தாராபுரம் விஜய் பேச்சில்.. வழக்கமான உற்சாகம் மிஸ்ஸிங்.. கவனிச்சீங்களா? என்ன காரணம்?

  • சென்னை: திருப்பூர் மாவட்டம் தாராபுரம் சட்டமன்றத் தொகுதி இடைத்தேர்தல் களம் தேர்தல் நெருங்க நெருங்க அனல் பறக்கத் தொடங்கியுள்ளது. தமிழக வெற்றிக் கழகத்தின் வேட்பாளர் சத்யபாமாவை ஆதரித்து பிரச்சார பொதுக்கூட்டம் இன்று நடைபெற்றது. இதில் கலந்து கொண்டு பேசிய முதல்வர் விஜய்யின் பேச்சு, வழக்கமான அவரது அரசியல் மேடைப் பாணியில் இருந்து முற்றிலும் மாறுபட்டு இருந்தது பொதுமக்களையும் அரசியல் பார்வையாளர்களையும் உற்றுநோக்க வைத்துள்ளது.

    Advertisement

    பொதுவாக விஜய் மேடை ஏறினாலே ஒரு சினிமா பாணி சுறுசுறுப்பு, கைதட்டல் வாங்கும் அடுக்குமொழி பஞ்ச் வசனங்கள், அதிரடி குரல் ஏற்ற இறக்கம் என அரங்கம் அதிரும். ஆனால், தாராபுரம் மேடையில் அவரது குரலில் அந்தப் பழைய 'ஹை பிட்ச்' உற்சாகம் மிஸ்ஸிங். நிதானமாக, சற்று அமைதியான தொனியில் அவர் பேசத் தொடங்கியது அங்கு கூடியிருந்த தொண்டர்களிடையே ஆச்சரியத்தை ஏற்படுத்தியது.

    Advertisement

    அதேபோல், வழக்கமாக மேடை ஏறிய உடனேயே எதிர்க்கட்சிகளை வறுத்தெடுக்கும் விஜய், இந்த முறை தொடக்கத்திலேயே காரசார அரசியல் பேசவில்லை. முதலில் மக்கள் நலத்திட்டங்கள் மற்றும் ஆட்சி சாதனைகளை வரிசையாகப் பட்டியலிட்டு விளக்கிவிட்டு, அதன் பிறகே மெதுவாக அரசியல் விமர்சனங்களை முன்வைக்கத் தொடங்கினார். அதுமட்டுமின்றி, அவருக்கு முன்பாகப் பல நிர்வாகிகள் அதிக நேரம் எடுத்துப் பேசியதும், அதைத் தொடர்ந்து விஜய்யும் நீண்ட நேரம் பொறுமையாகப் பேசியதும் வழக்கமான விஜய் ஸ்டைல் பொதுக்கூட்ட பாணியை உடைத்து புதிய ஸ்டைலில் இருந்தது.

    "நான் முதலமைச்சராக வரவில்லை; உங்கள் வீட்டுப் பிள்ளை!"

    மேடையில் பேசத் தொடங்கிய விஜய், தன்னை ஒரு ஆட்சியாளராகப் பார்க்காமல் குடும்ப உறுப்பினராகப் பார்க்க வேண்டும் என்று பொதுமக்களிடம் உரிமையுடன் கேட்டுக்கொண்டார்:

    Advertisement

    "நான் இங்கு முதலமைச்சராக வரவில்லை. உங்கள் வீட்டு அண்ணனாக, தம்பியாக, உங்கள் பிள்ளையாக, உங்கள் வீட்டுத் தாய்மாமனாக உரிமையோடு வந்திருக்கிறேன். மக்களாகிய நீங்கள் கொடுத்த வாக்குறுதிகளை அரசு படிப்படியாக நிறைவேற்றி வருகிறது. ஊழலை ஒழிப்பதிலும், மக்கள் உழைப்பை மதிப்பிலும் நாங்கள் முழு முனைப்போடு செயல்பட்டு வருகிறோம்."

    தொடர்ந்து தவெக அரசின் ஆரம்பக் கட்ட சாதனைகளைப் பட்டியலிட்ட அவர், புதிய முதலீடுகள் மற்றும் திட்டங்கள் குறித்துப் பேசினார். "ஆட்சிப் பொறுப்பேற்ற முதல் 100 நாட்களிலேயே சுமார் ரூ. 1 லட்சம் கோடி அளவிலான தொழில் முதலீடுகள் தமிழ்நாட்டிற்கு ஈர்க்கப்பட்டுள்ளன. இதன் மூலம் இளைஞர்களுக்குப் புதிய வேலைவாய்ப்புகள் உருவாகும். மேலும், வரவிருக்கும் அக்டோபர் 2 காந்தி ஜெயந்தி முதல் பொதுமக்களுக்கான 'வெற்றிப் பயணம்' திட்டம் முழு வீச்சில் செயல்படுத்தப்படும்" என்று அறிவித்தார்.

    Advertisement

    திருப்பூர், தாராபுரத்திற்கான திட்டங்கள்

    மாவட்ட வாரியான வளர்ச்சிப் பணிகளைப் பற்றிப் பேசும்போது, தொழில் நகரமான திருப்பூரில் மக்கள் பயன்பாட்டிற்காக அனைத்து நவீன வசதிகளுடன் கூடிய நீச்சல் குளம் அமைக்கப்படும் என்று தெரிவித்தார்.

