சென்னை: தமிழகத்தில் மகளிர் நலன் தொடர்பான முக்கிய திட்டங்களை விரிவுபடுத்துவது குறித்து முதல்வர் விஜய் தொடர்ந்து உயர்மட்ட ஆலோசனைகளை நடத்தி வரும் நிலையில், தற்போது அனைத்து அரசு பேருந்துகளிலும் மகளிருக்கு இலவச பயண வசதியை விரிவுபடுத்துவது தொடர்பாக தலைமைச் செயலகத்தில் முக்கிய ஆலோசனை நடைபெற்றுள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன. மேலும் விஜய் பிறந்தநாளன்று மகளிரி உரிமைத் தொகை விரிவாக்கம் தொடர்பான தகவலும் இடம்பெறலாம் என சொல்லப்படுகிறது.
தமிழக போக்குவரத்துத் துறையின் செயல்பாடுகள் குறித்து முதல்வர் விஜய் தலைமையில் நேற்று நடைபெற்ற ஆய்வுக் கூட்டத்தில், அரசு போக்குவரத்துக் கழகங்களின் தற்போதைய நிலை, பயணிகள் பயன்பாடு, உள்ளிட்ட பல்வேறு அம்சங்கள் குறித்து விரிவாக விவாதிக்கப்பட்டதாக கூறப்படுகிறது.
தற்போது தமிழகத்தில் போக்குவரத்துத் துறையின் கீழ் இயங்கும் எட்டு அரசு போக்குவரத்துக் கழகங்கள் மூலம் 21 ஆயிரத்திற்கும் அதிகமான பேருந்துகள் இயக்கப்பட்டு வருகின்றன. தினசரி சுமார் 2 கோடிக்கும் அதிகமான மக்கள் அரசு பேருந்துகளை பயன்படுத்தி வருவதாக அதிகாரிகள் தெரிவித்துள்ளனர். இந்த பயணிகளில் பெரும்பாலானோர் பெண்கள் என்பதும், குறிப்பாக நகரப் பேருந்துகளில் செயல்படுத்தப்பட்டுள்ள இலவச பயணத் திட்டம் பெண்கள் மத்தியில் நல்ல வரவேற்பைப் பெற்றிருப்பதும் ஆலோசனையில் எடுத்துக்கூறப்பட்டதாக தகவல்கள் தெரிவிக்கின்றன. தற்போது மாநகர மற்றும் நகரப் பேருந்துகளில் மட்டுமே நடைமுறையில் உள்ள மகளிர் இலவச பயணத் திட்டத்தை, மாவட்டங்களுக்கு இடையேயான அரசு பேருந்துகள் உள்ளிட்ட அனைத்து அரசு பேருந்துகளுக்கும் விரிவுபடுத்த முடியுமா என்பது குறித்து அதிகாரிகளிடம் முதல்வர் விஜய் கருத்துக் கேட்டதாக கூறப்படுகிறது. இந்த திட்டம் விரிவுபடுத்தப்பட்டால் பெண்களின் பயணச் செலவு கணிசமாக குறையும். குறிப்பாக கிராமப்புற மற்றும் நடுத்தர வர்க்க குடும்பங்களைச் சேர்ந்த பெண்களுக்கு இது பெரிய அளவில் பயனளிக்கும் என அதிகாரிகள் விளக்கியதாக கூறப்படுகிறது. அதே நேரத்தில், இதனால் அரசு போக்குவரத்துக் கழகங்களுக்கு ஏற்படக்கூடிய கூடுதல் நிதிச் சுமை, அதனை சமாளிக்கும் வழிமுறைகள், அரசின் மானியத் தொகை உயர்வு உள்ளிட்ட அம்சங்களும் ஆலோசிக்கப்பட்டதாக தகவல்கள் வெளியாகியுள்ளன. இந்தக் கூட்டத்தில் மின்சார பேருந்துகளின் எண்ணிக்கையை அதிகரிப்பது குறித்தும் முக்கியமாக விவாதிக்கப்பட்டதாக கூறப்படுகிறது. எரிபொருள் செலவைக் குறைப்பது, சுற்றுச்சூழல் பாதிப்பைக் கட்டுப்படுத்துவது மற்றும் நீண்டகால செலவினத்தை குறைப்பது போன்ற நோக்கங்களுக்காக மின்சார பேருந்துகள் அதிக அளவில் அறிமுகப்படுத்தப்பட வேண்டும் என்ற கருத்து முன்வைக்கப்பட்டதாக தெரிகிறது. இதற்கிடையில், தமிழக வெற்றிக் கழகத்தின் தேர்தல் அறிக்கையில் அறிவித்திருந்த பெண்களுக்கு மாதம் ரூ.2,500 வழங்கும் திட்டம் குறித்தும் முதல்வர் விஜய் தொடர்ந்து ஆலோசனை நடத்தி வருவதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.