இது மட்டும் நடந்தால்..அடுத்ததும் விஜய் தான் சிஎம்! மகளிருக்கு மாதம் ரூ.2,500.. கோட்டையில் பரபர ப்ளான்

  • சென்னை: தமிழக வெற்றிக் கழக அரசு தேர்தல் வாக்குறுதிகளில் மிகவும் முக்கியமானதாக கருதப்படும் பெண்களுக்கு மாதம் ரூ.2,500 வழங்கும் திட்டத்தை விரைவாக செயல்படுத்துவது தொடர்பாக முதல்வர் விஜய் தொடர்ந்து ஆலோசனை நடத்தி வருவதாக தகவல்கள் வெளியாகியுள்ளன. குறிப்பாக, திட்டத்தை அறிவிப்பது மட்டுமல்லாமல், நீண்ட காலத்திற்கு எந்த தடையும் இல்லாமல் செயல்படுத்துவதற்கான நிதி ஆதாரங்களை உறுதி செய்வதில் அரசு கவனம் செலுத்தி வருவதாக கூறப்படுகிறது.

    Advertisement

    தமிழக சட்டமன்றத் தேர்தலின்போது பெண்களுக்கு மாதந்தோறும் ரூ.2,500 வழங்கப்படும் என்று தமிழக வெற்றிக் கழகம் முக்கிய வாக்குறுதி அளித்திருந்தது. ஆட்சி அமைந்த பிறகு இந்த திட்டம் எப்போது நடைமுறைக்கு வரும் என்ற எதிர்பார்ப்பு பெண்கள் மத்தியில் அதிகரித்து வருகிறது.

    Advertisement

    இந்த நிலையில், கோட்டையில் நடைபெற்று வரும் உயர்மட்ட ஆலோசனைகளில் இந்த திட்டம் முக்கிய இடம் பிடித்து வருவதாக கூறப்படுகிறது. அரசின் வருவாய் நிலை, செலவினங்கள், புதிய திட்டங்களுக்கான நிதி ஒதுக்கீடு உள்ளிட்ட விவரங்கள் குறித்து அதிகாரிகளிடம் முதல்வர் விஜய் விரிவாக கேட்டறிந்துள்ளனர்.

    மகளிர் உரிமைத் தொகை

    முன்னாள் திமுக ஆட்சியில் செயல்படுத்தப்பட்ட மகளிர் உரிமைத் தொகை திட்டத்தின் விவரங்களும் இந்த ஆலோசனையில் எடுத்துரைக்கப்பட்டதாக கூறப்படுகிறது. அந்த திட்டத்தின் கீழ் சுமார் 1.31 கோடி பெண்களுக்கு மாதம் ரூ.1,000 வழங்கப்பட்டு வந்தது. இதற்காக மாதந்தோறும் ரூ.1,310 கோடியும், ஆண்டுக்கு ரூ.15,720 கோடியும் செலவிடப்பட்டதாக அதிகாரிகள் விளக்கியதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.
    அதே எண்ணிக்கையிலான பயனாளிகளுக்கு மாதம் ரூ.2,500 வழங்க வேண்டுமெனில், மாதத்திற்கு ரூ.3,275 கோடி தேவைப்படும் என்றும், ஆண்டுக்கு சுமார் ரூ.39,300 கோடி செலவாகும் என்றும் அதிகாரிகள் கணக்கீடு வழங்கியதாக கூறப்படுகிறது.

    Advertisement

    மாதம் 2500 ரூபாய்

    இதையடுத்து, இந்த மிகப்பெரிய திட்டத்தை தொடர்ந்து செயல்படுத்துவதற்கு தேவையான நிதி எவ்வாறு திரட்டப்படலாம் என்பது குறித்து முதல்வர் விஜய் அதிகாரிகளுடன் விரிவாக ஆலோசித்ததாக தகவல்கள் தெரிவிக்கின்றன. சில முக்கிய கட்டமைப்பு திட்டங்களை தற்காலிகமாக ஒத்திவைத்து, அந்த நிதியை இந்த திட்டத்திற்கு மாற்றுவது சாத்தியமா என்பதையும் அவர் கேட்டறிந்ததாக கூறப்படுகிறது.

