விஜய் கையில் ப்ளூ பிரிண்ட்.. டெல்லி கிளம்பறார்.. ராகுல் காந்திக்கு உடனே போன்.. அங்கேதான் ஹைலைட்

  • சென்னை: தமிழகத்தின் புதிய முதல்வராகப் பொறுப்பேற்றுள்ள த.வெ.க. தலைவர் விஜய், தனது முதல் அரசு முறைப் பயணமாக அடுத்த வாரம் டெல்லி செல்லத் திட்டமிட்டுள்ளார். ஆளுங்கட்சி மற்றும் எதிர்க்கட்சித் தலைவர்களைச் சந்தித்து அரசியல் ரீதியான இணக்கத்தை உருவாக்கத் திட்டமிட்டுள்ள இந்த அதிரடி பயணம், தமிழகத்தின் எதிர்கால நிர்வாகத்தில் புதிய திருப்பத்தை ஏற்படுத்தும் என எதிர்பார்க்கப்படுகிறது. முதல்வரின் இந்த டெல்லி வருகையைத் தொடர்ந்து, தமிழகத்தின் பொருளாதார தேவைகள் பூர்த்தியாகுமா? என்ற எதிர்பார்ப்பு இப்போதே கிளம்ப தொடங்கிவிட்டது.

    Advertisement

    கடந்த ஆண்டு செப்டம்பர் 27-ம் தேதி கரூரில் நடைபெற்ற மக்கள் சந்திப்பு நிகழ்ச்சியில் ஏற்பட்ட துரதிர்ஷ்டவசமான கூட்ட நெரிசலில் 41 பேர் உயிரிழந்த சம்பவம், அரசியல் ரீதியாக பெரும் தாக்கத்தை ஏற்படுத்தியது.

    Advertisement

    அந்தச் சம்பவம் தொடர்பாக கடந்த ஜனவரி 12 மற்றும் 19-ம் தேதிகளில் டெல்லி சி.பி.ஐ. அலுவலகத்தில் விஜய் நேரில் ஆஜராகி விளக்கம் அளித்திருந்தார். அன்று ஒரு கட்சியின் தலைவராக டெல்லி சென்ற விஜய், இன்று தமிழகத்தின் முதல்வராக அந்த மண்ணில் மீண்டும் கால் பதிக்க இருப்பது அரசியல் களத்தில் பெரும் எதிர்பார்ப்பை உருவாக்கியுள்ளது.

    முதல்வர் விஜய் டெல்லி பயணம்

    முதல்வராகப் பொறுப்பேற்ற பிறகு மேற்கொள்ளப்படும் இந்த முதல் டெல்லி பயணத்தை முன்னிட்டு, அங்குள்ள தமிழ்நாடு அரசு இல்லத்தில் அவர் தங்கும் அறை மற்றும் ஆலோசனைக் கூடங்களைப் புதுப்பிக்கும் பணிகள் தீவிரமாக நடைபெற்று வருகின்றன. இந்தப் பணிகளை மேற்பார்வையிடவும், ஒருங்கிணைக்கவும் தமிழக அரசு அதிகாரிகள் விரைவில் டெல்லி செல்ல உள்ளனர். முதல்வரை வரவேற்க அரசு மற்றும் கட்சி ரீதியாக பிரம்மாண்டமான ஏற்பாடுகள் செய்யத் திட்டமிடப்பட்டுள்ளன.

    Advertisement

    இந்த டெல்லி பயணத்தின் மிக முக்கிய நோக்கமாக, தமிழகத்தின் தற்போதைய பொருளாதாரச் சூழலைச் சீரமைப்பதே கருதப்படுகிறது. கடந்த வாரம் நிதித்துறை உயர் அதிகாரிகளுடன் முதல்வர் விஜய் மேற்கொண்ட விரிவான ஆலோசனையில், முந்தைய திமுக ஆட்சியின் போது ஏற்பட்ட கடும் நிதி நெருக்கடி தமிழகத்திற்குப் பெரும் சவாலாக இருப்பது தெரியவந்தது.

    இந்த நெருக்கடியை எப்படி எதிர்கொள்வது என்பது குறித்து அதிகாரிகள் ஆலோசனைகளை வழங்கியபோது, மத்திய அரசுடன் இணக்கமான போக்கை கடைப்பிடிப்பதே தற்போதைய சூழலில் புத்திசாலித்தனமான முடிவாக இருக்கும் என்று அவர்கள் வலியுறுத்தினார்களாம்.

