ஜூலை 10ல் கரூர் செல்லும் விஜய்.. உயிரிழந்த 41 பேரின் குடும்பங்களுடன் சந்திப்பு? ஆனந்த் அறிவிப்பு!

  • சென்னை: முதல்வர் விஜய் ஜூலை 10ஆம் தேதி கரூர் செல்ல உள்ளதாக அமைச்சர் ஆனந்த் அறிவித்துள்ளார். கரூர் கூட்ட நெரிசல் சம்பவத்திற்கு பின் தேர்தல் பிரச்சாரத்திற்காக கூட விஜய் கரூர் பக்கம் செல்லவில்லை. இந்த நிலையில் கரூரில் விரைவில் இடைத்தேர்தல் நடக்கவுள்ள சூழலில், முதல்வர் விஜய் அங்கு செல்வதாக அறிவிக்கப்பட்டுள்ளது.

    Advertisement

    கடந்த ஆண்டு செப்டம்பர் 27 அன்று தவெக தலைவர் விஜய்யின் பிரச்சாரம் கரூர் வேலுசாமிபுரத்தில் நடைபெற்றது. இந்த பிரச்சாரக் கூட்டத்தில் ஏற்பட்ட எதிர்பாராத கூட்ட நெரிசலில் சிக்கி குழந்தைகள், பெண்கள் உட்பட 41 பேர் பரிதாபமாக உயிரிழந்தனர். இந்தச் சம்பவம் நாடு முழுவதும் பெரும் அதிர்வலைகளை ஏற்படுத்தியது.

    Advertisement

    இதுகுறித்த விசாரணையை உச்ச நீதிமன்ற மேற்பார்வையில் சிபிஐ தீவிரமாக நடத்தி வருகிறது. தவெக தலைவர் விஜய்யும் 2 முறை சிபிஐ விசாரணைக்கு ஆஜராகினார். தேர்தலுக்கு முன்பே கரூர் சென்று பாதிக்கப்பட்ட 41 குடும்பங்களையும் விஜய் சந்திப்பார் என்று எதிர்பார்க்கப்பட்டது. ஆனால் பாதிக்கப்பட்டவர்களின் குடும்ப உறவினர்களை நேரில் அழைத்து தனியார் விடுதியில் வைத்து விஜய் சந்தித்தார்.

    இதன்பின் சட்டசபைத் தேர்தலில் கரூர் சென்று விஜய் பிரச்சாரம் மேற்கொள்வார் என்று எதிர்பார்க்கப்பட்டது. ஆனால் கரூர் பக்கமே விஜய் செல்லவில்லை. இருப்பினும் தேர்தலில் வென்று முதல்வராக விஜய் பொறுப்பேற்ற பின், கரூர் செல்வார் என்று எதிர்பார்க்கப்பட்டது. இந்த நிலையில் கரூர் எம்எல்ஏ எம்.ஆர்.விஜயபாஸ்கர் பதவியை ராஜினாமா செய்துவிட்டு தவெகவில் இணைந்துள்ளார்.

    Advertisement

    இதனால் கரூர் தொகுதியில் விரைவில் இடைத்தேர்தல் நடக்கவுள்ளது. இந்த நிலையில் ஜூலை 10ஆம் தேதி முதல்வர் விஜய் கரூர் செல்ல உள்ளதாக அமைச்சர் ஆனந்த் அறிவித்துள்ளார். ஏற்கனவே திருச்சி கிழக்கு தொகுதியிலும் இடைத்தேர்தலுக்கான பிரச்சாரத்தை விஜய் ஏற்கனவே தொடங்கினார். பெரம்பூர் தொகுதியில் கூட நன்றி சொல்ல போகாத விஜய், திடீரென கரூர் பயணிப்பது விவாதப் பொருளாக மாறி இருக்கிறது.

    அமைச்சர் ஆனந்த் வெளியிட்டுள்ள தகவலின்படி, ஜூலை 10-ல் கரூர் செல்லும் முதல்வர் விஜய் அங்கு அரசு நலத்திட்ட உதவிகளை வழங்குவதோடு, புதிய திட்டங்களையும் தொடங்கி வைக்க உள்ளார். இந்த பயணத்தின் போது, கடந்த ஆண்டு கூட்ட நெரிசலில் உயிரிழந்த 41 பேரின் குடும்பங்களையும் நேரடியாகச் சந்தித்து ஆறுதல் கூறத் திட்டமிட்டுள்ளதாக தவெகவினர் மத்தியில் பேச்சுகள் எழுந்துள்ளன.

    English Summary

    Vijay: CM Vijay’s Karur Visit Scheduled for July 10, Confirms Minister Anand in the Vijayabaskar joining function