விஜய் அமைச்சரவையின் புதிய அமைச்சர்கள் யார் யார்? டாப்பில் இருக்கும் 13 பெயர்கள்! நாளை விரிவாக்கம்?

  • சென்னை: தமிழக முதல்வர் விஜய் நாளை தனது அமைச்சரவையை விரிவாக்கம் செய்ய உள்ளதாக தகவல்கள் வெளியாகி உள்ளது. அதன்படி 20 பேர் வரை பதவியேற்க வாய்ப்புள்ளதாக சொல்லப்படுகிறது. இந்நிலையில் தான் தவெகவில் அமைச்சராக வாய்ப்புள்ள நபர்களின் டாப் 13 பெயர்கள் வெளியாகி உள்ளன. அதன் விவரம் வருமாறு:

    Advertisement

    தமிழக முதல்வராக தவெக தலைவர் விஜய் பதவியேற்றுள்ளார். இவருடன் 9 பேர் அமைச்சர்களாக பதவியேற்றுள்ளனர். தமிழக அமைச்சரவையை பொறுத்தவரை முதல்வருடன் சேர்த்து மொத்தம் 35 பேர் வரை இடம்பெறலாம். ஆனால் தற்போது வரை 10 பேர் மட்டுமே பொறுப்பில் உள்ளனர்.

    Advertisement

    இன்னும் 25 இடங்கள் காலியாக உள்ளன. இந்த இடங்களை நிரப்பும் வகையில் முதல்வர் விஜய் நாளை தனது அமைச்சரவையை விரிவாக்கம் செய்ய முடிவெடுத்துள்ளதாக கூறப்படுகிறது.

    தமிழகத்துக்கு தற்போது ஆளுநர் இல்லை. கேரளாவை சேர்ந்த ராஜேந்திர விஸ்வநாத் அர்லேகர் தான் தமிழகத்தின் பொறுப்பு ஆளுநராக செயல்பட்டு வருகிறார். இவர் கேரளா முதல்வர் பதவியேற்பு விழாவிற்காக அங்கு சென்றிருந்தார். இந்நிலையில் தான் அவர் இன்று சென்னை திரும்பி உள்ளார். நாளை அமைச்சரவை விரிவாக்கம் செய்யப்படுவதையொட்டி அவர் சென்னைக்கு இன்று மாலை வருகை தர உள்ளார்.

    இந்நிலையில் தான் விஜய் தனது அமைச்சரவையில் யாருக்கெல்லாம் வாய்ப்பு வழங்க வேண்டும் என்ற பட்டியலை தயாரித்துள்ளார். இது இன்று ஆளுநர் வசம் ஒப்படைக்கப்பட்டு நாளை அமைச்சரவை விரிவாக்கம் செய்யப்பட உள்ளதாக தகவல்கள் வெளியாகி உள்ளது. நாளை 20 பேர் வரை அமைசசரவையில் இடம்பெற வாய்ப்புள்ளதாக கூறப்படுகிறது. இந்த அமைச்சரவை விரிவாக்கத்தில் தவெக எம்எல்ஏக்களில் சிலரது பெயர்கள் டாப்பில் உள்ளன. அதன் விவரம் வருமாறு:

    Advertisement

    என் மரிய வில்சன் - சென்னை ஆர்கே நகர் தொகுதி எம்எல்ஏ அல்லது விஎஸ் பாபு - கொளத்தூர் எம்எல்ஏ

    இசிஆர் பி சரவணன் - சோழிங்கநல்லூர் சட்டசபை தொகுதி

    எஸ். ரமேஷ் - ஸ்ரீரங்கம் எம்எல்ஏ
    முகமது ஃபர்வாஸ் - அறந்தாங்கி எம்எல்ஏ
    சத்யபாமா - திருப்பூர் வடக்கு எம்எல்ஏ
    விஜய்தமிழன் பார்த்திபன் - சேலம் தெற்கு
    வி சம்பத்குமார் - கோவை வடக்கு எம்எல்ஏ
    ரேவந்த் சரண் - மதுரவாயல் எம்எல்ஏ

    ஆர் விஜயசரவணன் - தஞ்சாவூர் எம்எல்ஏ
    எம்வி கருப்பையா- சோழவந்தான் எம்எல்ஏ
    மாதர் பதுருதீன் (முஸ்தபா) - மதுரை மத்திய தொகுதி எம்எல்ஏ
    ஆர்எஸ் முருகன் - திருநெல்வேலி எம்எல்ஏ
    சதீஷ் கிறிஸ்டோபர் - ராதாபுரம் எம்எல்ஏ ஆகியோரின் பெயர்கள் டாப்பில் உள்ளதாக கூறப்படுகிறது.

