லயோலா கல்லூரி நட்பு! இப்போ கோட்டை வரை! அமைச்சரவையில் விஜய்யின் நெருங்கிய நண்பர் ஸ்ரீநாத்! யார் இவர்

  • சென்னை: தமிழக அரசியல் வரலாற்றில் முதல்முறையாகக் கூட்டணி அமைச்சரவை அமைகிறது. இன்னும் சற்று நேரத்தில் புதிய அமைச்சரவை பதவியேற்கும் நிலையில், அதில் விஜய்யின் மிக நெருங்கிய நண்பரும், தூத்துக்குடி தொகுதியின் புதிய தவெக எம்எல்ஏ-வுமான ஸ்ரீநாத்திற்கும் வாய்ப்பு தரப்பட்டுள்ளது. யார் இந்த ஸ்ரீநாத்.. இவரது பின்னணி தொடர்பாக நாம் விரிவாகப் பார்க்கலாம்!

    Advertisement

    தமிழ்நாட்டில் இப்போது தவெக அரசு நடந்து வருகிறது. விஜய் முதல்வராக இருக்கும் சூழலில், அவருடன் 9 பேர் அமைச்சர்களாகப் பதவியேற்றனர். இந்தச் சூழலில் தான் இன்றைய தினம் அமைச்சரவை விரிவாக்கம் செய்யப்படுகிறது. இன்று மொத்தம் 23 பேர் அமைச்சர்களாகப் பதவியேற்கிறார்கள். காங்கிரஸில் இருந்தும் இருவர் அமைச்சர்களாகப் பதவியேற்கிறார்கள்.

    Advertisement

    தமிழக அமைச்சரவை

    தமிழகத்தைப் பொறுத்தவரை கூட்டணி ஆட்சி அமைவது இதுவே முதல்முறை. 2006ல் திமுகவுக்கும் கூட பெரும்பான்மை கிடைக்காத போதிலும், கூட்டணிக் கட்சிகள் வெளியில் இருந்தே ஆதரவு கொடுத்தன. ஆனால், இப்போது முதல்முறையாகக் கூட்டணி ஆட்சி அமைந்துள்ளது. 1967க்கு பிறகு முதல்முறையாகக் காங்கிரஸும் அமைச்சரவையில் இடம்பெற்றுள்ளது. மேலும், விஜய்யின் மிக நெருங்கிய நண்பரும், தூத்துக்குடி தொகுதியின் புதிய தவெக எம்எல்ஏ-வுமான ஸ்ரீநாத்திற்கும் வாய்ப்பு தரப்பட்டுள்ளது. அவரை பற்றி நாம் பார்க்கலாம்!

    யார் இவர்

    விஜய் நடித்த முதல் படமான 'நாளைய தீர்ப்பு' (1992) படத்தில் விஜய்யின் நண்பனாகச் சின்ன ரோலில் அறிமுகமானவர் ஸ்ரீநாத். கல்லூரித் தோழர்களான இவர்களின் நட்பு 30 ஆண்டுகளைக் கடந்தும் நீடித்து வரும் வேளையில், தற்போது நிஜ அரசியலிலும் விஜய்யின் அமைச்சரவைக்குள் நுழைகிறார் ஸ்ரீநாத்.. சென்னையில் பிறந்து வளர்ந்த ஸ்ரீநாத், லயோலா கல்லூரியில் பி.காம் படிப்பில் சேர்ந்தபோதுதான் விஜய்- ஸ்ரீநாத் நட்பு உருவானது. அப்போது தொடங்கிய இவர்களின் இந்த நட்பு, 2026 கோட்டை வரை ஒரு துளிகூட மாறாமல் நீடித்து வருகிறது.

    Advertisement

    விஜய்யின் நண்பர்

    நாளைய தீர்ப்பு மற்றும் மாண்புமிகு மாணவன் என விஜய்யுடன் தொடக்கத்திலேயே இரு படங்களில் நடித்திருந்தார். பிறகு, 12பி, காதல் வைரஸ், வட்டாரம் உள்ளிட்ட படங்களில் சிறிய சிறிய ரோல்களில் நடித்து வந்தார். விஜய் டிவியில் வெளியான காதலிக்க நேரமில்லை சீரியலில் காமெடி ரோலில் நடித்திருந்தார். அதற்கு நல்ல வரவேற்பு கிடைத்திருந்தது. சந்தோஷ் சுப்பிரமணியன், உத்தம புத்திரன், வேட்டைக்காரன் உள்ளிட்ட படங்களில் இவரது காமெடி காட்சிகள் பேசப்பட்டன. அதன் பிறகு தொடர்ச்சியாகப் பல படங்களில் நடித்துள்ளார். கடந்தாண்டு வெளியான கும்கி 2, சுமோ படங்களிலும் நடித்துள்ளார்.

    Advertisement

    இயக்குநர்

    நடிப்பு மட்டுமின்றி, டைரக்ஷனிலும் இவர் அனுபவம் பெற்றவர். இயக்குநர் ஜீவாவிடம் உதவி இயக்குநராகச் சில படங்களில் வேலை செய்திருந்தார் ஸ்ரீநாத்! இவர் 2009ல் வெளியான முத்திரை, 2014ல் ரிலீஸான வல்லவனுக்கு புல்லும் ஆயுதம் உள்ளிட்ட படங்களை இயக்கியுள்ளார். மேலும், விஜய்யின் கடைசி திரைப்படமான ஜனநாயகன் படத்திலும் இவர் நடித்துள்ளார்.

    அரசியல்

    இந்தச் சூழலில் தான் விஜய் 'தமிழக வெற்றிக் கழகம்' கட்சியைத் தொடங்கியபோது, அவருடன் ஸ்ரீநாத்தும் இருந்தார். இவருக்குச் சட்டசபைத் தேர்தலிலும் வாய்ப்பு தரப்பட்டது. தூத்துக்குடியில் தவெகவில் சில பிரச்சினைகள் இருந்த நிலையில், அங்குத் தனது நம்பிக்கைக்குரிய நண்பன் ஸ்ரீநாத்தை வேட்பாளராகக் களமிறக்கினார். எவ்வித அரசியல் பின்னணியும் இல்லாமல், இறங்கிய ஸ்ரீநாத் தீவிரமாகப் பிரச்சாரம் செய்தார். தூத்துக்குடியில் திமுகவின் மூத்த அமைச்சர் கீதா ஜீவனை சுமார் 37 ஆயிரம் வாக்குகள் வித்தியாசத்தில் வீழ்த்தினார்.

    Advertisement

    இதன் காரணமாகவே இவருக்கு அமைச்சரவையில் வாய்ப்பு தரப்பட்டுள்ளது. ஆளுநர் மாளிகையில் ஸ்ரீநாத்தும் அமைச்சராகப் பதவியேற்கிறார். அவருக்கு என்ன இலாகா என்பது குறித்த தகவல்கள் இன்னும் ஓரிரு நாட்களில் வெளியாகும் எனத் தெரிகிறது.

    English Summary

    Actor and long-time friend of CM Vijay, Srinath, who won the Thoothukudi, takes oath as a minister(ஸ்ரீநாத் அமைச்சராக பதவியேற்றார்): Vijay Cabinet Expansion Actor Srinath Appointed Minister.