சென்னை: தமிழகத்தில் நடைபெற உள்ள உள்ளாட்சி தேர்தலிலும், அடுத்து நடைபெற உள்ள இடைத்தேர்தலிலும் தமிழக வெற்றி கழகத்துடன் இந்திய யூனியன் முஸ்லிம் லீக் கூட்டணி தொடரும் என அமைச்சர் ஷாஜகான் கூறியுள்ளார். மேலும், வரக்கூடிய நிதிநிலை அறிக்கையில், சிறுபான்மையின மக்களுக்கு மகிழ்ச்சியான அறிவிப்புகள் இடம்பெறும் என்றும் கூறினார்.
திருவாரூருக்கு வருகை புரிந்த சிறுபான்மையினர் நலத் துறை அமைச்சர் ஷாஜகான் தனியார் அரங்கில் நடைபெற்ற இந்திய யூனியன் முஸ்லிம் லீக் கட்சியின் பொதுக்குழு கூட்டத்தில் கலந்து கொண்டார். அதனைத் தொடர்ந்து செய்தியாளர்களைச் சந்தித்தார்.
அப்போது பேசிய அவர்," அமைச்சரவையில் பங்கேற்று இருப்பதன் மூலம் இந்திய யூனியன் முஸ்லிம் லீக்கை நோக்கி இளைஞர்கள் பலர் இணைய தொடங்கியுள்ளனர். தமிழகத்தில் இந்திய யூனியன் முஸ்லிம் லீக் அசைக்க முடியாத சக்தியாக உருவாவதற்கான வாய்ப்பு பிரகாசமாக தெரிகிறது. முன்னாள் முதல்வர் கருணாநிதி மூன்றரை சதவீத இட ஒதுக்கீட்டை இஸ்லாமியர்களுக்கு வழங்கினார், அதனை ஐந்து சதவீதமாக உயர்த்த வேண்டும் என்று வலியுறுத்தி வருகிறோம், இதுகுறித்து முதல்வர் விஜய் சந்தித்த பேராசிரியர் காதர் மொய்தின் தலைமையிலான இஸ்லாமியர் குழுவினர் வலியுறுத்திய போது மக்கள் தொகை கணக்கெடுப்புக்கு பின்னர் இது தொடர்பாக முடிவு எடுக்கப்படும் என அவர் தெரிவித்துள்ளார். 2024 ம் ஆண்டு தமிழக அரசு வழங்கிய அரசாணையின் அடிப்படையில் தொடரப்பட்ட வழக்கில் இஸ்லாமியர்களின் ஏழு பிரிவினருக்கு மட்டுமே இட ஒதுக்கீடு வழங்கப்படும் என உயர்நீதிமன்றம் அளித்த தீர்ப்பின் காரணமாக இஸ்லாமியர்களுக்கான இட ஒதுக்கீடு கேள்விக்குறியாகி உள்ளது. இது தொடர்பாக அதனை எதிர்த்து தமிழக அரசு மேல்முறையீடு செய்ய முயற்சி செய்து வருகிறது. இதற்கு மேல் முறையீடு செய்வதா அல்லது அரசாணை புதிதாக பிறப்பிப்பதா ? அல்லது சட்ட திருத்தம் ஏதேனும் செய்வதா என்று ஆலோசித்து வருகிறோம். விரைவில் இந்திய யூனியன் முஸ்லிம் லீக்கின் பரிந்துரையை, தமிழக முதல்வரிடம் வழங்க உள்ளோம் அதன் அடிப்படையில் தமிழக அரசு அடுத்த கட்ட நடவடிக்கையை மேற்கொள்ளும். ஜூன் ஜூலை ஆகஸ்ட் மாதங்களுக்கு வழங்க வேண்டிய தண்ணீரை கர்நாடக அரசு தமிழகத்திற்கு வழங்கவில்லை. இதையெல்லாம் கண்காணித்து நெறிப்படுத்த