ஃபைல்ஸ் எங்கே.. உடனே எடுங்க.. மாஜி அமைச்சர்களுக்கு குறி? கோட்டையில் சுழலும் விஜய்யின் 'ஆக்சன்'

  • சென்னை: கடந்த திமுக அமைச்சரவையில் செல்வாக்குடன் வலம் வந்த 3 மிக முக்கியமான முன்னாள் அமைச்சர்களைக் குறிவைத்து வழக்குகளை வலுப்படுத்த லஞ்ச ஒழிப்புத்துறைக்கு (DVAC) முதல்வர் விஜய் க்ரீன் சிக்னல் கொடுக்கப்பட்டுள்ளதாகக் கூறப்படுகிறது.

    Advertisement

    தமிழகத்தில் சுமார் 60 ஆண்டுகால திராவிடக் கட்சிகளின் ஆதிக்கத்தை உடைத்தெறிந்து, கடந்த மே 10-ஆம் தேதி தமிழகத்தின் புதிய முதலமைச்சராகப் பொறுப்பேற்றார் தமிழக வெற்றிக் கழகத்தின் (தவெக) தலைவர் சி. ஜோசப் விஜய். கடந்த மே 4-ஆம் தேதி வெளியான தேர்தல் முடிவுகளில் 108 இடங்களைக் கைப்பற்றி தனிப்பெரும் கட்சியாக உருவெடுத்த தவெக, காங்கிரஸ், விசிக, இடதுசாரிகள் மற்றும் ஐயுஎம்எல் ஆகிய கட்சிகளின் ஆதரவோடு மே 13 அன்று சட்டமன்றத்தில் தனது பெரும்பான்மையை நிரூபித்தது. அண்மையில் மே 21 அன்று 23 புதிய அமைச்சர்களுடன் தனது அமைச்சரவையையும் விரிவுபடுத்தி, முழுவீச்சில் ஆட்சியைத் தொடங்கியுள்ளார் முதல்வர் விஜய்.

    Advertisement

    ஆட்சிப் பொறுப்பேற்றது முதலே கோட்டையில் கோப்புகள் வேகமாக நகரத் தொடங்கியுள்ளன. குறிப்பாக, கடந்த திமுக ஆட்சியில் நடந்ததாகக் கூறப்படும் முறைகேடுகள், ஊழல் புகார்கள் மற்றும் நிலுவையில் உள்ள வழக்குகள் மீதான விசாரணையைத் தீவிரப்படுத்த முதல்வர் விஜய் உள்துறை மற்றும் லஞ்ச ஒழிப்புத்துறை அதிகாரிகளுக்குக் கடுமையான உத்தரவுகளைப் பிறப்பித்துள்ளதாகத் தலைமைச் செயலக வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.

    திமுக மீது பாயும் 'ஆக்ஷன்' வியூகம்:

    தேர்தல் பிரச்சாரங்களின் போதே "ஊழலற்ற நேர்மையான நிர்வாகம்" என்பதை முதன்மை முழக்கமாக முன்வைத்த விஜய், தற்போது அதனைச் செயலாக்கத் திட்டமிட்டுள்ளார். கடந்த திமுக அமைச்சரவையில் செல்வாக்குடன் வலம் வந்த 3 மிக முக்கியமான முன்னாள் அமைச்சர்களைக் குறிவைத்து வழக்குகளை வலுப்படுத்த லஞ்ச ஒழிப்புத்துறைக்கு (DVAC) க்ரீன் சிக்னல் கொடுக்கப்பட்டுள்ளதாகக் கூறப்படுகிறது.

    Advertisement

    திமுகவின் மிக முக்கிய மூத்த தலைவர்களாகவும், கடந்த ஆட்சியில் அதிக அதிகாரம் கொண்ட துறைகளைக் கையாண்டவர்களாகவும் இருந்த இந்த 3 முன்னாள் அமைச்சர்கள் மீதான பழைய புகார்கள், வருமானத்திற்கு அதிகமாகச் சொத்து சேர்த்த வழக்குகள் மற்றும் துறை சார்ந்த டெண்டர் முறைகேடுகள் தொடர்பான ஆவணங்கள் தற்போது மறுஆய்வு செய்யப்பட்டு வருகின்றன.

