மேகதாது அணை விவகாரம்.. கர்நாடகாவுடன் பேச முதல்வர் விஜய் செல்லக் கூடாது! காரணங்களை அடுக்கிய அன்புமணி

  • சென்னை: மேகதாது அணை விவகாரம் தொடர்பாக கர்நாடகா செல்லும் முடிவை முதல்வர் விஜய் கைவிட வேண்டும் என்று பாமக தலைவர் அன்புமணி ராமதாஸ் தெரிவித்துள்ளார். மேகதாது அணை விவகாரத்தில் தவெக அரசு தவறுக்கு மேல் தவறு செய்வதாக கூறியுள்ள அன்புமணி ராமதாஸ், கர்நாடகா அரசுடன் எந்த வகையில் பேச்சுவார்த்தையில் ஈடுபடக் கூடாது என்றும் தெரிவித்திருக்கிறார்.

    Advertisement

    காவிரியின் குறுக்கே மேகதாது அணை கட்ட கர்நாடகா தொடர்ந்து முயற்சிகள் மேற்கொண்டு வருகிறது. இதனால் இரு மாநிலங்களுக்கு இடையிலும் மோதல் போக்கு நிலவி வருகிறது. இதனிடையே காவிரியில் இருந்து தமிழ்நாட்டிற்கு தேவையான நீரை திறந்துவிடுவதில் சிக்கல் ஏற்பட்டுள்ளது. அதுமட்டுமல்லாமல் காவிரி நீர் மேலாண்மை ஆணைய கூட்டத்திலும், பாசனத்திற்காக தமிழ்நாட்டிற்கு தண்ணீர் திறக்க முடியாது என்று திட்டவட்டமாக கூறிவிட்டது.

    Advertisement

    ஏற்கனவே இதுவரை மேட்டூ அணை திறக்கப்படவில்லை. இந்த நிலையில் நதிநீர் பங்கீடு, மேகதாது அணை பற்றி பெங்களூரில் வரும் 3ஆம் தேதி கர்நாடகா - தமிழ்நாடு முதல்வர்கள் சந்தித்து பேசலாம் என்று கர்நாடகா நீர்பாசனத்துறை அதிகாரிகள் மின்னஞ்சல் மூலமாக அழைப்பு விடுத்துள்ளனர். இதற்காக முதல்வர் விஜய் பெங்களூர் செல்ல இருக்கிறார். இதற்கு பாமக எதிர்ப்பு தெரிவித்துள்ளது.

    இதுகுறித்து பாமக தலைவர் அன்புமணி ராமதாஸ், மேகதாது அணை குறித்து விவாதிக்க கர்நாடகத்தில் வரும் ஆகஸ்ட் 3-ஆம் தேதி ஆலோசனைக் கூட்டம் நடத்தப்படவுள்ளதாகவும், அந்தக் கூட்டத்தில் பங்கேற்பதற்காக முதலமைச்சர் விஜய் அவர்கள் கர்நாடகம் செல்லவிருப்பதாகவும் வேளாண் துறை அமைச்சர் வினோத் தெரிவித்திருக்கிறார். மேகதாது சிக்கல் குறித்து பேச்சு நடத்த தமிழக அரசு ஒப்புக்கொண்டிருப்பது அதிர்ச்சியளிக்கிறது; இது கடுமையாகக் கண்டிக்கத்தக்கது.

    Advertisement

    ஊடகங்களில் வெளியான செய்திகளின் அடிப்படையில் பார்த்தால் கர்நாடக அரசின் அழைப்பை ஏற்றுத் தான் முதலமைச்சர் விஜய் அம்மாநிலத்திற்கு பேச்சு நடத்த செல்வதாகத் தோன்றுகிறது. இது மிகவும் தவறு. பாமக மீண்டும், மீண்டும் கூறி வருவது என்னவென்றால், காவிரியின் குறுக்கே மேகதாது அணை கட்டுவது என்பது தமிழ்நாட்டிற்கும், கர்நாடகத்திற்கும் இடையிலான பிரச்சினை அல்ல.. அது கர்நாடக அரசின் ஒரு சார்பான கோரிக்கை மட்டும் தான்.

