சென்னை: மற்றொரு சர்ச்சையில் சிக்கி இருக்கிறது தமிழக வெற்றிக் கழகத் தலைவர் விஜய் தலைமையிலான தமிழக அரசு. முதல்வர் விஜய் மற்றும் அமைச்சர்கள் உள்ளிட்டோர் குறித்த கேள்விகளுக்கு தகவல் அறியும் உரிமைச் சட்டத்தின் கீழ் பதில் அளிப்பதில்லை என குற்றம் சாட்டப்படுகிறது.
சாமானிய மக்களும் அரசை கேள்வி கேட்கலாம், அரசின் செயல்பாடுகளை தெரிந்து கொள்ளலாம் என்பதற்காக கொண்டுவரப்பட்டது தகவல் அறியும் உரிமை சட்டம். ஆர்டிஐ என அழைக்கப்படும் இந்த சட்டத்தை மத்திய அரசு கொண்டு வந்தது/.
அரசு மற்றும் பொதுத்துறை தொடர்பான தகவல்களை பெறுவதற்கு இந்திய குடிமகன்கள் யார் வேண்டுமானாலும் விண்ணப்பிக்கலாம் பத்து ரூபாய் மட்டுமே இதற்கு கட்டணம். ஒரு துறை தொடர்பாக நீங்கள் கேள்வி கேட்டு மனு அளித்தால் 30 நாட்களுக்குள் அது தொடர்பான துறையின் அதிகாரியும், பொது தகவல் அலுவலரும் பதில் அளிக்க வேண்டும். ஒரு வேளை அவர் மறுத்தால் மாநிலத் தகவல் ஆணையருக்கு விண்ணப்பிக்கலாம். அதே நேரத்தில் பொது தகவல் அலுவலர் உரிய பதில் அளிக்காவிட்டால் 25 ஆயிரம் ரூபாய் வரை அவதாரம் விதிக்கப்படும் என்பது குறிப்பிடத்தக்கது. இந்த நிலையில் தான் சர்ச்சை ஒன்றில் சிக்கி இருக்கிறது முதல்வர் விஜய் தலைமையிலான தவெக அரசு. ஊழலற்ற, லஞ்சமற்ற வெளிப்படையான நிர்வாகம் வழங்கப்படும் என முதல்வர் விஜய் பிரச்சாரத்தின் போது கூறி இருந்தார். ஆனால் தமிழக வெற்றிக் கழக ஆட்சியில் தகவல் அறியும் உரிமைச் சட்டத்தின் மூலம் எழுப்பப்படும் கேள்விகளுக்கு பதில் அளிப்பதில்லை என்ற குற்றச்சாட்டு எழுந்துள்ளது. குறிப்பாக அதிகாரிகள் மாற்றம், புதிய அறிவிப்புகள், திட்ட நிதி ஒதுக்கீடு, பல்வேறு புதிய பணியிட நியமனங்கள் தொடர்பாக உரிய அறிவிப்பும் வெளிப்படைத்தன்மை இல்லை என்று குற்றச்சாட்டப்படுகிறது. குறிப்பாக முதல்வர் விஜய் தொடர்பான கேள்விகளுக்குக் கூட தமிழக அரசின் பொதுத்துறை நிறுவனங்களைச் சேர்ந்த தகவல் அலுவலர்கள் பதில் அளிப்பதில்லையாம். சமீபத்தில் பல்வேறு மாவட்டங்களுக்கு தமிழ்நாடு முதலமைச்சர் விஜய் சுற்றுப்பயணம் செய்தார். அப்போது அவர் செல்லும் வழிகளில் இரும்பு தடுப்புகள் அமைக்கப்பட்டு வாகன போக்குவரத்து நிறுத்தப்பட்டது. குறிப்பாக சேலம் பயணத்தின் போது 6 கோடி ரூபாய் செலவானதாக கடும் விமர்சனம் முன்வைக்கப்பட்டது. ஆனால் அதனை ஆளும் தரப்பு மறுத்தது. சமீபத்தில் முதல்வர் விஜய் லண்டன் பயணம் சென்றபோதும் இதேபோல் தான் சர்ச்சை வெடித்தது. இதற்கு எவ்வளவு பணம் செலவானது? அரசு பணமா? அல்லது விஜயின் சொந்த செலவா? என தமிழ்நாடு அரசும் சொல்லவில்லை. இதை அடுத்து முதலமைச்சர், அமைச்சர் மற்றும் உயரதிகாரிகளின் பயணம் தொடர்பான வரவு செலவு விவரங்களை கேட்டு பலரும் தகவல் அறியும் உரிமைச் சட்டத்தின் மூலம் மனு செய்து இருக்கின்றனர். அதில் முதல்வர் விஜய் தொடர்பான கேள்விகளுக்கு பதில் தர முடியாது என தகவல் அறியும் சட்ட மனுக்கள் புறக்கணிக்கப்பட்டுள்ளது. மேலும் மனித வள மேலாண்மை துறையும் அரசு ஊழியர்கள் தொடர்பான கேள்விகளுக்கு பதில் அளிப்பதில்லையாம். முதல்வர் குறித்த எந்த விவரங்களையும் பகிரக் கூடாது என 'ஒருவர்' ஸ்ட்க்ரிக்ட் உத்தரவு போட்டதால் தான் இப்படி என்கின்றனர் தலைமைச் செயலக வட்டாரத்தினர்.