இனி ஒன்றிய அரசு இல்லை இந்திய அரசு தான்.. திமுக ஸ்டைலை கைவிட்ட முதல்வர் விஜய்.. மனம்மாறிய பின்னணி


  • சென்னை: மத்திய அரசை முதல்வர் ஸ்டாலின் தலைமையிலான திமுக அரசு ஒன்றிய அரசு என்று குறிப்பிட்டு வந்தது. மேலும் திமுகவினரும் தற்போது வரை ஒன்றிய அரசு என்றே கூறி வருகின்றனர். அந்த பாணியில் விஜய்யும் தனது தேர்தல் பிரசாரம் முதல் இப்போது வரை ஒன்றிய அரசு என்று தான் மத்திய அரசை கூறி வந்தார். ஆனால் தற்போது திடீரென்று விஜய் தனது நிலைப்பாட்டை மாற்றி உள்ளார். ஒன்றிய அரசு என்று அழைக்காமல் இந்திய அரசு என இன்று முதல் கூற தொடங்கி உள்ள நிலையில் அதன் பின்னணி பற்றி இங்கு பார்க்கலாம்.

    Advertisement

    கடந்த 2021 சட்டசபை தேர்தலில் வென்று திமுக ஆட்சியை பிடித்தது. 2026 மே மாதம் வரை திமுக தலைவர் முக ஸ்டாலின் தான் முதல்வராக இருந்தார். ஸ்டாலின் முதல்வரான பிறகு மத்திய அரசை, ஒன்றிய அரசு என்று அழைக்க தொடங்கினார்.

    Advertisement

    அதுவரை மத்திய அரசு, நடுவணரசு என்று அழைத்து வந்த திமுக மற்றும் அதன் கூட்டணி கட்சிகள் ஒன்றிய அரசு என்று அழைக்க தொடங்கினர். இது சர்ச்சையை கிளப்பியது. 'ஒன்றிய அரசு' என்று அழைப்பது சரியா... தவறா விவாதம், ஓடிக் கொண்டிருக்கிறது. இந்த விவாதம் இன்று வரை முடியவில்லை. தொடர்ந்து கொண்டே இருக்கிறது.

    பாஜக மற்றும் அதன் கூட்டணி கட்சியினர் மத்திய அரசை ஒன்றிய அரசு என்று அழைக்க கடும் எதிர்ப்பு தெரிவித்து வருகின்றனர். ஆனால் திமுக மற்றும் அதன் கூட்டணி கட்சியினர் தங்களின் நிலைப்பாட்டை மாற்றி கொள்ளவில்லை. தொடர்ந்து ஒன்றிய அரசு என்றே கூறி வருகின்றனர்.

    Advertisement

    மாநிலங்கள் பலவும் ஒன்றிணைந்துதான் இந்தியா என்ற நாடு உருவானது. இதைத்தான் அரசியலமைப்புச் சட்டத்தில் யூனியன் ஆஃப் ஸ்டேட்ஸ்' (Union of States) என்று குறிப்பிட்டுள்ளனர். அரசியலமைப்பை உருவாக்கியவர்கள், கூட்டாட்சி (Federal) எனும் வார்த்தையைத் தேர்ந்தெடுக்கவில்லை.

    ஒன்றியம் (Union) எனும் வார்த்தையைத்தான் தேர்ந்தெடுத்துள்ளனர். இதனால் ஒன்றிய அரசு என்பது தான் சரி என்று அவர்கள் தங்களின் வார்த்தைக்கு நியாயம் கற்பித்து வருகின்றனர். திமுக மற்றும் அதன் கூட்டணி கட்சிகளின் பாணியை தான் தவெக தலைவர் விஜய் கட்சி ஆரம்பித்ததில் இருந்து பின்பற்றி வருகிறார்.

    பிரதமர் மோடியின் அரசை மத்திய அரசு, நடுவணரசு என்று அழைப்பதற்கு பதில் திமுகவினர் போல் 'ஒன்றிய அரசு' என்று அழைத்து வந்தார். முதல்வரான பிறகும் கூட பிரதமர் மோடி, மத்திய அமைச்சர்களுக்கு எழுதிய கடிதத்தில் ஒன்றிய அரசு என்ற வார்த்தையை தான் பயன்படுத்தினார்.

