ஜனநாயகன் பட ரிலீஸ் தேதி அறிவிப்பு.. விஜய் ரசிகர்களின் 6 மாத காத்திருப்பு முடிவுக்கு வந்தது

  • சென்னை: நடிகரும், தமிழக முதல்வருமான விஜய் நடித்துள்ள ஜனநாயகன் படம் வரும் 23 ஆம் தேதி ரிலீஸ் ஆகும் என படக்குழு அதிகாரப்பூர்வமாக அறிவித்துள்ளது. போர்க்களம் கடினமாக இருந்தால் வெற்றியும் பிரமாண்டமாக இருக்கும் என தெரிவித்து புதிய போஸ்டர் ஒன்றையும் படக்குழு வெளியிட்டுள்ளது. பொங்கல் பண்டிகைக்கு வெளியாகும் என ரசிகர்கள் எதிர்பார்த்து காத்திருந்த நிலையில் 6 மாதத்திற்கு பிறகு தற்போது ரிலீஸ் தேதி அறிவிக்கப்பட்டுள்ளது விஜய் ரசிகர்களை மகிழ்ச்சியில் ஆழ்த்தியுள்ளது.

    Advertisement

    தமிழகம் முழுக்க வரும் 23 ஆம் தேதி அன்றும், வெளிநாடுகளில் 24 ஆம் தேதியும் ஜனநாயகன் திரைப்படம் வெளியாகும் எனவும், இதற்கான முன்பதிவு வரும் ஞாயிற்றுக்கிழமை முதல் தொடங்கும் எனவும் விநியோகஸ்தர்கள் தரப்பில் சொல்லப்படுகிறது.

    Advertisement

    ஜனநாயகன் ரிலீஸ் தேதி அறிவிப்பு

    தமிழக முதல்வரும், நடிகருமான விஜய் நடித்துள்ள படம் ஜனநாயகன். இந்த படம் கடந்த பொங்கலுக்கு ரிலீஸ் ஆக இருந்த நிலையில், சென்சார் சான்று கிடைப்பதில் சிக்கல் எழுந்தது. இதனால், இந்த படம் ரிலீஸ் ஆகாமல் போனது. தேர்தலுக்கு முன்பாக ரிலீஸ் செய்ய படக்குழு கடும்பாடு பட்டது. ஆனாலும் சென்சார் கிடைப்பதில் ஏற்பட்ட சிக்கல் காரணமாக படம் தாமதமானது.

    தேர்தல் முடிந்து விஜய் முதல்வராக பதவியேற்ற நிலையில், ஜனநாயகன் படத்திற்கு சென்சார் சான்று கிடைத்தது. "ஏ" சான்று கிடைத்த நிலையில், படத்திற்கான ரிலீஸ் தேதியும் தற்போது அதிகாரப்பூர்வமாக அறிவிக்கப்பட்டுள்ளது. வரும் 23 ஆம் தேதி படம் ரிலீஸ் ஆகும் என்று ஜனநாயகன் படக்குழு அறிவித்துள்ளது. போர்க்களம் கடினமாக இருந்தால் வெற்றியும் பிரம்மாண்டமாக இருக்கும் என்று தெரிவித்து ஒரு போஸ்டர் ஒன்றையும் படக்குழு வெளியிட்டுள்ளது. வரும் 23 ஆம் தேதி ஜனநாயகன் படம் ரிலீஸ் ஆவதால் விஜய் ரசிகர்கள் மகிழ்ச்சி அடைந்துள்ளனர்.

    Advertisement

    பகவந்த் கேசரி ரீமேக்?

    விஜய்யின் கடைசி படம் என்பதால் இந்த படத்தின் மீதான எதிர்பார்ப்பு அதிகரித்துள்ளது. ஜனநாயகன் படம் ரிலீஸ் ஆகும் முன்பே முழு படமும் ஆன்லைனில் கசிந்தது. இது படக்குழு தரப்புக்கு அதிர்ச்சியை கொடுத்தது. 1.2 கோடிக்கும் மேற்பட்டவர்கள் இந்த படத்தை ஆன்லைனில் பார்த்து இருப்பதாக சமீபத்தில் தகவல் வெளியாகியிருந்தது.

    ஆன்லைனில் கசிந்த நிலையிலும் இந்த படத்தின் மீதான எதிர்ப்பார்ப்பு ரசிகர்கள் மத்தியில் அதிகமாகவே உள்ளது. கேவிஎன் புரொடக்‌ஷன் தயாரித்துள்ள இந்த படம் தெலுங்கில் வெளியாகி ஹிட் அடித்த பகவந்த் கேசரியின் ரீமேக் ஆகும். இயக்குநர் ஹெச். வினோத் இயக்கியுள்ள இந்த படத்தில் பூஜா ஹெக்டே, மமிதா பைஜூ, பாபி தியோல், பிரகாஷ் ராஜ், கவுதம் வாசுதேவ் மேனன் உள்ளிட்டோர் நடித்துள்ளனர்.

    Advertisement

    முன்பதிவு எப்போது?

    ஜனநாயகன் திரைப்படம் எப்போது வெளியாகும் என காத்திருந்த ரசிகர்களுக்கு படக்குழு வெளியிட்டுள்ள இந்த அறிவிப்பு மகிழ்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. தியேட்டர்களில் படத்தினை கொண்டாட தயாராகி வருகின்றனர். படத்திற்கான முன்பதிவு எப்போது என்றும் ரசிகர்கள் கேள்வி எழுப்பி வருகின்றனர். வரும் ஞாயிற்றுக்கிழமை முன்பதிவு தொடங்கும் என விநியோகஸ்தர்கள் தரப்பில் சொல்லப்படுகிறது. ஜனநாயகன் திரைப்படம் வெளியாவதை ஒட்டி, மற்றப் படங்களின் ரிலீஸ் தேதி தள்ளி வைக்கப்பட்டுள்ளது.

    குறிப்பாக விஜய்யின் மகன் ஜேசன் சஞ்சய் இயக்கத்தில் சந்தீப் கிஷன் நடிப்பில் உருவாகியுள்ள சிக்மா திரைப்படம் வரும் ஜூலை 31 இல் வெளியாகும் என அறிவிக்கப்பட்டு இருந்தது. தற்போது விஜய்யின் ஜனநாயகன் படம் வெளியாக உள்ளதால் அந்த படத்தின் வெளியீடு தள்ளிப்போக வாய்ப்புள்ளதாக கூறப்படுகிறது. இதேபோன்று லோகேஷ் கனகராஜ் நடித்துள்ள டிடி திரைப்படம் வெளியீடும் தள்ளிப்போகும் என கூறப்படுகிறது.

    English Summary

    Jana nayagan movie to Release on July 23: The makers have officially announced that 'Jana nayagan', starring Tamil Nadu Chief Minister Vijay, will release in theatres on July 23. Directed by H. Vinoth with music by Anirudh Ravichander, the team shared the message: "The harder the battlefield, the greater the victory."