3 தமிழர்கள் சுட்டுக்கொலை.. கர்நாடகா அரசுக்கு விஜய் கண்டனம் தெரிவிக்கணும்.. அழுத்தி சொன்ன சண்முகம்!

  • சென்னை: கர்நாடகா வனத்துறையால் தமிழர்கள் 3 பேர் துப்பாக்கியால் சுட்டுப் படுகொலை செய்யப்பட்டதற்கு கர்நாடகா அரசுக்கு தமிழக அரசு கண்டனம் தெரிவிக்க வேண்டும் என்று சிபிஎம் மாநிலச் செயலாளர் பெ.சண்முகம் வலியுறுத்தியுள்ளார். தமிழர்கள் மான் வேட்டையாடினார்கள் என்று வனத்துறை பொய் சொல்வதாக கூறியுள்ள சண்முகம், துப்பாக்கிச்சூட்டுக் கொலையை எவ்வகையிலும் ஏற்றுக்கொள்ள முடியாது என்றும் சாடியுள்ளார்.

    Advertisement

    காவிரி வனவிலங்கு சரணாலய பகுதியில் காணாமல் போன மாடுகளை தேடி சென்றவர்களை, மான் வேட்டையாடியதாக குற்றம்சாட்டி கர்நாடகா வனத்துறை துப்பாக்கியால் சுட்டுக்கொலை செய்துள்ள சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. சுட்டுக் கொலை செய்யப்பட்ட அந்தோணிசாமி, ஜான்ரோஸ் பீட்டர், குமார் ஆகிய மூவரும் அப்பகுதியில் உள்ள ஜகன்னாததொட்டி, மரியமங்கலம், லாசர்தொட்டி கிராமங்களை சேர்ந்தவர்கள்.

    Advertisement

    இவர்கள் மூவரும் மான்களை வேட்டையாட வந்ததாக கூறி கர்நாடகா வனத்துறை குற்றம்சாட்டியுள்ளது. ஆனால் அது அப்பட்டமான பொய் என்று அவரின் குடும்பத்தினர் கூறியுள்ளனர். கொலை செய்யப்பட்ட மூவரும் தமிழர்கள். இதனால் தமிழ்நாட்டில் பரபரப்பான சூழல் ஏற்பட்டுள்ளது. இதற்கு சிபிஎம் மாநிலச் செயலாளர் பெ.சண்முகம் கண்டனம் தெரிவித்துள்ளார்.

    இதுதொடர்பாக பெ.சண்முகம் தனது எக்ஸ் பக்கத்தில், கர்நாடக மாநிலம் சாம்ராஜ்நகர் மாவட்டம், ஹானூர் தாலுகா, தோமையார்பாளையம் கிராமத்தைச் சேர்ந்த, தமிழகத்தைப் பூர்வீகமாகக் கொண்ட விவசாயிகள் வழக்கமாக மாடு மேய்க்கும் வனப்பகுதிக்குள் காணாமல் போன மாடுகளைத் தேடிச் சென்ற அந்தோணி ராஜ், ஜான், குமார் ஆகியோரை கர்நாடக மாநில வனத்துறையினர் நேற்று சுட்டுக் கொலை செய்திருப்பது வன்மையான கண்டனத்திற்குரியது.

    Advertisement

    தங்கள் குற்றத்தை மறைக்க, அவர்கள் வேட்டையாடினார்கள் என்று வனத்துறையினர் பொய்யான குற்றச்சாட்டைத் தெரிவிக்கின்றனர். இந்தத் துப்பாக்கிச் சூட்டுக் கொலையை எவ்வகையிலும் ஏற்றுக்கொள்ள முடியாது. சம்பந்தப்பட்ட வனத்துறையினரைப் பணி நீக்கம் செய்து கைது செய்ய வேண்டும். கொல்லப்பட்டவர்கள் தமிழர்கள் என்ற அடிப்படையில், தமிழ்நாடு அரசு தனது கண்டனத்தைக் கர்நாடக அரசிடம் தெரிவிக்க வேண்டும் என்று வலியுறுத்துவதாக கூறியுள்ளார்.

    ஏற்கனவே கர்நாடகாவுடன் காவிரி பிரச்சனை இருந்து வரும் சூழலில், கர்நாடகா வனத்துறையால் தமிழர்கள் சுட்டுப்படுகொலை செய்யப்பட்டிருப்பது அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. காவிரி விவகாரத்தில் முதல்வர் விஜய் அமைதி காத்து வரும் நிலையில், இந்த விவகாரத்திலாவது கர்நாடகா அரசுக்கு கண்டனம் தெரிவிக்க வேண்டும் என்ற குரல்கள் எழுந்துள்ளன.

    English Summary

    Vijay: CPM Leader Shanmugam Demands CM Vijay to Condemn Shooting of 3 Tamils by Karnataka Forest Officials