சென்னை: அதிமுக உள்ளிட்ட கட்சிகளில் இருந்து தமிழக வெற்றிக் கழகத்தில் இணைந்த முன்னாள் எம்எல்ஏக்கள், முன்னாள் அமைச்சர்களுக்கு கட்சி பொறுப்புகள் வழங்கப்படாமல் இருந்ததால் அவர்கள் அதிருப்தியில் இருந்தனர். இதனை சமாளிக்கும் வகையில் அவர்களுக்கு பல முக்கிய பதவிகளை வழங்கியிருக்கிறார் தமிழக வெற்றிக் கழகத்தின் தலைவரும் முதல்வருமான விஜய்.
இந்த நிலையில் பல ஆண்டுகளாக அதிமுக திமுகவை எதிர்த்து அரசியல் செய்து வந்த தங்களை ஒதுக்கிவிட்டு புதிதாக வந்த அதிமுகவினருக்கு முன்னுரிமை அளித்துள்ளதால் சில மாவட்டங்களில் தவெக நிர்வாகிகளும் தொண்டர்களும் அதிருப்தியில் இருப்பதாக தகவல் வெளியாகி உள்ளது.
குறிப்பாக கரூர் புதுக்கோட்டை உள்ளிட்ட மாவட்டங்களில் நிர்வாகிகள் கடும் கொந்தளிப்பில் இருப்பதாக சொல்கின்றனர் தமிழக வெற்றிக் கழகத்தினர். இந்த தகவல் பனையூருக்கும் சென்றிருக்கும் நிலையில், அனைவரும் ஒருங்கிணைக்கும் வேலையில் இறங்கியுள்ளார்களாம்.. 2024இல் விஜய் தமிழக வெற்றிக் கழகத்தை ஆரம்பித்தபோது ஆளும் கட்சியாக இருந்த திமுக அதனை ஒரு பொருட்டாகவே கண்டு கொள்ளவில்லை. ஆனால், அப்போது எதிர்க் கட்சியாக இருந்த அதிமுக கூட்டணிக்கான கதவுகளை திறந்து வைத்திருந்தது. 2026 சட்டமன்றத் தேர்தலில் தமிழக வெற்றி கழகம் வாக்குகளை பிரிக்கும்.. 10 முதல் 15 எம்.எல்.ஏக்களையாவது பெறுமா என்ற கேள்வி எழுந்தது. காரணம் திமுக அதிமுக ஆகிய ஜாம்பவான் கட்சியுடன் ஒப்பிடும்போது புதிதாக உதயமான தமிழக வெற்றி கழகத்தின் முழுமையான கட்சி கட்டமைப்பு இல்லை என்பது தான். அதனை யாருமே பெரிதாக எடுத்துக்கொள்ளவில்லை. ஆனால் வெளியான தேர்தல் முடிவுகள் தமிழக அரசியல் களத்தையே புரட்டிப் போட்டது. முதல் தேர்தலில் வெற்றி பெற்று தமிழக முதலமைச்சரானார் விஜய். தனிப்பெரும்பான்மை இல்லாத சூழலில் காங்கிரஸ், இந்திய கம்யூனிஸ்ட், மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட், விடுதலை சிறுத்தைகள், இந்தியன் யூனியன் முஸ்லிம் லீக் உள்ளிட்ட கட்சிகளுடன் ஆதரவுடன் ஆட்சி தொடர்கிறது. அதே நேரத்தில் திமுக வலுவான எதிர்க்கட்சியாக அமர்ந்த நிலையில், அதிமுக மூன்றாவது இடத்திற்கு தள்ளப்பட்டது. இதை அடுத்து அந்த கட்சியில் அரசியல் குழப்பம் அதிகரித்தது. குறிப்பாக திமுகவுடன் அதிமுக கூட்டணி அமைக்க போகிறது என்ற தகவலால் சில எம்எல்ஏக்கள் அதிர்ச்சியில் இருந்தனர். உச்சபட்சமாக விஜயபாஸ்கர் அண்ட் கோ தங்கள் பதவியை ராஜினாமா செய்துவிட்டு தமிழக வெற்றிக் கழகத்தில் இணைந்தது, அப்போது அரசியல் வட்டாரத்தில் பெரும் பரபரப்பை கிளப்பியது. அது மட்டும் இல்லாமல் முன்னாள் எம்எல்ஏக்கள், முன்னாள் அமைச்சர்கள், முன்னாள் எம்பிக்கள், மேயர், கவுன்சிலர் என பலரும் தமிழக வெற்றிக் கழகத்தை நோக்கி படையெடுத்து வருகின்றனர். இதனால் பல மாவட்டங்களில் தமிழக வெற்றிக் கழகத்தின் அரசியல் பலம் அதிகரித்து இருக்கிறது. குறிப்பாக கரூர், புதுக்கோட்டை, விருதுநகர் என பல மாவட்டங்களில் முக்கிய முகங்களாக இருந்த நிர்வாகிகள் தமிழக வெற்றி