சென்னை: தமிழக அரசியலில் புதிய பரபரப்பை ஏற்படுத்தும் வகையில், தமிழக அமைச்சரவை விரிவாக்கம் நாளை நடைபெறலாம் என்ற தகவல் வெளியாகியுள்ளது. காங்கிரஸ் கட்சியில் உள்ள இருவருக்கு அமைச்சர் பதவி வழங்கப்படலாம் என சொல்லப்படும் நிலையில், தமிழக வெற்றி கழகத்தைச் சேர்ந்த கல்லாணை, ஈசிஆர் சரவணன், நிலக்கோட்டை அய்யனார் உள்ளிட்டோரும் அமைச்சரவை பட்டியலில் இடம் பெறலாம் என சொல்லப்படுகிறது. அது மட்டும் அல்லாமல் தங்களுக்கு அமைச்சர் பதவி கிடைக்குமா? என ஒவ்வொரு மாவட்டத்திலும் தவெக எம்எல்ஏக்கள் ஆர்வத்துடன் உள்ளனர்.
2026 சட்டப்பேரவைத் தேர்தலில் 108 தொகுதிகளில் வெற்றி பெற்ற தமிழக வெற்றிக் கழகம், காங்கிரஸ், இந்திய கம்யூனிஸ்ட், மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட், விடுதலை சிறுத்தைகள் மற்றும் இந்திய யூனியன் முஸ்லிம் லீக் ஆகிய கட்சிகளின் ஆதரவுடன் ஆட்சியை அமைத்தது.
இதையடுத்து கடந்த மே 10-ஆம் தேதி தமிழக முதல்வராக விஜய் பதவியேற்றார். அவருடன் கே.ஏ. செங்கோட்டையன், ஆனந்த், ஆதவ் அர்ஜுனா, அருண்ராஜ், ராஜ்மோகன், வெங்கட்ரமணன், டி.கே. பிரபு, நிர்மல் குமார் மற்றும் கீர்த்தனா உள்ளிட்ட 9 பேர் அமைச்சர்களாக பொறுப்பேற்றனர். ஆனால் தமிழகத்தில் மொத்தம் முதல்வரைத் தவிர்த்து 33 அமைச்சர்கள் வரை அமைச்சரவையில் இடம்பெற வாய்ப்பு உள்ள நிலையில், தற்போது 9 பேர் மட்டுமே பதவியேற்றிருப்பது அரசியல் மற்றும் நிர்வாக ரீதியாக சிக்கலை ஏற்படுத்தியுள்ளது. குறிப்பாக வேளாண்மை, போக்குவரத்து, சுற்றுலா, சமூகநலம், உயர்கல்வி உள்ளிட்ட பல முக்கிய துறைகளுக்கு இன்னும் அமைச்சர்கள் நியமிக்கப்படாத நிலை தொடர்கிறது. இதனால், நிர்வாக பணிகள் மற்றும் பட்ஜெட் தயாரிப்பு உள்ளிட்ட நடவடிக்கைகளில் தாமதம் ஏற்படுகிறது என்ற விமர்சனங்களும் எழுந்துள்ளன. இந்த சூழலில் அமைச்சரவை விரிவாக்கம் விரைவில் நடைபெறும் என கடந்த சில நாட்களாகவே தகவல்கள் வெளியாகி வந்தன. இந்த நிலையில், ஆளுநர் இன்று சென்னை வருவது முக்கியத்துவம் பெற்றுள்ளது. இதனால் நாளை வியாழக்கிழமை அமைச்சரவை விரிவாக்கம் நடைபெற வாய்ப்பு அதிகம் என தலைமைச் செயலக வட்டாரங்கள் தெரிவிக்கின்றன. அமைச்சரவை விரிவாக்கம் தொடர்பாக முதல்வர் விஜய் ஏற்கனவே மூத்த அமைச்சர்கள் மற்றும் நெருங்கிய ஆலோசகர்களுடன் பல கட்ட ஆலோசனைகள் நடத்தியுள்ளதாக கூறப்படுகிறது. இதில் கூட்டணி கட்சிகளுக்கு இடமளிப்பது தொடர்பாகவும் விவாதிக்கப்பட்டதாக தகவல்கள் வெளியாகியுள்ளன. குறிப்பாக, ஆட்சியை அமைக்க ஆதரவு வழங்கிய காங்கிரஸ் கட்சி அமைச்சரவையில் இடம் கேட்டு தொடர்ந்து வலியுறுத்தி வருகிறது. இதனால் காங்கிரஸ் சார்பில் இரண்டு பேருக்கு அமைச்சரவைப் பொறுப்பு வழங்கப்படலாம் என்ற தகவல்கள் வெளியாகியுள்ளன. அதேநேரத்தில், தவெக சார்பிலேயே மேலும் சில புதிய முகங்களுக்கு அமைச்சரவை வாய்ப்பு கிடைக்கலாம் என கூறப்படுகிறது. தென் மாவட்டங்கள், மேற்குத் தமிழகம் மற்றும் நகர்ப்புற பிரதிநிதித்துவத்தை உறுதிப்படுத்தும் வகையில் அமைச்சரவை அமைப்பு இருக்கும் என அரசியல் வட்டாரங்கள் தெரிவிக்கின்றன. தற்போது கிடைத்துள்ள தகவல்களின்படி ஈசிஆர் சரவணன், மதுரை கல்லாணை, நிலக்கோட்டை அய்யனார், திருப்பூர் சத்தியபாமா, குமாரபாளையம் விஜயலட்சுமி, மதுரை முஸ்தபா, தாஹிரா, விஎஸ் பாபு, தாம்பரம் சரத்குமார், ஸ்ரீரங்கம் ரமேஷ் ஆகியோருக்கு அமைச்சரவையில் இடம் தர விஜய் திட்டமிட்டு இருப்பதாக சொல்லப்படுகிறது. இதற்கிடையில், அதிமுகவில் ஏற்பட்டுள்ள உட்கட்சி குழப்பமும் அமைச்சரவை விரிவாக்க விவாதத்தில் பேசுபொருளாக மாறியுள்ளது. எஸ்.பி. வேலுமணி தலைமையிலான அதிமுக எம்.எல்.ஏ.க்கள் சிலர் தவெக அரசுக்கு ஆதரவு தெரிவித்துள்ள நிலையில், அவர்களில் சிலருக்கும் அமைச்சரவை வாய்ப்பு வழங்கப்படலாம் என்ற தகவல்கள் முன்பே வெளியானது. ஆனால் அதிமுகவின் உள்கட்சி பிரச்சினை இன்னும் தீராத நிலையில், அந்த விவகாரத்தில் உடனடி முடிவு எடுக்காமல் தவெக தலைமை காத்திருப்பதாக கூறப்படுகிறது. இதனால், நாளைய அமைச்சரவை விரிவாக்கத்தில் யாருக்கு வாய்ப்பு கிடைக்கப் போகிறது? கூட்டணி கட்சிகளுக்கு எவ்வளவு முக்கியத்துவம் அளிக்கப்படும்? என்ற எதிர்பார்ப்பு தமிழக அரசியல் வட்டாரங்களில் அதிகரித்துள்ளது.விஜய் அமைச்சரவை
அமைச்சரவை விரிவாக்கம்
காங்கிரஸ்
ஈசிஆர் சரவணன்
அதிமுகவினருக்கு வாய்ப்பு
யாருக்கு வாய்ப்பு?