விஜய் அங்கிள்கு ஓட்டு போட நாங்கதான் சொன்னோம்.. இன்னும் எதுவுமே பண்ணல.. Gen Alpha மாணவர்கள் பேட்டி!

  • சென்னை: தூய்மை பணியாளர்கள் பிரச்சனை சரி செய்வர் என்று நம்பியே அவருக்கு வாக்களித்த நாங்கள் சொன்னோம் என்றும், ஆனால் அவர் இன்னும் எதுவுமே செய்யவில்லை என்று ஜென் ஆல்பா மாணவர்கள் தெரிவித்துள்ளார். தூய்மை பணியாளர்களை விஜய் அங்கிள் நேரில் வந்து சந்திக்க வேண்டும் என்றும் வலியுறுத்தியுள்ளனர்.

    Advertisement

    சென்னையில் தூய்மை பணியாளர்கள் போராட்டம் 12வது நாளாக நேற்று நடைபெற்றது. ரிப்பன் மாளிகையில் பணி நிரந்தரம், ஊதிய உயர்வு, தனியார்மயமாக்கலுக்கு எதிர்ப்பு உள்ளிட்ட கோரிக்கைகளை வலியுறுத்தி தொடர்ச்சியாக போராடி வருகின்றனர். அதேபோல் தூய்மை பணியாளர்கள் போராட்டத்தில் ஈடுபடும் பகுதிகளில் போலீசார் அதிகளவில் குவிக்கப்பட்டு பாதுகாப்பு அளிக்கப்படுகிறது.

    Advertisement

    சில நாட்களில் நள்ளிரவு நேரங்களில் மின்சாரம் தடை செய்யப்படுகிறது. இந்த விவகாரம் தொடர்பாக சட்டசபையில் கேள்வி எழுப்பப்பட்ட போது அமைச்சர் ராஜ்மோகன், அவர்கள் தூய்மை பணியாளர்கள் அல்ல.. தூய்மை தேவதைகள்.. அவர்களின் போராட்டத்திற்கு அரசு ஆதரவு தெரிவித்துள்ளது என்று பேசி அதிர்ச்சி கொடுத்தார். ஆனால் போராட்டம் தொடர்ந்து நடந்து வருகிறது.

    இதுவரை எந்த அமைச்சரும் நேரில் சென்று பேச்சுவார்த்தையில் ஈடுபடவில்லை. இதுகுறித்து போராட்டத்தில் ஈடுபட்ட ஜென் ஆல்பா தலைமுறை மாணவர்கள் பேசுகையில், தூய்மை பணியாளர்கள் போராட்டம் நீண்ட நாட்களாக நீடித்து வருகிறது. பணி நிரந்தரம் கோரி இந்த போராட்டம் நடக்கிறது. விஜய் அங்கிள் வந்தால், பணி நிரந்தரம் செய்வார் என்று நம்பியே நாங்கள் அவருக்கு வாக்களிக்க பெற்றோரை வலியுறுத்தினோம்.

    Advertisement

    அவர் ஆட்சிக்கு வந்து இன்னும் ஒன்றுமே செய்யவில்லை. அவர் தூய்மை பணியாளர்களை சந்திக்க வேண்டும் என்பது எங்களின் கோரிக்கை. அதேபோல் பணி நிரந்தரம் கோரிக்கையை தமிழக அரசு ஏற்க வேண்டும் என்பதையும் கோரிக்கையாக வைக்கிறோம் என்று தெரிவித்தனர். தொடர்ந்து தூய்மை பணியாளர்கள் பேசுகையில், எங்களின் மிக முக்கியமான கோரிக்கை பணி நிரந்தரம் தான்.

    எங்கள் போராட்டம் தொடர்பாக அமைச்சர் ராஜ்மோகன் சட்டசபையில் பேசினார். எங்கள் துறை அமைச்சர் இன்னும் பேசவில்லை. ராஜ்மோகன் பேசும் போது எங்கள் கோரிக்கையை சொல்லிவிட்டார். வார விடுப்பு, மாத விடுப்பு எல்லாம் ஒலித்திருக்கிறது. இதனை வரவேற்கிறோம். 12 நாட்கள் களத்தில் நின்றதால், சட்டசபையில் பேசி இருக்கிறார்கள்.

    Advertisement

    விரைவில் முதல்வர் எங்களை சந்திப்பார் என்று நம்புகிறோம். எங்களின் கோரிக்கையை நிறைவேற்ற எவ்வளவு கால அவகாசம் தேவைப்படும்? உங்கள் தேர்தல் வாக்குறுதியை எப்போது நிறைவேற்றப் போகிறீர்கள்.. எங்களின் வலி 20 ஆண்டு கால வலி.. அந்த பிரச்சனைக்கு தீர்வு காணவில்லை. எங்களின் பணி நிரந்தரம் கண்டிப்பாக வேண்டும் என்று தெரிவித்துள்ளார்.

    English Summary

    Vijay: Gen Alpha Students Urge Vijay to Meet Sanitation Workers, Cite Unfulfilled Promises