை.
இதனால் தவெக அமைச்சரவை விரிவாக்கம் செய்யப்படும் என்று எதிர்பார்க்கப்பட்டது. அமைச்சரவையில் இடம்பெற தவெகவினர் பலரும் காய்களை நகர்த்தி வருகின்றனர். சென்னையில் இருந்து மட்டும் புஸ்ஸி ஆனந்த், ஆதவ் அர்ஜுனா, ராஜ்மோகன் உள்ளிட்டோர் அமைச்சரவையில் இடம்பெற்றுள்ளனர். இதனால் மற்ற மாவட்ட எம்எல்ஏ-க்கள் பலரும் அமைச்சராக வேண்டும் என்று தீவிரமாக இருக்கின்றனர். இன்னொரு பக்கம் காங்கிரஸ் கட்சிக்கு 2 அமைச்சரவை ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளதாக தெரிய வந்தது. இந்த நிலையில் தமிழக பொறுப்பு ஆளுநர் ராஜேந்திர அர்லேகர் நாளை சென்னை வரவிருக்கிறார். இதன்பின் நாளை மறுநாள் தமிழக அமைச்சரவை விரிவாக்கம் செய்யப்பட உள்ளது. காங்கிரஸ் கட்சியின் ராஜேஷ் குமார் மற்றும் விஸ்வநாதன் ஆகிய இருவருக்கும் அமைச்சர் பதவி அளிக்கப்படும் என்று கூறப்படுகிறது. இவர்களுக்கு என்ன இலாகா ஒதுக்கப்படும் என்பது தொடர்பாக எந்த தகவலும் இல்லை. மே 21ஆம் தேதி முன்னாள் பிரதமர் ராஜீவ் காந்தி மறைந்த நாளாகும். அன்றைய தினம் காங்கிரஸ் கட்சியினர் அமைச்சர்களாக பொறுப்பேற்க இருக்கின்றனர். அதேபோல் 67 ஆண்டுகளுக்கு பின் காங்கிரஸ் கட்சி முதல்முறையாக தமிழக அமைச்சரவையில் இடம்பெற இருக்கிறது. காங்கிரஸ் கட்சிக்கு இது மட்டுமல்லாமல், அடுத்த ராஜ்ய சபா தேர்தலில் ஒரு எம்பி பதவியும் கொடுக்க முதல்வர் விஜய் ஒப்புக் கொண்டுள்ளதாக சொல்லப்படுகிறது. ஏற்கனவே 2 மாதங்களுக்கு முன் நடந்த ராஜ்ய சபா தேர்தலில் திமுகவிடம் ஒரு எம்பியை காங்கிரஸ் கட்சி பெற்றுக் கொண்டது. இதனால் தமிழ்நாட்டில் காங்கிரஸ் கட்சியின் செல்வாக்கு உயர்ந்து வருவதாக அக்கட்சியினர் கூறுகின்றனர்.