100 டெண்டர்கள் திடீர் ரத்து.. அதிரடி நடவடிக்கை எடுத்த முதல்வர் விஜய்.. பரபர பின்னணி!

  • விஜய் தலைமையிலான அரசு ரிக்கி ராதன் பண்டிட்-க்கு வழங்கிய அரசு பதவி சர்ச்சைக்கு அடுத்ததாக சமீபத்தில் எதிர்கொண்ட விமர்சனம் என்றால் ஊரக வளர்ச்சித்துறை அமைச்சர் புஸ்ஸி ஆனந்தின் (N. Anand) துறையில் நடந்த ஒப்பந்தம் முறைகேடு தான். இதை சரி செய்யும் விதமாக அதிரடி நடவடிக்கையை எடுத்துள்ளார் முதல்வர்

    Advertisement

    விஜய் தலைமையிலான அரசு எடுத்திருக்கும் முக்கிய நிர்வாக சீர்திருத்த நடவடிக்கையாக 100-க்கும் மேற்பட்ட குறுகிய கால டெண்டர்களை ரத்து செய்துள்ளது.

    Advertisement

    ஊரக வளர்ச்சித் துறை, பஞ்சாயத்து, போக்குவரத்துத் துறை, பொதுப்பணித் துறை, மின்சாரத் துறை, சென்னை மாநகராட்சி, நகராட்சி நிர்வாகம் மற்றும் குடிநீர் வளங்கள் துறை உள்ளிட்ட பல்வேறு துறைகளில் வெளியிடப்பட்ட இந்த டெண்டர்கள் நிர்வாக காரணங்களுக்காக ரத்து செய்யப்பட்டுள்ளன.

    மே 13-ம் தேதி முதல் மே 22-ம் தேதி வரையிலான காலகட்டத்தில் வெளியிடப்பட்ட அனைத்து குறுகிய கால டெண்டர்களும் இந்த உத்தரவின் கீழ் ரத்து செய்யப்பட்டுள்ளதாக அரசு வட்டாரங்கள் தெரிவித்துள்ளன.

    குறுகிய கால டெண்டர்கள் என்பவை அவசரத் தேவைகளுக்காக விரைவாக வெளியிடப்படும் ஒப்பந்தங்கள் ஆகும். இவை சிறிய பணிகளுக்கு பயன்படுத்தப்படும் என்றாலும், சில சமயங்களில் முறைகேடுகள் நடைபெறும் வாய்ப்பு அதிகம் உள்ளது.

    Advertisement

    தமிழக வெற்றி கழகம் (தவெக) ஆட்சி பொறுப்பேற்ற பிறகு அரசு ஒப்பந்தங்கள் அனைத்தும் தீவிர ஆய்வுக்கு உட்படுத்தப்பட்டு வருகின்றன. இந்த ஆய்வின்போது விதிமீறல்கள் அல்லது நிர்வாகக் குறைபாடுகள் கண்டறியப்பட்டால் உடனடியாக டெண்டர்களை ரத்து செய்யும் கொள்கையை அரசு கடைபிடித்து வருகிறது. இந்த நடவடிக்கை காரணமாகவே 100-க்கும் மேற்பட்ட டெண்டர்கள் ரத்து செய்யப்பட்டுள்ளன.

    இந்த ரத்து உத்தரவு அரசு அதிகாரிகள் மத்தியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. டெண்டர்கள் யாருக்கு வழங்கப்பட்டன, அந்த முடிவுகளுக்கு பின்னால் இருந்த அதிகாரிகள் யார் என்பது குறித்த முழுமையான பட்டியல் தயாரிக்கும் பணி தற்போது வேகமாக நடைபெற்று வருகிறது.

    Advertisement

    ஏற்கெனவே சில அதிகாரிகள் முறைகேடுகளுக்காக சஸ்பெண்ட் செய்யப்பட்டுள்ள நிலையில், மேலும் பல அதிகாரிகள் இந்த விவகாரத்தில் சிக்கக்கூடும் என்ற அச்சம் நிலவுகிறது. அரசுக்கு இழப்பு ஏற்படுத்திய டெண்டர்கள் தொடர்பான முழு விசாரணையும் தொடங்கப்பட்டுள்ளது.

    சமீபத்தில் தமிழக ஊரக உள்ளாட்சித் துறை அமைச்சர் புஸ்ஸி ஆனந்த், குறுகிய மணி நேரத்திற்குள் டெண்டர் அறிவித்து, திறந்து, பணி ஆணை வழங்கிய விவகாரத்தில் பெரும் சர்ச்சையில் சிக்கினார்.

    காஞ்சிபுரம் மாவட்டத்தில் சுமார் ரூ.17 லட்சம் மதிப்பிலான குடிநீர் தொட்டி கட்டுமானப் பணிக்காக ஒரே நாளில் (காலை 9 மணிக்கு விடப்பட்டு மாலை 3 மணிக்கு முடிக்கப்பட்ட) இந்த டெண்டர் நடைமுறை நடைபெற்றது. எதிர்க்கட்சிகள் மற்றும் சமூக ஆர்வலர்கள் இதை ஊழல் என்று கடுமையாக விமர்சித்ததையடுத்து, நிர்வாக காரணங்களைக் கூறி இந்த டெண்டர் அறிவிப்பு ரத்து செய்யப்பட்டது.

    Advertisement

    பொதுவாக டெண்டர் கோர குறைந்தபட்சம் 15 நாட்கள் அவகாசம் அளிக்கப்பட வேண்டும் என்ற விதியை மீறி, 24 மணி நேரத்திற்கும் குறைவான அவகாசத்தில் இந்த இ-டெண்டர் முடிக்கப்பட்டது. மே 12 முதல் 19 வரை இணையத்தில் கிடைக்க வேண்டிய டெண்டர் ஆவணங்கள், மே 18 அன்று உருவாக்கப்பட்டு மே 19 அன்று மட்டுமே பதிவேற்றப்பட்டன. டெண்டர் அறிவிப்பு காலை 9 மணிக்குத் தொடங்கி மாலை 3 மணிக்குள் முடிக்கப்பட்டது. புஸ்ஸி ஆனந்த் அமைச்சராகப் பொறுப்பேற்று ஒரு சில நாட்களிலேயே இந்த சர்ச்சை வெடித்தது.

    காஞ்சிபுரம் மாவட்டம் காரைப்பேட்டையில் ரூ.16.83 லட்சம் மதிப்பிலான மேல்நிலை நீர்த்தேக்கத் தொட்டி டெண்டர் நடைமுறைகளில் தகுந்த அனுமதியின்றி குறுகிய கால டெண்டரை வெளியிட்டதற்காக காஞ்சிபுரம் மாவட்ட ஆட்சியரின் உத்தரவின் பேரில் இரண்டு அரசு அதிகாரிகள் சஸ்பெண்ட் செய்யப்பட்டனர்.

    Advertisement

    இந்த நிலையில் தான் தற்போது 100 டெண்டர்கள் ரத்து செய்யப்பட்டு உள்ளது. மக்களின் வரிப்பணம் சரியான முறையில் பயன்படுத்தப்பட வேண்டும், எந்தவித முறைகேடும் இல்லாமல் அரசு பணிகள் நடைபெற வேண்டும் என்ற நோக்கத்துடன் இந்த முடிவு எடுக்கப்பட்டதாக கருத்து நிலவுகிறது.

    English Summary

    The Tamil Nadu government has cancelled more than 100 short-term tenders issued between May 13 and 22 across departments including rural development, panchayats, transport, public works, electricity and municipal bodies citing administrative reasons and procedural violations.