வேண்டிய மத்திய அரசு பாரமாக உள்ளது. இது தொடர்பாக முதல்வரும் மத்திய அரசை தொடர்ச்சியாக வலியுறுத்தி வருகிறார். இதனால் பின்னடைவு ஏற்பட்டாலும், மோட்டார் பம்பு செட் மூலம் விவசாயிகள் விவசாயம் செய்து வருகிறார்கள் அவர்களுக்கு தேவையான 14 மணி நேரம் மும்முனை மின்சாரம் வழங்குவதற்கு, எதிர்காலத்தில் காவிரி டெல்டாவை உள்ளடக்கிய ஐந்து மாவட்டங்களுக்கும் மின்சாரம் வழங்கிடும் வகையில் 400 கிலோ வாட் துணை மின் நிலையம் அமைக்க வேண்டும் என்ற கோரிக்கையை, மின்சாரத்துறை அமைச்சரிடம் வேண்டுகோளாக வைத்துள்ளோம் அதனை பரிசீலிப்பதாக தெரிவித்துள்ளார்கள். பாபநாசம் அருகே இருக்கக்கூடிய சாலியமங்கலம் பகுதியில் அமைய வாய்ப்புள்ளது. இது அரசின் பரிசீலனையில் உள்ளது. இந்தியா முழுமைக்கும் பிரிவினைவாத சக்திகளை உருவாக்கக் கூடிய வகையில் மாட்டு இறைச்சி போன்ற பல்வேறு பிரச்சனைகளை ஏற்படுத்தி வருகிறார்கள், தமிழக அரசு இதுபோன்ற தேசவிரோத சக்திகளை, தமிழக அரசு தேசவிரோத சக்திகள் மீது உறுதியான நடவடிக்கையை எடுக்கும். உள்ளாட்சித் தேர்தலிலும் நடைபெற உள்ள சட்டமன்ற இடைத்தேர்தலிலும் இந்திய யூனியன் முஸ்லிம் லீக்கின் தோழமை தொடரும். இதுதொடர்பாக கட்சியின் பொதுக்குழுவிலும் தீர்மானம் நிறைவேற்றப்பட்டுள்ளது. தமிழக முதல்வர் விஜய் துறைவாரியாக ஆய்வு கூட்டங்களை நடத்தி வருகிறார். கடந்த 10 தினங்களுக்கு முன்னர், நடைபெற்ற சிறுபான்மையினர் நலத்துறை பல்வேறு பரிந்துரைகளை அளித்துள்ளோம். நிதி நிலையை பொறுத்து, அவற்றையெல்லாம் பரிசீலனை செய்து ஏற்கனவே தொடர்ந்து கொண்டிருக்கின்ற திட்டங்களை தொடர்வதற்கு நிதி ஒதுக்கிட வேண்டும் எனவும் வலியுறுத்தியுள்ளோம். மேலும் தொழில்நுட்பத்தை உட்புகுத்தி சிறுபான்மையினர் சமூக நலனுக்கு தேவையான மேம்பாட்டுக்கு தேவையான கல்லூரிகள், கல்லறை தோட்டங்களுக்கான கட்டுமானங்கள் சாலை வசதிகள் பல்வேறு கோரிக்கைகளை அளித்துள்ளோம் அதனை பரிசளிப்பதாக கூறியிருக்கிறார். இது தொடர்பாக நீதித்துறை அமைச்சர் மற்றும் செயலாளர் இடமும் தெரிவித்துள்ளோம் வரக்கூடிய நிதிநிலை அறிக்கையில், சிறுபான்மையின மக்களுக்கு மகிழ்ச்சியான அறிவிப்புகள் இடம்பெறும்" என்றார்.ஷாஜகான்
இட ஒதுக்கீடு
இந்திய யூனியன் முஸ்லிம் லீக்
காவிரி டெல்டா
தவெக கூட்டணி
முதல்வர் விஜய்
சிறுபான்மையின மக்கள்