சென்னை: முதல்வர் நடிகர் விஜய்யின் திரைப்பயணத்தின் கடைசி திரைப்படமான ஜனநாயகன் திரையரங்குகளில் வெளியாகியுள்ளது. முழுநேர அரசியலில் களமிறங்குவதற்கு முன்பாக விஜய் நடித்த இறுதிப் படம் என்பதால், இதற்கு முன்பெப்போதும் இல்லாத வகையில் உலகளவில் மாபெரும் வரவேற்பும், மிகப்பெரிய பாக்ஸ் ஆபீஸ் சாதனைகளும் நிகழும் என எதிர்பார்க்கப்பட்டது.
ஆனால், எதிர்பாராத திருப்பமாக, பல புறநகர் மற்றும் இரண்டாம்கட்ட நகரங்களில் போதிய ரசிகர்கள் வராததால், பல காட்சிகள் ரத்து செய்யப்பட்டது. இந்த செய்தி திரையுலகினரையும் ரசிகர்களையும் பெரும் அதிர்ச்சியில் ஆழ்த்தியுள்ளது.
சென்னை, பெங்களூர் போன்ற பெருநகரங்கள் மற்றும் வெளிநாடுகளில் உள்ள முக்கிய திரையரங்குகளில் வழக்கமான திருவிழா கோலமும், கட்டுக்கடங்காத கூட்டமும் காணப்பட்டது. ஆனால், தஞ்சாவூர், திருவாரூர், நெல்லை, தூத்துக்குடி, மதுரை, விழுப்புரம், திருத்தணி போன்ற இரண்டாம் கட்ட நகர பகுதிகளிலும், சிறு நகரங்களில் உள்ள திரையரங்குகளிலும் நிலைமை முற்றிலும் வேறாக இருந்தது. வழக்கமாக விஜய் படம் வெளியாகிறது என்றால் திரையரங்கு வாசல்களில் பாலாபிஷேகம், மேளதாளங்கள் மற்றும் நள்ளிரவு கொண்டாட்டங்கள் களைகட்டும். ஆனால், இங்குள்ள சில திரையரங்குகளில் மிகக் குறைந்த எண்ணிக்கையிலான இருக்கைகளே முன்பதிவு செய்யப்பட்டிருந்தன. வெறிச்சோடிய திரையரங்குகளில் காட்சிகளை திரையிடுவதைத் தவிர்க்க, திரையரங்கு நிர்வாகத்தினர் அதிகாலை காட்சிகளை ரத்து செய்து, டிக்கெட் வாங்கிய சில ரசிகர்களுக்கு முழுப் பணத்தையும் திரும்ப வழங்க முடிவெடுத்தனர். கொடைக்கானல் மற்றும் சுற்றியுள்ள சில புறநகர்ப் பகுதிகளிலும் இதுபோன்ற சூழல் நிலவியதாகத் தகவல்கள் தெரிவிக்கின்றன. தமிழ் சினிமாவின் பாக்ஸ் ஆபீஸ் கிங்காக கருதப்படும் ஒரு முன்னணி நடிகரின் , முதலவரின் கடைசிப் படத்திற்கே அதிகாலைக் காட்சிகள் ஆள் இல்லாமல் ரத்து செய்யப்படுவது, விநியோகஸ்தர்கள் மற்றும் திரையரங்க உரிமையாளர்களிடையே அதிர்வலைகளை ஏற்படுத்தியுள்ளது. ஹெச். வினோத் இயக்கத்தில், கே.வி.என் புரொடக்ஷன்ஸ் தயாரிப்பில் உருவான 'ஜனநாயகன்' திரைப்படம், வெளியீட்டிற்கு முன்பிருந்தே பல்வேறு தடைகளைச் சந்தித்து வந்தது. படத்திற்கு சர்டிபிகேட் கிடைப்பதில் சிக்கல் தொடங்கி படம் லீக்கானது வரை பல பிரச்சனைகள் ஏற்பட்டன. திரையரங்க ஒதுக்கீடு மற்றும் டிக்கெட் விலை தொடர்பாகச் சில பிரபல திரையரங்குகளுடன் பேச்சுவார்த்தை இழுபறியாக நீடித்தது. அதற்கு மத்தியில் படம் வெளியான முதல் நாளிலேயே கிடைத்துள்ள கலவையான விமர்சனங்கள், இப்படத்திற்கு கூடுதல் சவாலாக உருவெடுத்துள்ளன. விஜய்யின் தீவிர ரசிகர்கள் இப்படத்தை ஒரு அரசியல் சார்ந்த ஆக்ஷன் விருந்தாகவும், அவரது அரசியல் வருகைக்கு ஏற்ற சரியான படமாகவும் கொண்டாடி வருகின்றனர். ஆனால், பொதுவான சினிமா ரசிகர்களிடையேயும், திரைப்பட விமர்சகர்களிடையேயும் கலவையான விமர்சனமே கிடைத்துள்ளது. மாஸான ஆக்சனுடன், சுவாரசியமான அரசியல் வசனங்களுடனும் விஜய் தனது வழக்கமான சுறுசுறுப்பான நடிப்பை வழங்கியிருந்தாலும், படத்தின் திரைக்கதை அவரது திரைப்பயண முடிவுக்கு ஏற்றவாறு வலுவாக இல்லை என்று விமர்சகர்கள் சுட்டிக்காட்டுகின்றனர். விஜய் - அனிருத் கூட்டணியின் பின்னணி இசை மற்றும் தனிப்பட்ட சில அதிரடி காட்சிகள் படத்தைக் காப்பாற்றினாலும், ஹெச். வினோத்தின் மெதுவான திரைக்கதையும், சுவாரசியமில்லாத கதாபாத்திர அமைப்பும் படத்தின் வேகத்தைக் குறைத்துள்ளதாகக் கூறப்படுகிறது. பாபி தியோல், மமிதா பைஜு, பிரகாஷ் ராஜ், கௌதம் வாசுதேவ் மேனன், பிரியாமணி மற்றும் நரேன் எனப் பெரிய நட்சத்திரப் பட்டாளமே இருந்தபோதிலும், கதை பார்வையாளர்களை முழுமையாகக் கவரத் தவறிவிட்டது.கலவையான விமர்சனங்கள்