தேர்தல் வாக்குறுதிகளில் மிகவும் முக்கியமானதாக கருதப்பட்ட இந்த திட்டம் எப்போது நடைமுறைக்கு வரும் என்ற எதிர்பார்ப்பு மாநிலம் முழுவதும் பெண்கள் மத்தியில் அதிகரித்து வருகிறது. அதனால், திட்டத்தை அறிவிப்பது மட்டுமல்லாமல், நீண்ட காலத்திற்கு எந்த தடையும் இல்லாமல் செயல்படுத்துவதற்கான நிதி ஆதாரங்களை உறுதி செய்வதில் அரசு கவனம் செலுத்தி வருவதாக கூறப்படுகிறது. உயர்மட்ட ஆலோசனைகளில் அதிகாரிகள் பல்வேறு நிதி விவரங்களையும் முதல்வரிடம் எடுத்துரைத்ததாக தகவல்கள் தெரிவிக்கின்றன. கடந்த ஆட்சியில் செயல்படுத்தப்பட்ட மகளிர் உரிமைத் தொகை திட்டத்தின் கீழ் சுமார் 1.31 கோடி பெண்களுக்கு மாதந்தோறும் ரூ.1,000 வழங்கப்பட்டு வந்தது. இதற்காக மாதத்திற்கு ரூ.1,310 கோடியும், ஆண்டுக்கு ரூ.15,720 கோடியும் செலவிடப்பட்டதாக அதிகாரிகள் விளக்கியதாக கூறப்படுகிறது. அதே எண்ணிக்கையிலான பெண்களுக்கு மாதம் ரூ.2,500 வழங்க வேண்டுமெனில் மாதந்தோறும் ரூ.3,275 கோடி தேவைப்படும் என்றும், ஆண்டுக்கு சுமார் ரூ.39,300 கோடி செலவாகும் என்றும் அதிகாரிகள் கணக்கீடு அளித்ததாக தகவல்கள் வெளியாகியுள்ளன. இந்த நிதியை எவ்வாறு திரட்டுவது, புதிய வருவாய் வாய்ப்புகள் என்ன, அரசின் செலவினங்களில் எந்தெந்த துறைகளில் சிக்கன நடவடிக்கைகளை மேற்கொள்ளலாம் என்பது குறித்தும் விரிவான ஆலோசனைகள் நடைபெற்று வருவதாக கூறப்படுகிறது. ஒருபுறம் அனைத்து அரசு பேருந்துகளிலும் மகளிருக்கு இலவச பயணத் திட்டத்தை விரிவுபடுத்துவது குறித்து ஆலோசனை நடைபெறுகிறது. மறுபுறம் மாதம் ரூ.2,500 வழங்கும் திட்டத்தையும் விரைவாக செயல்படுத்துவதற்கான பணிகள் நடைபெற்று வருவதாக தகவல்கள் வெளியாகியுள்ளன. பெண்களை மையமாகக் கொண்ட இந்த இரண்டு முக்கிய நலத்திட்டங்களும் அரசின் முன்னுரிமைப் பட்டியலில் இடம்பெற்றுள்ளதால், வரவிருக்கும் விஜய் பிறந்தநாளன்று பல முக்கிய அறிவிப்புகள் வெளியாகலாம் என்ற எதிர்பார்ப்பு உருவாகியுள்ளது.முதல்வர் விஜய்
மகளிர் இலவச பேருந்து
மின்சார பேருந்து
மேலும், அரசு போக்குவரத்துக் கழகங்களில் நிலவி வரும் பணியாளர் பற்றாக்குறை, ஓய்வூதிய நிலுவை, பணியாளர் நல கோரிக்கைகள் உள்ளிட்ட பிரச்சனைகளுக்கும் தீர்வு காண்பது குறித்து அதிகாரிகளுடன் ஆலோசனை நடைபெற்றதாக கூறப்படுகிறது.மாதம் ரூ.2,500
மகளிர் உரிமைத் தொகை
ரூ.39,300 கோடி செலவு
விஜய் பிறந்தநாள்