சென்னை: தாராபுரம் இடைத்தேர்தல் பிரச்சாரத்தில் பாஜகவின் ஒரு கிளையாக தவெக இருந்ததாக முதல்வர் விஜய் பேசி இருப்பது அக்கட்சித் தொண்டர்கள் மத்தியில் அதிர்ச்சியை ஏற்படுத்தி இருக்கிறது. தவெக முதலில் பாஜகவின் கிளையாக இருந்ததாகவும், தற்போது அது திமுகவின் கிளையாக மாறிவிட்டதாகவும் விஜய் பேசியுள்ளார்.
தாராபுரம் தவெக வேட்பாளர் சத்தியபாமாவை ஆதரித்து முதல்வர் விஜய் இன்று பிரச்சாரம் மேற்கொண்டார். மதுராந்தகம் தொகுதியில் விஜய் மேற்கொண்ட பிரச்சாரம், 2026 சட்டசபைத் தேர்தல் பாணியில் அமைந்திருந்தது. இதனால் விஜய் ஸ்கிரிப்ட்டை மாற்ற வேண்டும் என்ற விமர்சனங்கள் அதிகரித்தன. மீண்டும் மீண்டும் திமுகவை மட்டும் அட்டாக் செய்வதால், மக்கள் வாக்களிக்க மாட்டார்கள் என்று விஜய்யை சாடி இருந்தனர்.
தற்போது தாராபுரத்தில் அதிமுக வெல்லும் என்று கணிப்புகள் வெளியாகி இருப்பதால், இம்முறை திமுக மற்றும் அதிமுக ஆகிய இரு கட்சிகளையும் அட்டாக் செய்ய வேண்டிய தேவை விஜய்க்கு இருந்தது. இதனால் எம்ஜிஆர், ஜெயலலிதா ஆகியோரை தொட்டு சென்ற விஜய், திமுக - அதிமுக இணைந்து ஆட்சியமைக்க முயன்றதாகவும் சில குற்றச்சாட்டுகளை முன் வைத்தார். இந்த பிரச்சாரத்தில் திமுகவை விடவும் அதிமுகவை அதிகமாகவே விமர்சித்திருந்தார். ஆனால் கடந்த பிரச்சாரங்களை போல் விஜய்க்கு இந்த பிரச்சாரம் சிறப்பாக அமையவில்லை என்றே சொல்லலாம். விஜய்யின் பேச்சில் உற்சாகம் குறைந்தே காணப்பட்டது. போதாததற்கு வேட்பாளர் சத்தியபாமாவுக்கு ஆறுதல் கூறியது செயற்கையாக அமைந்தது. இதனைவிடவும் உச்சமாக விஜய் தனது பேச்சில் மிகப்பெரிய சொதப்பலை செய்திருக்கிறார். அதில் விஜய், இந்த தவெக புதிதாக ஒரு பிரான்ச் ஓபன் செய்திருக்கிறது. அந்த பிரான்ச் முதலில் பாஜகவின் கிளையாக இருந்தது. இப்போது திமுகவின் கிளையாகவும் மாறிவிட்டது. இவர்கள் பேசுவதை அவர்களும் பேசுவார்கள். இவர்கள் என்ன அறிக்கை விடுவார்களோ, அவர்களும் அதே அறிக்கையை வெளியிடுவார்கள் என்று தெரிவித்தார். விஜய்யின் இந்த பேச்சால் பரப்புரை கூட்டத்திற்கு வந்த ஒட்டுமொத்த தவெக தொண்டர்களும் அதிர்ச்சி அடைந்து கப்சிப் மோடுக்கு சென்றனர். அதிமுக என்று சொல்வதற்கு பதிலாக விஜய் அந்த இடத்தில் தவெக என்று கூறிவிட்டார். இதனால் விஜய் பிரச்சாரத்திற்கு தயாராவதற்கு இன்னும் கால அவகாசம் தேவைப்படுகிறதோ என்ற விமர்சனங்கள் எழுந்துள்ளன.