சென்னை: திமுக ஆட்சியில் விவசாயிகள், ஆசிரியர்கள் மீது பதியப்பட்ட அனைத்து வழக்குகளையும் ரத்து செய்வதாக முதல்வர் விஜய் அறிவித்துள்ளார். ஜனநாயக அடிப்படையில் அனைத்து வழக்குகளையும் திரும்ப பெற அரசு முடிவு செய்துள்ளதாக கூறிய முதல்வர் விஜய், விவசாயிகள் மற்றும் ஆசிரியர்களுக்கும், அவர்களின் நியாயமான கோரிக்கைகளுக்கும் அரசு துணை நிற்கும் என்று தெரிவித்துள்ளார்.
தமிழ்நாட்டில் உள்ள நகரங்களில் குடிநீர், பாதாள சாக்கடை, பூங்காக்கள், திடக்கழிவு மேலாண்மை, சாலை வசதி உள்ளிட்டவை மேம்படுத்தும் வகையில் நகராட்சி நிர்வாகம் மற்றும் குடிநீர் வழங்கல் துறை சார்ந்த முக்கிய அறிவிப்புகளை முதல்வர் ஜோசப் விஜய் 110 விதியின் கீழ் வெளியிட்டார். இந்த அறிவிப்பின் போது விவசாயிகள், ஆசிரியர்கள் மீது பதியப்பட்ட வழக்குகள் ரத்து செய்வதாக அறிவித்தார்.
அதில் ஜோசப் விஜய், 2021 மே முதல் 2026 ஏப்ரல் வரை தங்களின் வாழ்வாதாரம், உரிமைகள், நியாயமான கோரிக்கைகளுக்காக அமைதியான முறையில் போராடிய விவசாயிகள் மற்றும் ஆசிரியர்கள் மீது பதிவு செய்யப்பட்ட அனைத்து வழக்குகளும் திரும்ப பெறப்படும். ஜனநாயக உரிமைகளை தமிழக அரசு மதிக்கிறது. கடந்த ஆட்சியாளர்களால் விவசாயிகள் மற்றும் ஆசிரியர்கள் தங்களின் கோரிக்கைகளுக்கான அமைதி வழியில் போராடிய போது அவர்கள் மீது பதிவு செய்யப்பட்ட வழக்குகளை மனிதநேய அடிப்படையிலும், ஜனநாயக கொள்கைகள் அடிப்படையிலும் திரும்ப பெற முடிவு செய்யப்பட்டுள்ளது. விவசாயிகள் மற்றும் ஆசிரியர்களுக்கு அவர்களின் நியாயமான கோரிக்கைகளுக்கும் இவ்வரசு உறுதுணையாக நிற்கும். திருவண்ணாமலை மாவட்டம் சிப்காட் தொழிற்பேட்டை எதிர்ப்பு போராட்டங்களில் ஈடுபட்ட விவசாயிகள் மீது வழக்குகள் பதிவு செய்யப்பட்டதுடன், சில விவசாயிகள் மீது குண்டர் தடுப்பு சட்டமும் போடப்பட்டது. பரந்தூரில் புதிய விமான நிலையம் அமைக்கும் திட்டத்திற்கு எதிராக விவசாயிகள் தொடர் போராட்டங்களில் ஈடுபட்டனர். விவசாய நிலங்கள், நீர் நிலைகள் மற்றும் வாழ்வாதாரம் பாதிக்கப்படும் என்ற நோக்கத்துடன் விமான நிலையத் திட்டத்தை கைவிட வேண்டும் என்று போராடிய விவசாயிகள் மீது முந்தைய அரசால் மனித நேயமற்ற வகையில் பதிவு செய்யப்பட்ட வழக்குகள் நிலுவையில் உள்ளன. அது தொடர்பாக அத்தனை வழக்குகளையும் திரும்ப பெற முடிவு எடுக்கப்பட்டுள்ளது. இந்த நடவடிக்கை ஜனநாயக உரிமைகளை மேலும் வலுப்படுத்துவதோடு, சாமானிய மக்களுக்கும் அரசுக்கும் இடையிலான நம்பிக்கையை உறுதிப்படுத்தும் என்பதையும் தெரிவித்து கொள்வதாக தெரிவித்தார். ஆசிரியர்கள் தினம் நெருங்கியுள்ள சூழலில், முதல்வர் விஜய்யின் இந்த அறிவிப்பு வரவேற்பை பெறும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.