கழகத்திற்கு வந்தனர். அதே நேரத்தில் அவர்களுக்கு உரிய பதவிகளை வழங்க வேண்டிய நெருக்கடி விஜய்க்கு இருந்தது. ஏற்கனவே வந்த தங்களுக்கே பதவிகள் வழங்காததால் புதிதாக யாரும் வரவேண்டாம் என தமிழக வெற்றிக் கழகத்திற்கு தாவியவர்கள் எச்சரிக்கை விடுத்ததாக சொல்லப்பட்டது. இதை அடுத்து எம்ஆர் விஜயபாஸ்கர், சி விஜயபாஸ்கர், மரகதம் குமாரவேல் உள்ளிட்டோருக்கு கட்சி பொறுப்பு வழங்கப்பட்டிருக்கிறது. உள்ளாட்சி தேர்தல் வர இருக்கும் நிலையில் அவர்களை உற்சாகப்படுத்த இந்த நடவடிக்கையை விஜய் எடுத்து இருக்கிறார் என்கின்றனர். குறிப்பாக முன்னாள் அமைச்சர் சி விஜயபாஸ்கருக்கு புதுக்கோட்டை மாவட்ட அமைப்பு செயலாளர் பொறுப்பும், கரூர் முன்னாள் அமைச்சர் எம் ஆர் விஜயபாஸ்கருக்கு மாவட்டத்தின் அமைப்புச் செயலாளர் பதவியுடன், துணை பொது செயலாளர் பொறுப்பும் வழங்கப்பட்டிருக்கிறது. இசக்கி சுப்பையா தென்காசி மாவட்ட அமைப்பு செயலாளராகவும், மரகதம் குமரவேல் துணை பொதுச்செயலாளராகவும் நியமிக்கப்பட்டு இருக்கிறார். மேலும் அதிமுகவிலிருந்து தமிழக வெற்றி கழகத்திற்கு வந்த தாராபுரம், பெருந்துறை பகுதிகளை சேர்ந்த முன்னாள் எம்எல்ஏக்களுக்கு கட்சி பொறுப்பு அறிவிக்கப்படவில்லை. இதற்கிடையே புதிதாக வந்தவர்களுக்கு கட்சியில் முக்கிய பொறுப்புகள் வழங்கப்பட்டுள்ளது, ஏற்கனவே இருக்கும் நிர்வாகிகளை அதிருப்தியில் ஆழ்த்தியுள்ளதாக சொல்லப்படுகிறது. குறிப்பாக கட்சி தொடங்கிய காலத்துக்கு முன்னதாக அதாவது, ரசிகர் மன்றம் - விஜய் மக்கள் இயக்க காலத்திலிருந்து விஜயுடன் பயணித்து கட்சியை வளர்க்க உதவிய தொண்டர்களுக்கு உரிய முக்கியத்துவத்தை அளிக்கவில்லை என்பது குற்றச்சாட்டாக இருக்கிறது. தேர்தலுக்குப் பிறகு கட்சியில் இணைந்தவர்களுக்கு மாவட்ட மாநில பொறுப்பு வழங்கப்படுவது ஏன் என்ற கேள்வியும் சில நிர்வாகிகள் மத்தியில் எழுந்துள்ளது. அதே நேரத்தில் இந்த விவகாரக் குறித்து தமிழக வெற்றி கழகத்தின் தலைமைக்கும் தகவல் சென்றுள்ளது. இதனையடுத்து அவர்களை சமாதானப்படுத்தும் முயற்சியில் விஜய் தரப்பு ஈடுபட்டுள்ளதாக சொல்லப்படுகிறது. தற்போது 2026 தமிழக சட்டசபை தேர்தலில் சில மாவட்டங்களை மொத்தமாக தவெக அள்ளினாலும் 10க்கும் மேற்பட்ட மாவட்டங்களில் ஒரு தொகுதியில் கூட வெல்லவில்லை. எனவே அந்த தொகுதியில் கவனம் செலுத்துவதற்காக தான் அங்கு பலமாக இருந்த நிர்வாகிகளுக்கு பொறுப்பு கொடுக்கப்பட்டுள்ளது. மேலும், வரும் உள்ளாட்சித் தேர்தலில் மேயர் போன்ற பதவிகளை பிடிக்க வேண்டுமானால் இது போன்ற முக்கிய தலைவர்களின் ஆதரவு அவசியம் என்பதால்தான் அவர்களுக்கு பொறுப்புகள் வழங்கப்பட்டு இருப்பதாகவும், அடுத்தடுத்து நகர், மாநகர், ஒன்றிய பொறுப்புகள் அறிவிக்கப்பட இருக்கும் நிலையில் அதில் கட்சியில் உழைத்தவர்களுக்கே முன்னுரிமை வழங்கப்படும் என்ற தகவல் பாஸ் செய்யப்பட்டு வருகிறதாம்.தமிழக வெற்றி கழகம்
விஜய்
அதிமுக
தவெகவினர் அதிர்ச்சி
சி விஜயபாஸ்கர்
மரகதம் குமரவேல்
விஜய் மக்கள் இயக்கம்
தவெக தலைமை
உள்ளாட்சித் தேர்தல்