    கட்டுமான திட்டம்

    குறிப்பாக, ஸ்மார்ட் மீட்டர் திட்டம், உயர்மட்ட மேம்பாலங்கள், புதிய அரசு கட்டிடங்கள், பள்ளிக் கட்டடங்கள் மற்றும் சாலை அமைக்கும் திட்டங்கள் போன்றவற்றுக்காக ஒதுக்கப்பட்டுள்ள நிதி விவரங்கள் குறித்து ஆய்வு செய்யப்பட்டதாக தகவல்கள் வெளியாகியுள்ளன. அதேநேரத்தில், பயனாளிகள் எண்ணிக்கையை மறுஆய்வு செய்வது குறித்தும் ஆலோசனை நடைபெற்றதாக கூறப்படுகிறது. திமுக ஆட்சியில் பயனடைந்த 1.31 கோடி பெண்களில் தகுதி அடிப்படையில் சிலரை நீக்கினால், மொத்த பயனாளிகள் எண்ணிக்கை சுமார் 80 லட்சமாக குறைய வாய்ப்பு இருப்பதாக அதிகாரிகள் தரப்பில் கணக்கீடுகள் முன்வைக்கப்பட்டதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.

    Advertisement

    ரூ.2,000 கோடி செலவு

    அவ்வாறு 80 லட்சம் பேருக்கு மாதம் ரூ.2,500 வழங்கினால், மாதச் செலவு ரூ.2,000 கோடியாகவும், ஆண்டு செலவு ரூ.24,000 கோடியாகவும் இருக்கும் என்று அதிகாரிகள் மதிப்பீடு அளித்ததாக கூறப்படுகிறது. இதன் மூலம் திட்டத்தை நிதி ரீதியாக சமநிலைப்படுத்த முடியுமா என்பது குறித்தும் ஆலோசனை நடைபெற்றதாக தகவல்கள் தெரிவிக்கின்றன. ஆனால், இந்த திட்டத்தின் முக்கிய நோக்கம் தேர்தல் வாக்குறுதியை நிறைவேற்றுவது மட்டுமல்ல, பெண்களுக்கு மாதந்தோறும் எந்த தாமதமும் இல்லாமல் தொகை கிடைப்பதை உறுதி செய்வதுதான் என்று அரசு வட்டாரங்கள் கூறுகின்றன.

    முதல்வர் விஜய்

    ஒருமுறை திட்டம் தொடங்கப்பட்ட பிறகு இடைநிறுத்தம் அல்லது நிதி பற்றாக்குறை போன்ற பிரச்சனைகள் ஏற்படக் கூடாது என்பதில் முதல்வர் விஜய் உறுதியாக இருப்பதாக தகவல்கள் வெளியாகியுள்ளன. அதனால்தான் திட்டத்தின் நிதி ஆதாரம், பயனாளிகள் தகுதி, நிர்வாக கட்டமைப்பு, செலவின மேலாண்மை உள்ளிட்ட அனைத்து அம்சங்களும் விரிவாக ஆய்வு செய்யப்பட்டு வருவதாக கூறப்படுகிறது.

    Advertisement

    அறிவிப்பு எப்போது?

    இருப்பினும், பெண்களுக்கு மாதம் ரூ.2,500 வழங்கும் திட்டம் எப்போது தொடங்கப்படும், பயனாளிகள் யார், தகுதிகள் என்ன என்பது குறித்து விரைவில் அதிகாரப்பூர்வ அறிவிப்பு வரலாம் என்கின்றனர் தலைமைச் செயலக வட்டாரங்கள். ஒருவேளை இந்த அறிவிப்பு வந்தால் விஜய்யின் செல்வாக்கு பெண்களிடையே அதிகரிக்கும் என்கின்றனர் தவெகவினர். தமிழக அரசியலில் மிகப்பெரிய தாக்கத்தை ஏற்படுத்தக்கூடிய இந்த திட்டம் குறித்து விரைவில் முக்கிய அறிவிப்பு எப்போது என்ற எதிர்பார்ப்பு அரசியல் வட்டாரங்களிலும், பொதுமக்கள் மத்தியிலும் நிலவி வருகிறது.

    English Summary

    Tamilaga Vetri Kazhagam government reportedly studies funding options for its promised ₹2,500 monthly assistance scheme for women.