    அதே நேரத்தில் தாராபுரத்தின் தற்போதைய நிலையைச் சுட்டிக்காட்டிய விஜய், "இத்தனை ஆண்டுகளாக தாராபுரத்தில் மிக அடிப்படையான கட்டமைப்பு வசதிகள் கூட முறையாகச் செய்து முடிக்கப்படவில்லை. அடிப்படைத் தேவைகளுக்கே மக்கள் இன்னும் ஏங்கி நிற்கிறார்கள். இந்த நிலை நிச்சயம் மாற்றப்படும்" என்று உறுதியளித்தார்.

    "மன்னராட்சி மனப்பான்மை தவெகவுக்கு கிடையாது"

    திமுக மற்றும் அதன் கூட்டணிக் கட்சிகளை மிகக் கடுமையான சொற்களால் விஜய் விமர்சித்தார்:

    Advertisement

    "கடந்த 2026 சட்டமன்றத் தேர்தலில் தமிழக மக்கள் மிகத் தெளிவாகச் சிந்தித்து, தவெகவை அமோக வெற்றி பெறச் செய்தார்கள். திமுகவை வீட்டுக்கு அனுப்பிவிட்டார்கள். ஆனால் சிலர், மக்கள் தங்களை நிராகரித்துவிட்டார்கள் என்பதை மறந்துவிட்டு, இன்னும் தங்கள் குடும்பம்தான் அதிகாரத்தில் இருக்கிறது என்று எண்ணிக்கொண்டு ஆடுகிறார்கள். அந்த மன்னராட்சி மனப்பான்மை எல்லாம் தவெகவுக்குக் கிடையாது.

    பேரறிஞர் அண்ணாவின் கொள்கைகளையும் மறந்துவிட்டு, தீயசக்தியான திமுகவுடன் மறைமுகமாகப் பினாமியாகக் கூட்டு சேர்ந்து கொண்டு, சுயநலத்திற்காகச் சுற்றுபவர்கள் நாம் கிடையாது.

    நாம் கிருஷ்ண ஜெயந்திக்கும் வாழ்த்துச் சொல்வோம்; கிறிஸ்துமஸ் பண்டிகைக்கும் வாழ்த்துச் சொல்வோம்; பக்ரீத் பெருநாளுக்கும் மனதார வாழ்த்துச் சொல்வோம். மற்றவர்களைப் போல வெளியே ஒரு முகமூடி மாட்டிக்கொண்டு, மறைந்து பதுங்கிக்கொண்டு அரசியல் செய்யும் திமுக போன்ற இயக்கம் நாமல்ல" என்றார்.

    Advertisement

    முன்னாள் முதல்வர் மு.க. ஸ்டாலினின் சமீபத்திய பேச்சையும் அவர் கிண்டலடித்தார். "கொளத்தூர் மக்களுக்குக் கோடானு கோடி நன்றி எனச் சிரித்துக்கொண்டே ஸ்டாலின் சொல்கிறார். ஆனால், இனிமேல் வரப்போகும் எல்லா தேர்தல்களிலும் மக்கள் எங்களுக்கு ஓட்டு போடவில்லை, அதற்கும் கோடானு கோடி நன்றி எனச் சொல்லிக்கொண்டே இருக்க வேண்டியதுதான்" என்று எள்ளி நகையாடினார்.

    "இருவருக்கும் ஒரே ஓனர்தான்!" - விஜய் எச்சரிக்கை

    இறுதியாக எதிர்க்கட்சிகளின் திரைமறைவு அரசியல் கூட்டணிகள் குறித்துப் பேசிய விஜய் மிக அழுத்தமான எச்சரிக்கையை விடுத்தார்:

    "மக்கள் தீர்ப்புக்குத் தலைவணங்குகிறோம் என்று வாயளவில் சொல்வார்கள். ஆனால் மனதளவில் அந்தத் தீர்ப்பை மதிக்கவே மாட்டார்கள். பின்னணியில் என்னவெல்லாம் சதி வேலைகள் செய்யலாம், யாருடன் எல்லாம் சேரக்கூடாதோ அவர்களுடன் எல்லாம் ரகசியக் கூட்டு வைப்பதுதான் இவர்களின் வேலை.

    அவர்கள் என்ன பேசுகிறார்களோ, அதையே இவர்களும் கிளிப்பிள்ளை போலப் பேசுவார்கள். அவர்கள்தான் 'மற்றும் பலர்'. சொல்லப்போனால் இவர்கள் இருவருக்கும் ஒரே ஓனர்தான்!

    ஆனால் நான் ஒன்றை மட்டும் தெளிவாகச் சொல்லிக்கொள்கிறேன்... நீங்கள் பின்னணியில் என்ன சதி வேலைகள் செய்தாலும் சரி, கடவுளின் ஆசியும் இந்த மக்களும் நம்முடன் இருக்கும்போது உங்களால் எங்களை ஒன்றுமே செய்ய முடியாது!" என்று பேசி தனது உரையை நிறைவு செய்தார்.

    English Summary

    Vijay Dharapuram Campaign Speech: Low Pitch, Shift to Welfare Schemes & Sharp Attack on DMK