நாளை காலை 10 மணிக்கு புதிய அமைச்சர்கள் பதவியேற்பு.. அதிகாரப்பூர்வமாக அறிவித்தது ஆளுநர் மாளிகை

  • சென்னை: முதல்வர் விஜய் தலைமையிலான தவெக அரசின் அமைச்சரவை விரிவாக்கம் நாளை காலை 10 மணிக்கு மக்கள் மாளிகையில் நடைபெற உள்ளது. இதற்கான அதிகாரப்பூர்வை அறிவிப்பினை ஆளுநர் அர்லேகர் வெளியிட்டுள்ளார். மேலும் புதிதாக பதவியேற்கும் அமைச்சர்களுக்கு ஆளுநர் பதவிப்பிரமாணம் செய்து வைக்கிறார். காங்கிரஸ் கட்சிக்கு அமைச்சரவை இடம் உறுதியாகியுள்ள நிலையில், இந்திய யூனியன் முஸ்லீம் லீக் மற்றும் விசிகவுக்கும் இடம் கிடைக்குமா என்ற எதிர்பார்ப்பு அரசியல் வட்டாரங்களில் அதிகரித்துள்ளது.

    Advertisement

    தமிழகத்தில் புதிதாக தவெக அரசு பொறுப்பேற்றுள்ளது. முதல்வர் விஜய் கடந்த 10 ஆம் தேதி பதவியேற்றார். நேரு உள்விளையாட்டு அரங்கில் நடைபெற்ற பதவியேற்பு விழாவில் விஜய்யுடன் சேர்த்து 10 பேர் அமைச்சர்களாக பதவியேற்றுக்கொண்டனர். முதல்வர் விஜய் உள்பட 10 அமைச்சர்களுக்கும் கடந்த 16-ந் தேதியன்று துறைகள் ஒதுக்கப்பட்டன.

    Advertisement

    எனினும், வனத்துறை, வேளாண்மை, வருவாய், வீட்டுவசதி, கூட்டுறவு, குறு, சிறு மற்றும் நடுத்தர தொழில்கள் துறை உள்ளிட்ட பல்வேறு துறைகளுக்கு அமைச்சர்கள் நியமனம் இன்னும் நடக்கவில்லை. இதனால் விஜய் அமைச்சரவை எப்போது விரிவாக்கம் செய்யப்படும் என்ற கேள்வி எழுந்தது. இந்த நிலையில், நாளை காலை 10 மணியளவில் முதல்வர் விஜய்யின் அமைச்சரவை விரிவாக்கம் செய்யப்பட உள்ளது. ஆளுநர் மாளிகை இதற்கான அதிகாரப்பூர்வ அறிவிப்பை வெளியிட்டுள்ளது.

    காங்கிரஸ் கட்சி சார்பில் விஸ்வநாதன் மற்றும் ராஜேஷ் குமார் ஆகிய இருவர் அமைச்சர்களாக பதவியேற்பது உறுதியாகியுள்ளது. இந்திய யூனியன் முஸ்லீம் லீக் மற்றும் விசிக ஆகிய கட்சிகளுக்கு தவெக அழைப்பு விடுத்துள்ள நிலையில், விரைவில் முடிவு செய்து அறிவிப்பதாக கூறியுள்ளன. அமைச்சரவை விரிவாக்கத்தில் விசிக, இந்திய யூனியன் முஸ்லீம் லீக் கட்சிக்கு இடம் ஒதுக்கப்படுமா? இல்லையா என்பது நாளை 10 மணிக்குள் தெரிந்துவிடும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

    Advertisement

    அமைச்சர்களுக்கான பதவியேற்பு விழா ஆளுநர் மாளிகையில் உள்ள பாரதியார் மண்டபத்தில் நாளை நடைபெறுகிறது. இதில் புதிதாக பதவியேற்கும் அமைச்சர்களுக்கு ஆளுநர் அர்லேகர் பதவிப்பிரமாணம் செய்து வைக்கிறார். இந்த நிகழ்ச்சியில் முதல்வர் விஜய்யும் கலந்து கொள்கிறார்.

    English Summary

    Tamil Nadu Chief Minister Vijay is set to expand his cabinet tomorrow. Congress leaders Viswanathan and Rajesh Kumar are confirmed to take oath as ministers, while IUML and VCK are still discussing participation in the coalition government led by TVK.