அனிதாவை தங்கையாக சொன்ன விஜய்.. நினைவேந்தல் நிகழ்ச்சிக்கு அனுமதி மறுப்பு! அனிதாவின் சகோதரர் ஆதங்கம்

  • சென்னை: நீட் தேர்வுக்கு எதிரான போராட்டத்தில் உயிர் தியாகம் செய்த மாணவி அனிதாவின் நினைவேந்தல் நிகழ்ச்சிக்கு, முதலமைச்சர் விஜய் தலைமையிலான அரசு அனுமதியை மறுத்துள்ளது. இதற்கு அனிதாவின் சகோதரர் மணிரத்னம் கடும் கண்டம் தெரிவித்திருக்கிறார்.

    இது குறித்து அவர் பேசியதாவது, "செப்.1 தங்கை அனிதாவின் நினைவேந்தல் நிகழ்ச்சி திட்டமிட்டபடி பெசன்ட் நகர் கடற்கரையில் நடக்கும். காவல்துறையிடம் 15 நாட்களுக்கு முன்னதாகவே அனுமதி கேட்டிருந்தோம். ஆனால், கடைசி நேரத்தில் அனுமதி மறுத்து கடிதம் கொடுத்திருந்தார்கள்.

    ஆனால், நீட் எதிர்ப்பு கூட்டு இயகத்தின் சார்பில் நிச்சயம் நினைவேந்தல் கூட்டம் நடக்கும் என்று நாங்கள் கடிதத்தை கொடுத்துவிட்டு வந்திருக்கிறோம். நாங்கள் போராட்டத்திற்கோ, ஆர்ப்பாட்டத்திற்கோ அனுமதி கேட்கவில்லை. நினைவேந்தல் நிகழ்வுக்குதான் அனுமதி கேட்டோம். ஜனநாயக நாட்டில்.. நினைவேந்தல் நிகழ்ச்சிக்கு அனுமதி மறுக்கப்பட்டிருக்கிறது.

    யார் என்று பார்த்தால்.. நீட் தேர்வை எதிர்க்கும் தவெக அரசு. தங்கை அனிதாவை தனது தங்கையாக நினைத்துக்கொண்டிருக்கும் மாண்புமிகு முதல்வர் விஜய்.. அவர்களின் தங்கைக்கான நினைவேந்தல் நிகழ்ச்சிக்கு அனுமதி மறுக்கப்பட்டிருக்கிறது. ஜனநாயக நாட்டில் இதற்கு கூட அனுமதி மறுக்கும் தவெக அரசின் இந்த செயல் கண்டிக்கத்தக்கது. இருப்பினும் திட்டமிட்டபடி அனிதாவின் நினைவேந்தல் நிகழ்வு நடக்கும். இதில் அனைவரும் பங்கேற்க வேண்டும்" என்று கூறியுள்ளார்.

    முன்னதாக சட்டமன்றத்தில் இது குறித்து எதிர்க்கட்சித் தலைவர் உதயநிதி ஸ்டாலின் கேள்விகளை எழுப்பியிருந்தார். "நீட் கொடுமையால் இந்தியாவில் நடந்த முதல் மரணம், அனிதாவின் மரணம்தான். இந்த சம்பவத்தின்போது முதலமைச்சர் விஜய் அனிதாவின் வீட்டிற்கே சென்று துக்கம் விசாரித்திருந்தார். எங்களது தலைவரும் சென்றிருந்தார். இன்று ஆளுங்கட்சி நீட்டை ஒழிக்க வேண்டும் என்கிற நிலைப்பாட்டை எடுத்திருக்கிறீர்கள். இப்படி இருக்கையில் ஜனநாயக ரீதியில் நடக்க இருந்த நினைவேந்தல் நிகழ்ச்சிக்கு இந்த அரசு ஏன் அனுமதி கொடுக்கவில்லை? அனுமதி வழங்க வேண்டும்" என்று கோரியிருந்தார்.

    இதற்கு விளக்கமளித்து பேசிய அமைச்சர் ஆதவ் அர்ஜுனா, "தமிழ்நாடு மாணவர், இளைஞர் கூட்டமைப்பின் தலைவர் பஷீர் என்பவர் அனிதாவின் நினைவேந்தல் கூட்டத்தை நடத்த விண்ணப்பித்திருந்தார். விண்ணப்பத்தை பரிசீலனை செய்ததில்.. 29-08-2026 முதல் 08-09-2026 பெசன்ட் நகர் வேளாங்கண்ணி மாதா கோயில் திருவிழா நடைபெறுவதால் பெருமளவில் பக்தர்கள், வாகனங்கள் பெசன்ட் நகருக்கு வரும் என்பதாலும், மீனவர்கள் வசிக்கும் பகுதியில் எல்லையம்மன் கோயில் திருவிழா நடப்பதாலும்.. சட்டம் ஒழுங்கு மற்றும் வாகன நெரிசலை கருத்தில் கொண்டு நிகழ்ச்சிக்கு அனுமதி மறுக்கப்பட்டிருக்கிறது. வேறு இடத்தில் அனுமதி கேட்டால்.. அரசு பரிசீலிக்கும்" என்று கூறியிருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.

    English Summary

    Vijay Called Anitha 'Sister' But Denied Her Memorial: The government led by Chief Minister Vijay has denied permission for the memorial event for Anitha, the student who sacrificed her life in the protest against the NEET exam. Anitha's brother, Manirathnam, has strongly condemned this move.