சிங்கப்பெண் சிறப்பு அதிரடி படை திட்டம் ஒத்திவைப்பு.. பின்னணியில் முதல்வர் விஜய்யின் டெல்லி பயணம்!

  • சென்னை: சிங்கப்பெண் சிறப்பு அதிரடி படை திட்டத்தை முதல்வர் விஜய் இன்று தொடங்கி வைக்க இருந்த நிலையில், பிரதமர் மோடியை சந்திக்க டெல்லி செல்ல உள்ளதால் ஒத்தி வைக்கப்பட்டுள்ளது. முதல்வராக பொறுப்பேற்ற முதல் நாளிலேயே விஜய் இந்த திட்டத்தை கொண்டு வர கையெழுத்திட்டிருந்தார்.

    Advertisement

    மே 10-ஆம் தேதி தமிழகத்தின் புதிய முதலமைச்சராகப் பொறுப்பேற்றுக் கொண்ட விஜய், கோட்டையில் தனது சேம்பரில் அமர்ந்தவுடன் மூன்று முக்கியக் கோப்புகளில் கையெழுத்திட்டார். அதில் ஒட்டுமொத்த தமிழகத்தின் கவனத்தையும் ஈர்த்தது இந்த 'சிங்கப்பெண் சிறப்பு அதிரடி படை' கோப்பு தான். பெண்களுக்கு எதிராக நடக்கும் குற்றங்களைத் தடுத்தல், பெண்களுக்குப் பாதுகாப்பான சூழலை உருவாக்குதல் மற்றும் சைபர் குற்றங்களில் இருந்து பெண்களைக் காப்பது ஆகியவற்றை முதன்மை நோக்கமாகக் கொண்டு இத்திட்டம் வடிவமைக்கப்பட்டுள்ளது.

    Advertisement

    இதற்கென தனியாக ஐஜியாக பவானீஸ்வரி நியமிக்கப்பட்டு, அவருக்குக் கீழ் எஸ்பி, டிஎஸ்பி, இன்ஸ்பெக்டர்கள் மற்றும் பிரத்யேகப் பயிற்சி பெற்ற பெண் காவலர்கள் மாநிலம் முழுவதும் பணியமர்த்தப்பட உள்ளனர். திட்டத்தை நாளை பிரம்மாண்ட அரசு விழாவில் முதலமைச்சர் விஜய் தொடங்கி வைக்க ஏற்பாடுகள் தீவிரமாக நடந்து வந்தன.

    ஆனால், முதலமைச்சராகப் பொறுப்பேற்ற பின் முதன்முறையாகப் பிரதமர் நரேந்திர மோடியை சந்தித்து தமிழகத்திற்கான திட்டங்கள் குறித்து கோரிக்கை வைக்க உள்ளார். இதற்காக இன்று காலை 10 மணிக்கு தனி விமானத்தில் டெல்லி புறப்படும் முதல்வர் விஜய், பிரதமரை சந்திக்க உள்ளதால் நாளை நடக்கவிருந்த 'சிங்கப்பெண்' திட்டத் தொடக்க விழா தற்காலிகமாக ஒத்திவைக்கப்பட்டுள்ளது.

    Advertisement

    டெல்லி பயணத்தை முடித்துக் கொண்டு முதலமைச்சர் விஜய் சென்னை திரும்பியவுடன், அடுத்த சில தினங்களிலேயே இத்திட்டம் தொடங்கப்படும் எனத் தலைமைச் செயலக வட்டாரங்கள் தெரிவிக்கின்றன. மாநிலம் முழுவதும் சுமார் 37 முக்கிய நகரங்களை மையமாகக் கொண்டு இந்தச் சிறப்பு அதிரடிப் படையினர் ரோந்து மற்றும் பாதுகாப்புப் பணிகளில் ஈடுபட உள்ளனர்.

    தமிழ்நாட்டில் பெண்கள் பாதுகாப்பில் ஒரு புதிய மைல்கல்லாகப் பார்க்கப்படும் இத்திட்டம், முதல்வர் சென்னை திரும்பியதும் உடனடியாகத் தொடங்கி வைக்கப்படும் என எதிர்பார்க்கப்படுகிறது. கடந்த சில வாரங்களாகவே தமிழ்நாட்டில் பெண்கள் பாதுகாப்பு குறித்த விவாதம் தொடங்கியுள்ள சூழலில், சிங்கப்பெண் பாதுகாப்பு படை திட்டம் குறித்த எதிர்பார்ப்பும் அதிகரித்துள்ளது.

    English Summary

    Vijay: CM Vijay’s Delhi Trip Postpones Launch of Singappen Special Task Force, His Milestone First-Day Promise