    Advertisement

    ஆனால் இன்று விஜய் தனது நிலைப்பாட்டை மாற்றி உள்ளார். நெய்வேலி பழுப்பு நிலக்கரி நிறுவனத்தில் இந்திய அரசின் பங்குகளை விற்பனை செய்ய முடிவு செய்திருப்பதை மறுபரிசீலனை செய்யக்கோரி பிரமதர் மோடிக்கு இன்ற முதல்வர் விஜய் கடிதம் எழுதினார். அதில் ஒன்றிய அரசு என்ற வார்த்தையை விஜய் பயன்படுத்தவில்லை. அதற்கு பதில் 'இந்திய அரசு' என்ற வார்த்தைகளை தான் பயன்படுத்தி உள்ளார்.

    மத்திய அரசுடன் மோதல் இன்றி சுமூகமாக செயல்பட தவெக அரசு முடிவெடுத்துள்ளது. இதுதொடர்பாக சட்டசபையில் முதல்வர் விஜய் உறுதியளித்தார். இதன் முதற்படியாக முதல்வர் விஜய் ஒன்றிய அரசு என்பதற்கு பதில் இந்திய அரசு என்ற வார்த்தையை பயன்படுத்த தொடங்கி உள்ளதாக தகவல்கள் வெளியாகி உள்ளது.

    Advertisement

    இந்த கடிதத்தில் ஒரு இடத்தில் கூட ஒன்றிய அரசு என்று வரவில்லை. அதற்கு பதிலாக மொத்தம் 6 இடத்தில் 'இந்திய அரசு' என்று குறிப்பிடப்பட்டுள்ளது. அந்த கடிதத்தில் கூறப்பட்டுள்ளதாவது ''நெய்வேலி பழுப்பு நிலக்கரி நிறுவனத்தில் இந்திய அரசின் பங்குகளை விற்பனை செய்ய முடிவு செய்திருப்பதை மறுபரிசீலனை செய்யக் கோரி இந்தியப் பிரதமர் நரேந்திர மோடிக்கு, தமிழ்நாடு முதலமைச்சர் ஜோசப் விஜய் இன்று (25.06.2026) கடிதம் எழுதியுள்ளார். இதுதொடர்பாக அரசு வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் கூறப்பட்டுள்ளதாவது:

    அக்கடிதத்தில் என்.எல்.சி. இந்தியா (NLC India) நிறுவனத்தின் செலுத்தப்பட்ட பங்கு மூலதனத்தை, 2% அடிப்படை பங்குகள் மற்றும் 1% கூடுதல் பங்குகள் ஒதுக்கீட்டு விருப்பம் (green-shoe option) உள்ளிட்ட 3% வரையிலான 'விற்பனைக்கான சலுகை' மூலம் விற்பனை செய்வதற்கு இந்திய அரசு எடுத்துள்ள முடிவு குறித்து தமிழ்நாடு அரசின் வருத்தத்தைத் தெரிவிக்கும் முகமாக இக்கடிதத்தை தான் எழுதுவதாகத் குறிப்பிட்டுள்ளார்.

    Advertisement

    மேலும், என்.எல்.சி இந்தியா நிறுவனத்தில் இந்திய அரசின் பங்குகளை மேலும் குறைக்கும் எந்தவொரு முடிவையும், தமிழ்நாடு அரசு கொள்கை ரீதியாக ஆட்சேபிக்கிறது என்றும், என்.எல்.சி இந்தியா நிறுவனம் தனது தோற்றம், வளர்ச்சி மற்றும் தொடர்ச்சியான செயல்பாடுகள் என அனைத்திலும், தமிழ்நாட்டுடன் இரண்டறக் கலந்திருப்பதால், இவ்விவகாரம் தமிழ்நாட்டிற்கு மிக முக்கியத்துவம் வாய்ந்தது என்றும் குறிப்பிட்டுள்ளார்.