    அதுகுறித்து அந்த மாநில அரசுடன் நாம் எந்த பேச்சுக்களையும் நடத்தத் தேவையில்லை என்பது தான். மேகதாது அணை குறித்து கர்நாடக அரசுடன் நாம் பேச்சு நடத்தினால் அதை இரு தரப்பு பிரச்சினையாக ஏற்றுக்கொண்டு விட்டோம் என்று பொருளாகிவிடும். அதன் பின்னர் மேகதாது அணையை கட்டக்கூடாது என்பது தீர்வாக இருக்காது. மாறாக, மேகதாது அணையின் கொள்ளளவு எவ்வளவு டி.எம்.சியாக இருக்க வேண்டும்? அந்த அணையிலிருந்து தமிழகத்திற்கு காவிரியில் தண்ணீர் திறந்து விடுவதற்கான நடைமுறைகள் என்னென்ன? என்பது தான் தீர்வாக இருக்கும்.

    Advertisement

    இது காவிரியில் தமிழ்நாட்டுக்கு உரிய உரிமைகளை மொத்தமாக கர்நாடகத்திடம் தாரைவார்ப்பதற்கு ஒப்பானது ஆகும். மேகதாது அணை குறித்து சட்டப்பேரவையில் நிறைவேற்றப்பட்ட தீர்மானத்தில், இந்த சிக்கலுக்கு தீர்வு காண்பதற்காக புதிய நடுவர் மன்றம் அமைக்க வேண்டும் என்ற வாசகம் சேர்க்கப்பட்ட போதே அதற்கு பாமக கடும் எதிர்ப்பு தெரிவித்தது. மேகதாது அணை விவகாரத்திற்கு தீர்வு காண நடுவர் மன்றம் அமைக்கப் பட்டால் அது தமிழ்நாட்டிற்கு எந்த அளவுக்கு பின்னடைவை ஏற்படுத்துமோ, அதை விட மோசமான பின்னடைவை மேகதாது விவகாரம் குறித்து கர்நாடக அரசுடன் முதலமைச்சர் விஜய் பேச்சு நடத்துவது ஏற்படுத்தி விடும்.

    Advertisement

    மேகதாது போன்ற சர்ச்சைக்குரிய விவகாரங்களில் தமிழக அரசு தன்னிச்சையாக எந்த முடிவையும் எடுக்கக்கூடாது. அதில் சம்பந்தப்பட்ட உழவர் அமைப்புகள், அரசியல் கட்சிகள் போன்றவற்றுடன் ஆலோசனை நடத்திய பிறகு தான் நிலைப்பாட்டை தீர்மானிக்க வேண்டும். மேகதாது சிக்கல் குறித்து விவாதிக்க அனைத்துக் கட்சிக் கூட்டத்தை கூட்ட வேண்டும் என்று பாமக பல வாரங்களாக வலியுறுத்தி வரும் நிலையில், அதை ஏற்காத அரசு, கர்நாடக அரசுடன் பேசும் முடிவை தன்னிச்சையாக எடுத்திருப்பது இவ்விவகாரத்தில் பெரும் பாதிப்பை ஏற்படுத்தி விடும்.

    எனவே, மேகதாது அணை குறித்து பேச்சு நடத்துவதற்காக கர்நாடகத்திற்கு செல்லும் முடிவை முதலமைச்சர் விஜய் கைவிட வேண்டும். மாறாக, சட்டப் போராட்டங்களின் மூலம் மேகதாது அணை கட்டுவதற்கான சதித் திட்டத்தை தடுத்து நிறுத்துவதற்கு முன்வர வேண்டும் என்று வலியுறுத்தி இருக்கிறார்.

    English Summary

    Vijay: Drop Your Plan to Visit Karnataka, Anbumani Ramadoss Urges CM Vijay Over Mekedatu Dam Issue