சென்னை: நேற்று நடந்த சுதந்திர தின விழாவில் தமிழக வெற்றிக் கழகத்தின் தலைவரும் முதல்வருமான விஜய் முதன்முறையாக தேசிய கொடியை ஏற்றினார். முதல்வர் தேசிய கொடியை ஏற்றிய வீடியோ சமூக வலைத்தளங்களில் டிரெண்டாகி வருகிறது. இதை தவெகவினர் கொண்டாடி வரும் நிலையில், இந்த உரிமைக்குப் பின்னால் உள்ள அரசியல் வரலாறு குறித்தும் மற்றொரு தரப்பினர் பதிவிட்டு வருகிறார்கள்.
ஒவ்வொரு ஆண்டும் ஆகஸ்ட் 15ம் தேதி சுதந்திர தினம் கோலாகலமாக கொண்டாடப்படும். நாம் போராடி பெற்ற சுதந்திரத்தை கொண்டாடும் வகையிலும், அதற்காக உயிர் தியாகம் செய்தோரை நினைவுகூரும் வகையில் சுதந்திர தினத்தை நாம் கொண்டாடுகிறோம். தேசிய தலைநகர் டெல்லியில் பிரதமரும், சென்னையில் முதல்வரும் தேசிய கொடியை ஏற்றுவார்கள்.
அதன்படி இந்தாண்டு சுதந்திர தினத்தையொட்டி நடைபெற்ற விழாவில் முதல்வர் விஜய் தேசிய கொடியை ஏற்றினார். இது தொடர்பான வீடியோ சமூக வலைத்தளங்களில் டிரெண்டானது. தங்கள் தலைவர் முதன்முறையாக தேசிய கொடியை ஏற்றுவதை விஜய் ரசிகர்களும், தமிழக வெற்றிக் கழக ஆதரவாளர்களும் கொண்டாடி வந்தனர். இந்த வீடியோவையும் சமூக வலைத்தளங்களில் பகிர்ந்தனர். அதேநேரம் மாநிலத்தில் முதலமைச்சர் மற்றும் மாநில அரசின் தலைவர்கள் சுதந்திர தினத்தன்று தேசிய கொடியேற்றும் உரிமை குறித்தும் சிலர் சமூக வலைத்தளங்களில் பதிவிட்டு வருகிறார்கள். அதாவது 1974ஆம் ஆண்டுக்கு முன்பு வரை சுதந்திர தினத்தன்றும் சரி, குடியரசு தினத்தன்றும் சரி மாநில தலைநகரங்களில் ஆளுநர்களே தேசிய கொடியை ஏற்றுவார்கள். மாநில அரசுகளின் அதிகாரம் மற்றும் மக்களால் தேர்ந்தெடுக்கப்பட்ட அரசின் முக்கியத்துவத்தை வலியுறுத்திய அப்போதைய தமிழக முதலமைச்சர் மு. கருணாநிதி, பிரதமர் இந்திரா காந்தியிடம் இது தொடர்பாக வலியுறுத்தினார். இதன் தொடர்ச்சியாகவே, சுதந்திர தினத்தன்று மக்களால் தேர்ந்தெடுக்கப்பட்ட முதலமைச்சர்கள் தேசிய கொடியை ஏற்றும் முறை உருவானது.. அதன்படி சுதந்திர தினத்தன்று முதல்வர்களும், குடியரசு தினத்தன்று ஆளுநர்களும் தேசிய கொடியை ஏற்றும் முறை உருவானது. இப்போது வரை அதை நடைமுறை தான் பின்பற்றப்படுகிறது. சுதந்திர தினத்தன்று மாநில முதல்வர்கள் கொடியேற்றும் நிலையில், குடியரசு தினத்தன்று ஆளுநர்கள் தேசிய கொடியை ஏற்றுகிறார்கள். இது தொடர்பாக திமுக ஆதரவு நெட்டிசன்கள், "இன்று விஜய் கொடியேற்றுவதற்கான உரிமைக்கு பின்னால், பல ஆண்டுகளுக்கு முன்பு கலைஞர் கருணாநிதி மேற்கொண்ட அரசியல் முயற்சியும் போராட்டமும் உள்ளது. அந்த வரலாற்றை மறந்துவிட கூடாது" என்று பதிவிட்டு வருகிறார்கள். விஜய்யின் கொடியேற்றும் நிகழ்வு என்பது ஒரு விழாவாக மட்டுமின்றி, மாநில உரிமை தொடர்பானது என்றும் அவர்கள் பதிவிட்டு வருகிறார்கள். விஜய் ஆதரவாளர்களும் இதற்கு பதிலடி கொடுத்து வருகிறார்கள். அதில் அவர்கள், "அன்றைய காலத்தில் கருணாநிதி பெற்று தந்த உரிமைகளை யாரும் மறுக்கவில்லை. ஆனால், அதன் பிறகு திமுக என்ற கட்சியே ஒரு குடும்பத்திற்கான கட்சியாக மாறிவிட்டது. அதை தான் நாங்கள் எதிர்க்கிறோம். அதை பற்றி வாய் திறக்காமல் இன்னும் எத்தனை காலத்திற்கு தான் பழைய விஷயங்களை பற்றியே பேசிக் கொண்டு இருப்பீர்கள்" என்று பதிலடி கொடுத்து வருகிறார்கள். இப்படி தான் முதல்வரின் சுதந்திர தின நிகழ்வு என்பது மிக பெரிய அரசியல் விவாதமாக சமூக வலைத்தளங்களில் மாறியுள்ளது.முதல்வர் விஜய்
கருணாநிதி
திமுக ஆதரவாளர்கள்
விஜய் ஆதரவாளர்கள்