    என்.எல்.சி இந்தியா நிறுவனத்தின் தலைமையகம் தமிழ்நாட்டின் நெய்வேலியில் அமைந்துள்ளது என்றும், இங்குதான் அதன் முதன்மையான பழுப்பு நிலக்கரி சுரங்கச் செயல்பாடுகளான சுரங்கம்-I, சுரங்கம்-IA, சுரங்கம்-!! மற்றும் அதன் முக்கிய நிலக்கரி சுரங்க முகப்பு சார்ந்த அனல் மின் நிலையங்களும் அமைந்துள்ளன என்றும், இந்த நிறுவனம், மாநில அரசு நிர்வாகத்தின் விரிவான வசதி வாய்ப்புகள், உள்கட்டமைப்பு மேம்பாடு, மறுவாழ்வு நடவடிக்கைகள் மட்டுமல்லாது, தமிழ்நாட்டு மக்களின் கையகப்படுத்தப்பட்ட ஒத்துழைப்புடன், மாநில அரசு வாயிலாகக் நிலங்களில் பல தசாப்தங்களாகக் கட்டமைக்கப்பட்டுள்ளது என்றும், இத்தகைய முக்கியத்துவம் வாய்ந்த பொதுத்துறை நிறுவனத்தில் மாநில அரசுக்கு நியாயமான மற்றும் நீடித்த உரிமை உள்ளது என்றும் தெரிவித்துள்ளார்.

    மேலும், என்.எல்.சி இந்தியா நிறுவனம் என்பது வெறும் பங்குச்சந்தையில் பட்டியலிடப்பட்ட ஒரு நிறுவனம் மட்டுமல்லாமல், எரிசக்தி பாதுகாப்பு, கனிமவள மேம்பாடு மற்றும் முக்கிய உள்கட்டமைப்பு ஆகியவற்றில் ஈடுபட்டுள்ள முக்கியத்துவம் வாய்ந்த தேசிய சொத்து என்பதில் தமிழ்நாடு அரசு உறுதியாக உள்ளது என்றும், இந்திய அரசின் பங்குகளை மேலும் குறைப்பது, அது எவ்வளவு குறைவாக இருப்பினும், இதுபோன்ற முக்கியத்துவம் வாய்ந்த பொதுத்துறை நிறுவனங்களின் பொது உடைமைத் தன்மைக்கு ஒரு தவறான முன்னுதாரணத்தை ஏற்படுத்திவிடும் என்றும், இத்தகைய நடவடிக்கை நிதி சார்ந்த அம்சங்களைக் கடந்து, மாநிலத்தின், மாநில மக்களின் நீண்டகால நலன்கள், நாட்டின் எரிசக்திப் பாதுகாப்பு ஆகியவற்றைப் பாதிப்பதாக அமையுமென்றும் தெரிவித்துள்ளார்.

    மேலும், என்.எல்.சி இந்தியா நிறுவனத்தில் இந்திய அரசின் பங்குகள் மேலும் குறைக்கப்படக் கூடாது என்பதில் தமிழ்நாடு அரசு தொடர்ந்து உறுதியாக இருந்துவருகிறது என்றும், இத்தகைய நிறுவனங்கள், குறிப்பாகப் பல தசாப்தங்களாக அவற்றைச் செயல்படுத்திவரும் மாநிலத்தின் தொடர்ச்சியான ஆதரவோடு நிறுவப்பட்டு விரிவாக்கம் செய்யப்பட்டவை என்பதால், இத்தகைய நிறுவனங்கள் தொடர்ந்து முழுமையாக அரசின் உரிமையிலும் கட்டுப்பாட்டிலும் மட்டுமே நீடிக்கவேண்டும் என்றும், இத்தகைய சூழலில், என்.எல்.சி இந்தியா நிறுவனத்தின் பங்குகளை விற்பனை செய்வது தொடர்பான தனது முடிவை இந்திய அரசு மறுபரிசீலனை செய்யவேண்டுமென்றும் தனது கடிதத்தில் கேட்டுக் கொண்டுள்ளார்.

    மேலும், தமிழ்நாடு அரசின் எண்ணங்களையும், கொள்கை ரீதியான ஆட்சேபனைகளையும் இந்திய அரசு உரிய முறையில் பரிசீலிக்கும் என்று தாம் உளப்பூர்வமாக நம்புவதாகவும் இந்தியப் பிரதமருக்கு, தமிழ்நாடு முதலமைச்சர் அனுப்பிய கடிதத்தில் தெரிவித்துள்ளார்.

    English Summary

    Tamil Nadu CM Vijay had consistently referred to the central government as the "Ondriya Arasu" from the time of his election campaign until recently like DMK. However, Vijay has now suddenly changed his stance; starting today, he has begun referring to it as the ‘India Arasu' instead of the "Ondriya Arasu" Here, we look at the background behind this shift.