    அதற்கு விஜய், மத்திய அரசை மட்டுமே சார்ந்து இருக்காமல், சொந்தமாக நிதி ஆதாரங்களைத் திரட்ட மாற்று வழிகள் ஏதும் இல்லையா என்று கேள்வி எழுப்பினாராம்..

    Advertisement

    கையில் ரிப்போர்ட்

    இதற்கு அதிகாரிகள் பதிலளிக்கும்போது, 2026-2027-ம் ஆண்டுக்கான மாநில பட்ஜெட்டைத் தயாரிக்கும் நெருக்கடியில் அரசு இருப்பதால், குறுகிய காலத்தில் மாற்றுகளை உருவாக்குவது சாத்தியமற்றது என்றும், தற்போது மத்திய அரசின் நிதியுதவியைப் பெறுவதே அவசியமானது என்றும் விளக்கமளித்தனர். இதனை ஏற்றுக்கொண்ட முதல்வர், மத்திய அரசிடமிருந்து பெற வேண்டிய நிதி மற்றும் வளர்ச்சித் திட்டங்களுக்கான கோரிக்கை லிஸ்ட்டை தயார் செய்ய உத்தரவிட்டுள்ளாராம்.

    டெல்லி பயணத்தின்போது பிரதமர் மோடியைச் சந்திக்க ஏற்கனவே பிரதமர் அலுவலகத்தில் அனுமதி கோரப்பட்டுள்ளது. பிரதமர் அரசுப் பணிகளிலும், கட்சி நிகழ்ச்சிகளிலும் தொடர்ந்து பிஸியாக இருப்பதால், நேரம் ஒதுக்குவதில் சற்றே தாமதம் நிலவுகிறது.

    Advertisement


    டெல்லி ஹைலைட் இதுதான்

    நேரம் கிடைத்தவுடன் டெல்லி விரைந்து பிரதமரைச் சந்தித்து, தமிழகத்தின் வளர்ச்சித் திட்டங்களுக்கான மனுவை வழங்க முதல்வர் தயாராக உள்ளார். மேலும், மத்திய உள்துறை அமைச்சர் அமித் ஷா மற்றும் நிதி அமைச்சர் நிர்மலா சீதாராமன் ஆகியோரையும் சந்தித்து, தமிழகத்தின் பொருளாதாரத் தேவைகள் குறித்து விரிவாகப் பேச உள்ளார்.

    அரசியல் ரீதியாக, இந்த டெல்லி பயணம் இருதரப்புத் தொடர்புகளைப் பலப்படுத்தும் முயற்சியாகவும் பார்க்கப்படுகிறது. இதில் இன்னொரு ஹைலைட் என்னவென்றால், ஆளும் பாஜக தலைவர்களைச் சந்திப்பது மட்டுமின்றி, காங்கிரஸ் கட்சியின் மூத்த தலைவர்களான சோனியா காந்தி, ராகுல் காந்தி மற்றும் மல்லிகார்ஜூன கார்கே ஆகியோரையும் சந்திக்க விஜய் திட்டமிட்டுள்ளாராம்.

    Advertisement

    ராகுல் காந்திக்கு போன்

    அதுமட்டுமல்ல, இந்த டெல்லி வருகை குறித்து ராகுல் காந்தியிடம் விஜய் ஏற்கனவே தொலைபேசி வாயிலாகத் தகவல் தெரிவித்துவிட்டதாகத் தகவல்கள் தெரிவிக்கின்றன.

    ஒருபுறம் ஆளுங்கட்சியுடன் சுமுகமான உறவை மேம்படுத்துவது, மறுபுறம் எதிர்க்கட்சித் தலைவர்களுடன் இணக்கமான சூழலைப் பேணுவது என, முதல்வரின் இந்த 'மாஸ்டர் பிளான்' பயணம், தமிழகத்தின் எதிர்கால அரசியலிலும், நிர்வாகத்திலும் ஒரு முக்கிய மைல்கல்லாக அமையும் என்றே தெரிகிறது.. பொறுத்திருந்து பார்ப்போம்...!!

    English Summary

    Vijay Heads to Delhi… What’s in the Blueprint He’s Carrying? The Call to Rahul Gandhi Turns Into the Real Highlight