    அந்த 3 முன்னாள் அமைச்சர்கள் யார்?

    தலைநகர அரசியல் வட்டாரங்களில் கசியும் தகவல்களின்படி, கீழ்வரும் 3 முக்கியப் புள்ளிகள் மீது முதற்கட்டமாக ஆக்சன் பாயலாம் என எதிர்பார்க்கப்படுகிறது:

    மேற்கு மண்டலத்தின் முக்கியப் புள்ளி: கடந்த ஆட்சியில் மின்சாரம் மற்றும் மதுவிலக்கு போன்ற முக்கியத் துறைகளைக் கையாண்ட, ஏற்கனவே மத்திய முகமைகளின் பிடியில் சிக்கிய கோவையின் மிக முக்கிய முன்னாள் அமைச்சர்.

    Advertisement

    டெல்டா மற்றும் மத்திய மாவட்டங்களின் முகமாக விளங்கிய மூத்த தலைவர்: கடந்த ஆட்சியில் உள்ளாட்சி மற்றும் நகராட்சி நிர்வாகத் துறையைக் கையாண்ட, டெண்டர் ஒதுக்கீடுகளில் பல்வேறு புகார்களை எதிர்கொண்ட முக்கியப் புள்ளி.

    வட தமிழகத்தின் செல்வாக்குமிக்க முன்னாள் அமைச்சர்: உயர்கல்வித் துறை அல்லது பொதுப்பணித்துறையைக் கையாண்டு, சமீபகாலமாகவே பல்வேறு சட்டச் சிக்கல்களில் சிக்கித் தவித்து வரும் ஒரு மூத்த திமுக தலைவர்.

    இந்த மூவர் மீதும் போதிய ஆதாரங்களைத் திரட்டி, சட்ட ரீதியாக எவ்வித முகாந்திரமும் நழுவிவிடாதபடி வழக்குகளை நீதிமன்றத்தில் நிறுத்த முதல்வர் விஜய் தரப்பு தீவிரமாக உள்ளதாகக் கூறப்படுகிறது. இதற்காகத் தனி சட்ட நிபுணர்கள் குழுவும் அமைக்கப்பட்டு ஆலோசனைகள் பெறப்பட்டு வருகின்றன.

    Advertisement

    அரசியல் களத்தில் அனல் பறக்கும் பரபரப்பு:

    திமுகவின் முன்னாள் முதல்வர் மு.க.ஸ்டாலின் கொளத்தூர் தொகுதியில் தோல்வியடைந்து, கட்சி தற்போது 59 இடங்களுடன் எதிர்க்கட்சி அந்தஸ்தில் இருக்கும் நிலையில், தவெக அரசின் இந்த அதிரடி நடவடிக்கை திமுகவினரை கடும் அதிர்ச்சியில் ஆழ்த்தியுள்ளது. இந்த விவகாரம் குறித்து திமுக தரப்பில், "இது முற்றிலும் அரசியல் பழிவாங்கும் நடவடிக்கை. மக்கள் மத்தியில் தங்களைக் காட்டிக்கொள்ளவே புதிய அரசு இந்த மிரட்டல் அரசியலில் ஈடுபடுகிறது; இதைச் சட்டப்படி எதிர்கொள்வோம்" என்று முணுமுணுப்புகள் கேட்கத் தொடங்கியுள்ளன.

    மறுபுறம், அமைச்சரவை விரிவாக்கத்திற்குப் பிறகு முதல்வர் விஜய் எடுக்கும் இந்த அதிரடி முடிவுகள், அவர் தேர்தல் வாக்குறுதிகளில் கூறிய "ஊழலுக்கு எதிரான ஆக்சன்" என்பதன் தொடக்கப்புள்ளி என்றே தவெக தொண்டர்கள் கொண்டாடி வருகின்றனர். வரும் நாட்களிலேயே இந்த வழக்குகளின் வேகம் மற்றும் கைது நடவடிக்கைகள் குறித்த அதிகாரப்பூர்வ நகர்வுகள் முழுமையாகத் தெரியவரும் என்பதால், தமிழக அரசியல் களம் தற்போதே அனல் பறக்கத் தொடங்கியுள்ளது.

    English Summary

    Vijay Government's Massive Crackdown: 3 Top DMK Ex-Ministers Under Scanner