சென்னை: மருத்துவம் மட்டும்தான் படிப்பா என்று கேட்டவர் முதல்வர் விஜய் மற்றும் அமைச்சர் அருண்ராஜ் என்று நீட் தேர்வுக்கு எதிராக கொண்டு வரப்பட்ட தீர்மானத்தில் திமுக எம்எல்ஏ முத்துராஜா பேசியதால் சட்டசபையில் அமளி ஏற்பட்டது. அப்போது குறுக்கிட்ட அமைச்சர் ஆதவ் அர்ஜுனா, இந்த தீர்மானத்தில் அரசியல் தேவையில்லை, பழைய வரலாறுகளை பேச வேண்டாம் என்று கேட்டு கொண்டார்.
சட்டசபையில் நீட் தேர்வுக்கு எதிராக அமைச்சர் அருண்ராஜ் தனித் தீர்மானத்தை கொண்டு வந்தார். இந்த தீர்மானத்தின் போது திமுக சார்பாக எம்எல்ஏ முத்துராஜா பேசுகையில், நீட் தேர்வு விலக்கினை வலியுறுத்தி நாங்கள் ஆதரிக்கிறோம். நீட் விலக்குக்காக திமுக பல்வேறு முயற்சிகளை எடுத்துள்ளது. நீட் உட்பட எந்த நுழைவுத் தேர்வும் இருக்க கூடாது என்பதே திமுகவின் நிலைப்பாடு.
நீட் தேர்வை முதல்முறையாக எதிர்த்தவர் கலைஞர். 2006 முதல் 2011 வரை நீட் தேர்வு தமிழ்நாட்டிற்குள் வரவில்லை. ஜெயலலிதா உயிருடன் இருந்த வரை நீட் தேர்வு நடக்கவில்லை. 2017 முதலே நீட் தேர்வு தமிழ்நாட்டிற்குள் வந்தது. இதனால் 12ம் வகுப்பில் 1176 மதிப்பெண் எடுத்தும் அரியலூர் மாணவி அனிதா மருத்துவம் படிக்க முடியவில்லை. உச்சநீதிமன்றம் வரை சென்று போராடிய அனிதா, கடைசியில் உயிரை மாய்த்து கொண்டார். தங்கை அனிதாவின் தற்கொலை தான் நீட் தேர்வால் ஏற்பட்ட முதல் பலி. அதன் காரணமாகவே நீட் தேர்வை ஒழிக்க வேண்டும் என்பதில் திமுக உறுதியாக இருக்கிறது. 10 ஆண்டுகளுக்கு முன்பே நீட் தேர்வே ஒரு ஸ்கேம் என்று ஸ்டாலின் போராடினார். 2021ல் திமுக ஆட்சி அமைந்த பின் நீட் பாதிப்பு குறித்து ஆராய ஓய்வுபெற்ற நீதிபதி ஏகே ராஜன் தலைமையில் குழு அமைக்கப்பட்டது. பின்னர் அனைத்து தரப்பினர் கருத்துக்களையும் பெற்றது. அந்த அறிக்கை மூலமாக நீட் தேர்வு ரத்து மசோதாவை கொண்டு வந்தார். அதேபோல் அக்டோபர் 1, 2021ல் நீட் தேர்வு ரத்து தொடர்பாக 12 மாநில முதல்வர்களுக்கு கடிதம் எழுதினார். ஆளுநரால் அந்த மசோதா திருப்பி அனுப்பப்பட்ட போதும், 6 நாட்களில் மீண்டும் நிறைவேற்றி அனுப்பினோம். அந்த மசோதாவுக்கு குடியரசுத் தலைவர் ஒப்புதல் கொடுக்கவில்லை. இதன்பின் அனைத்து கட்சிக் கூட்டத்தில் எடுக்கப்பட்ட முடிவு அடிப்படையில், உச்சநீதிமன்றத்தில் வழக்கு தொடரப்பட்டது. திமுக ஆட்சி காலத்தில் எடுக்கப்பட்ட நடவடிக்கைகள் எதுவும் இந்த தீர்மானத்தில் இடம்பெறவில்லை. அந்த வழக்கு தொடர்பாக தவெக அரசு விளக்கம் கொடுக்க வேண்டும். அதேபோல் நீட் தேர்வுக்கு எதிராக அமைச்சராக இருந்த போது உதயநிதி ஸ்டாலின் போராட்டத்தில் ஈடுபட்டார். ஆனால் ஆட்சிக்கு வருவதற்கு முன் முதல்வர் விஜய், நீட் மட்டும்தான் உலகமா, வேறு படிப்பே இல்லையா என்று கேட்டார். அதையே நமது சுகாதாரத்துறை அமைச்சரும் மீண்டும் பேசினார். மின்சாரத்துறை அமைச்சர் சிடிஆர் நிர்மல்குமார், பிளெம்பர், கார்பெண்டர் வேலைக்கு அதிக வாய்ப்பு இருக்கிறது என்றெல்லாம் பேசினார். அவர் ஏற்கனவே இருந்த ஆர்எஸ்எஸ் அமைப்பின் கொள்கை பாணியில் குலக்கல்விக்கு ஆதரவாக பேசினார் என்று தெரிவித்தார். அப்போது சபாநாயகர் மற்றும் தவெக தரப்பு குறுக்கிட்டது. அமைச்சர் ஆதவ் அர்ஜுனா குறுக்கிட்டு, பழைய வரலாறுகளை பேச வேண்டாம்.. மாணவர்களின் வாழ்க்கை பிரச்சனை.. இந்த தீர்மானத்தில் அரசியல் தேவையில்லை என்று தெரிவித்தார்.