சென்னை: முதல்வர் விஜய் தலைமையிலான தமிழக வெற்றிக்கழக அரசுக்கு சமீபத்தில் இரண்டு பெரிய தலைவலி ஏற்பட்டது. ஒன்று மின்வெட்டு பிரச்சனை. இன்னொன்று தேனி ஜெயிலில் இருந்து விசாரணைக் கைதிகள் தப்பிய விவகாரம். இந்த இரண்டு துறைகளையுமே கவனித்து வருபவர் அமைச்சர் சிடிஆர் நிர்மல் குமார் என்பது குறிப்பிடத்தக்கது. ஏற்கனவே கட்சியில் நிர்மல் டீம் என ஒரு டீம் உருவாகி தலைமைக்கு ஆனந்துக்கு எதிராக செயல்பட்டு வரும் நிலையில், தற்போது இந்த இரு விவகாரங்களால் விஜய் அதிருப்தியில் இருக்கிறார் என்கின்றனர்.
தமிழக அமைச்சரவையில் மிக முக்கியத்துவம் வாய்ந்த மின்சார துறையை கவனித்து வருகிறார் சிடிஆர் நிர்மல் குமார். மதுரையை மையமாகக் கொண்டு செயல்பட்டு வரும் அவர் தென்னகத்தில் ஒரு முக்கிய அரசியல் புள்ளியாக எழுச்சி பெற வேண்டும் என திட்டமிட்டு காய் நகர்த்தி வருகிறார்.
இந்தியா முழுவதும் கிளை பரப்பி இருக்கும் ஒரு பாரம்பரிய அமைப்பு ஒன்று அவருக்கு பின்னணியில் இருப்பதாக சொல்லப்படுகிறது. மெல்ல மெல்ல அவரது ஆதரவாளர்கள் மதுரையில் பல்வேறு கட்சி பதவிகளிலும் அரசு பதவிகளிலும் அமர்த்தப்பட்டு வருவதாகவும் சொல்லப்படுகிறது. 2026 தமிழக சட்டசபை தேர்தலுக்கு முன்பாக தமிழக வெற்றி கழகத்தில் இணைந்தார். அப்போது புஸ்ஸி ஆனந்த் தவிர தெரிந்த முகங்கள் இல்லாத நிலையில் நிர்மல் குமாரின் வருகை ஓரளவுக்கு அந்த கட்சிக்கு பயன் தந்தது. குறிப்பாக ஐடி விங்கை கட்சியின் ஒரு முக்கிய அமைப்பாக கட்டமைத்ததில் நிர்மல் குமாரின் பங்கு அதிகம். அவருடன் ஆதவ் அர்ஜுனா, அருண் ராஜ் என பலர் வந்தாலும், அவர்கள் சென்னை மற்றும் கொங்கு பகுதியில் மட்டுமே கவனம் செலுத்தினர். இதை அடுத்து மதுரையை மையமாகக் கொண்டு தென் மாவட்ட அரசியல் செய்து வருகிறார் சிடிஆர். விஜயின் ஆதரவாளர்களை ஓரங்கட்டி விட்டு தனது ஆதரவாளர்களை கட்சியிலும் ஆட்சியிலும் நிலை பெறச் செய்ய வேண்டும் என்பது அவர் எண்ணமாக இருக்கிறது என குற்றம் சாட்டுகின்றனர் மதுரை தமிழக வெற்றி கழகத்தினர். அதே நேரத்தில் ஆனந்தை தாண்டி எதுவும் செய்ய முடியாது என்பதால் முதலில் தனது இருப்பினை தக்க வைத்துக் கொள்ள பல்வேறு நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகிறார் என்கிறனர். இந்த நிலையில் தான் நிர்மல் குமார் மீது சிஎம் விஜய் கோபத்தில் இருப்பதாக சொல்கின்றனர். தமிழகம் முழுவதும் மின்வெட்டு பிரச்சனை தலைவிரித்து ஆடிவரும் நிலையில் மக்கள் மத்தியில் கோபம் அதிகரித்து இருக்கிறது. மேலும் கூடுதல் விலைக்கு மின்சாரம் வாங்கியது, துணை குடியரசுத் தலைவர் - எடப்பாடி பழனிச்சாமி சென்றபோது மதுரை மீனாட்சி அம்மன் கோவிலில் மின்வெட்டு ஏற்பட்டது என அடுத்தடுத்து சர்ச்சைகளை சிக்கி வருகிறது மின்துறை. மேலும் எப்போது மின்சாரம் போகும் என தெரியாமல் மக்களும் குழப்பத்தில் இருக்கின்றனர். தொழில் துறையினரும் ஆட்சியாளர்கள் மீது கோபத்தில் இருப்பதாக உளவுத்துறை தகவல்கள் சொன்னதாக சொல்லப்படுகிறது. இது மட்டுமில்லாமல் கடந்த வாரம் திங்கட்கிழமை தேனி சிறையில் இருந்து 17 கைதுகள் தப்பி ஓடியது தமிழகம் முழுவதும் பரபரப்பை ஏற்படுத்தியது. எதிர்க்கட்சிகள் ஒட்டுமொத்தமாக திரண்டு தமிழக வெற்றி கழக அரசை நோக்கி கேள்வி எழுப்பினர். அதற்கு பிறகு கைதிகள் கைது செய்யப்பட்டாலும் அடுத்தடுத்து சிறைகளில் இருந்து தப்பிக்கும் சம்பவங்களும் தொடர்ந்தது. இதுவும் விஜய் அரசுக்கு நெருக்கடியை ஏற்படுத்திய நிலையில் உயர் அதிகாரிகள் பலர் தூக்கி அடிக்கப்பட்டனர். மேலும் தற்போது சிறை பாதுகாப்புக்கு என்று குழு ஒன்றும் அமைக்கப்பட்டுள்ளது. மற்ற அமைச்சர்கள் ஏதாவது உளறி கொட்டி சர்ச்சையை ஏற்படுத்தினால், நிர்மல் குமாரோ தனது செயல்பாடுகள் மூலமாகவே அரசுக்கு கெட்ட பெயரை ஏற்படுத்தி வருகிறார் என்ற குற்றச்சாட்டுகளை சக அமைச்சர்கள் விஜய் இடம் தெரிவித்ததாக சொல்லப்படுகிறது. இதனால் நிர்மல் குமார் மீது முதல்வர் விஜய் கடும் கோபத்தில் இருக்கிறார் என்றும் சொல்கின்றனர் கோட்டை வட்டாரத்தினர்.சிடிஆர் நிர்மல் குமார்
தென் மாவட்ட அரசியல்
தமிழக வெற்றிக் கழகம்
மின்வெட்டு பிரச்சனை
தேனி சிறை சம்பவம்
விஜய் அதிருப்தி