    Advertisement

    நாளை மொத்தம் தவெகவில் இருந்து 15 பேரும், காங்கிரஸ் கட்சியில் 2 பேர் உள்பட மொத்தம் 20 பேரை அமைச்சராக்க விஜய் முடிவெடுத்துள்ளதாக கூறப்படுகிறது. இதில் விசிக, இந்தியன் யூனியன் முஸ்லிம் லீக் கட்சிகளில் தலா ஒருவர் மற்றும் அமமுகவில் நீக்கப்பட்ட மன்னார்குடி காமராஜ் ஆகியோருக்கு அமைச்சர் பதவி கிடைக்க வாய்ப்புள்ளதாகவும் கூறப்படுகிறது. விசிக, இந்தியன் யூனியன் முஸ்லிம் லீக் கட்சிகள் விரும்பாத நிலையில் தவெகவில் இருந்து 2 பேர் அமைச்சர்களாக்கப்பட வாய்ப்புள்ளது.

    இன்மூலம் முதல்வர் விஜய் உள்பட அமைச்சரவையில் உள்ளவர்களின் எண்ணிக்கை 30 ஆக அதிகரிக்கும். மீதம் 5 இடங்கள் காலியாக இருக்கும். இது அதிமுக எம்எல்ஏக்களுக்காக விஜய் வைக்க முடிவெடுத்துள்ளதாக சொல்லப்படுகிறது. அதிமுக தற்போது பிளவுப்பட்டுள்ளது. எடப்பாடி பழனிச்சாமி தலைமையில் 22 எம்எல்ஏக்கள் செயல்பட்டு வருகின்றனர்.

    Advertisement

    அதேவேளையில் சிவி சண்முகம், எஸ்பி வேலுமணி தலைமையில் 25 எம்எல்ஏக்கள் செயல்பட்டு வருகின்றனர். இதில் சிவி சண்முகம் தலைமையிலானவர்கள் தவெகவிற்கு ஆதரவாக நம்பிக்கை வாக்கெடுப்பில் ஓட்டளித்துள்ளனர். இதனால் 5 இடங்கள் அதிமுகவிற்கு வழங்க விஜய் முடிவெடுத்துள்ளதாக கூறப்படுகிறது.

    ஆனால் தவெகவிற்கு வாக்களித்தவர்கள் தகுதி நீக்கம் செய்ய வேண்டும் என்று எடப்பாடி பழனிச்சாமி தரப்பு சபாநாயகர் ஜேசிடி பிரபாகரிடம் கோரிக்கை வைத்துள்ளது. அதுமட்டுமின்றி அதிமுகவினரை அமைச்சரவையில் சேர்த்தால் ஆதரவை மறுபரிசீலனை செய்வதாக மார்க்சிஸ் கம்யூனிஸ்ட் செயலாளர் சண்முகம் தெரிவித்துள்ளார்.

    இதுபோன்ற காரணங்களால் நாளைய தினம் அதிமுகவினரை அமைச்சரவையில் சேர்க்காமல் காத்திருந்து பார்த்து கொள்ளலாம் என்ற முடிவில் விஜய் இருப்பதாகவும், இதனால் 5 இடங்கள் காலியாகவைக்க உள்ளதாகவும் தகவல்கள் வெளியாகி உள்ளன.

    English Summary

    Reports have emerged indicating that Tamil Nadu Chief Minister Vijay is set to expand his cabinet tomorrow. Accordingly, it is said that up to 20 individuals are likely to be sworn in. Against this backdrop, a list of the top 13 individuals from the TVK who are potential candidates for ministerial posts has been released. The details are as follows: