எம்எல்ஏ பாஸ் இருப்பதை மறந்துவிட்டாரா! பெரம்பூர் செல்ல அரசுப் பேருந்தில் விஜய் டிக்கெட் எடுத்தது ஏன்?


  • சென்னை: தமிழ்நாடு போக்குவரத்துக் கழகம் சார்பாக 300 புதிய அரசுப் பேருந்துகளின் சேவையை தொடங்கி வைத்த முதல்வர் விஜய், பெரம்பூர் செல்லும் பேருந்தில் ஏறி நடத்துநரிடம் டிக்கெட் எடுத்து பயணம் மேற்கொண்டார். முதல்வர் விஜய்க்கு எம்எல்ஏ பாஸ் இருக்கும் போது, அவர் எதற்காக டிக்கெட் எடுத்தார் என்று பலரும் கேள்வி எழுப்பி வருகின்றனர்.

    Advertisement

    தமிழ்நாடு அரசுப் போக்குவரத்துக் கழகம் சார்பில் புதிதாக வாங்கப்பட்டுள்ள 300 புதிய அரசுப் பேருந்துகளின் சேவையை முதலமைச்சர் சி. ஜோசப் விஜய் இன்று தலைமைச் செயலகத்தில் கொடியசைத்துத் தொடங்கி வைத்தார். ரூ.127.21 கோடி மதிப்பில் 164 டீசல் பேருந்துகள் மற்றும் 136 சிஎன்ஜி CNG பேருந்துகள் அறிமுகப்படுத்தப்பட்டுள்ளது.

    Advertisement

    இந்த நிகழ்வின்போது, திடீரென பெரம்பூர் செல்லும் '29A' தடம் எண் கொண்ட அரசுப் பேருந்தில் ஏறி அவர் பயணம் செய்த சம்பவம் பொதுமக்களையும், அரசியல் வட்டாரத்தையும் வியப்பில் ஆழ்த்தியுள்ளது. பேருந்தில் இருந்த ஓட்டுநர் மற்றும் நடத்துநருக்கு வணக்கம் தெரிவித்த அவர், நடத்துநரிடம் முறைப்படி காசு கொடுத்து டிக்கெட் பெற்றுக்கொண்டார்.

    அவருடன் போக்குவரத்துத் துறை அமைச்சர் விஜய் தமிழன் பார்த்திபன், அரசு அதிகாரிகளும் பேருந்தில் பயணித்தனர். சென்னை தலைமைச் செயலகத்தில் இருந்து காமராஜர் சாலை வழியாக கலங்கரை விளக்கம் வரை விஜய் பயணம் மேற்கொண்டார். பயணத்தின் போது நடத்துநரைத் தன் அருகில் அமர வைத்து, போக்குவரத்துத் துறையின் செயல்பாடுகள் குறித்தும் கேட்டறிந்தார்.

    Advertisement

    இதன்பின் மீண்டும் அதே பேருந்திலேயே தலைமைச் செயலகம் திரும்பினார். அரசுப் பேருந்தில் விஜய் டிக்கெட் எடுத்து பயணம் மேற்கொண்டது மக்களிடையே பாராட்டுக்களை பெற்று வருகிறது. அதேபோல் பேருந்தில் பயணம் மேற்கொண்ட விஜய், தனது செல்ஃபோனில் வீடியோ எடுத்து கொண்டார். இதனிடையே முதல்வர் விஜய் பேருந்தில் காசு கொடுத்து டிக்கெட் எடுத்தது தொடர்பாக விவாதம் எழுந்துள்ளது.

    ஏனென்றால் முதலமைச்சர் விஜய், பெரம்பூர் தொகுதி சட்டமன்ற உறுப்பினராக இருக்கிறார். தமிழ்நாட்டில் எம்எல்ஏ-க்களுக்கு மாநிலம் முழுவதும் அரசுப் பேருந்துகளில் இலவசமாகப் பயணிக்க இலவச பாஸ் இருக்கும்போது, அவர் எதற்காகத் தனியாகக் காசு கொடுத்து டிக்கெட் எடுக்க வேண்டும் என்ற கேள்வி எழுந்துள்ளது. இதனால் விஜய் அப்படியொரு பாஸ் இருப்பது குறித்து தெரியாமல் இருந்திருக்கலாம் என்று பேசப்படுகிறது.

    Advertisement

    முதல்வர் விஜய்க்கு தெரியாமல் இருந்திருந்தாலும், உடன் பயணித்த போக்குவரத்து துறை அமைச்சர் பார்த்திபன் மற்றும் அரசு அதிகாரிகளாவது நினைவுபடுத்தி இருக்க வேண்டும். அதேபோல் நடிகனாக இருந்த வரை விஜய் தமிழ்நாட்டில் இப்படியொரு பயணத்தை பேருந்தில் மேற்கொண்டிருக்க வாய்ப்பில்லை. இதன் காரணமாகவே மொபைலில் வீடியோ எடுத்ததாகவும் பார்க்கப்படுகிறது.

    English Summary

    Vijay: CM Vijay Buys Ticket for Perambur Bus Ride, But Critics Ask Why Despite Having Free MLA Pass