கருப்பு சட்டை.. ஹார்ட் காட்டிய முதல்வர் விஜய்.. தியேட்டராக மாறிய ஏர்போர்ட்.. வானை பிளந்த சத்தம்!

  • சென்னை: தமிழ்நாடு முதல்வர் விஜய் இன்றைய தினம் அரசு முறை பயணமாக லண்டன் சென்றார். அவரை வழியனுப்ப மிக பெரியளவில் மக்கள் கூட்டம் ஏர்போர்ட்டில் திரண்டிருந்தனர். கறுப்பு நிற சட்டை அணிந்து வந்த முதல்வர் விஜய்யை பார்த்தவுடன் மக்கள் கரகோஷம் எழுப்பினர். மக்களை பார்த்து விஜய் ஹார்ட் சைகை காட்டிய நிலையில், அப்போது சத்தம் பல மடங்கு அதிகரித்து அதிர வைத்தது.

    Advertisement

    தமிழ்நாடு முதல்வராக கடந்த மே மாதம் பதவியேற்ற முதல்வர் விஜய், இப்போது முதல்முறையாக வெளிநாட்டிற்கு செல்கிறார். லண்டன் செல்லும் முதல்வர் விஜய், அங்கு முதலீடுகளை ஈர்க்க பல முக்கிய நிறுவனங்களின் தலைவர்களையும் சந்திப்பார் என எதிர்பார்க்கப்படுகிறது.

    Advertisement

    லண்டன் புறப்பட்டார்

    இன்றைய தினம் இரவு 10 மணிக்கு முதல்வர் விஜய் லண்டன் புறப்பட்டு சென்றார். இதற்காக இரவு 8.30 மணியளவில் அவர் தனது இல்லத்தில் இருந்து கிளம்பினார். இரவு 9 மணியளவில் அவர் சென்னை விமான நிலையத்தின் 9வது நுழைவாயில் வழியாக பன்னாட்டு முனையத்திற்கு சென்றார். பெருந்திரளான பொதுமக்கள் அவரை வழியனுப்பி வைத்தனர்.

    வழக்கமாக இதுபோல தலைவர்கள் வெளிநாடு செல்லும்போது, கட்சி நிர்வாகிகள் ஏர்போர்ட் வந்து வழியனுப்புவார்கள். இதற்கு முன்பு திமுக ஆட்சியில் இருந்தபோதும், ஸ்டாலின் வெளிநாடுகளுக்கு செல்லும் போது அமைச்சர்கள், முக்கிய தலைவர்கள், நிர்வாகிகள் விமான நிலையம் வருவார்கள். ஆனால், விஜய் லண்டன் புறப்பட்டபோது தவெக தலைவர்கள் அல்லது நிர்வாகிகள் யாரும் விமான நிலையத்தில் இல்லை. மாறாக மக்கள் கூட்டமே அதிகளவில் இருந்தது.

    Advertisement

    ஹார்ட் காட்டிய விஜய்

    விஜய் கருப்பு நிற சட்டை அணிந்தவாரே காரில் இருந்து இறங்கிய போது, மக்கள் அவரை பார்த்து உற்சாகமடைந்தனர். மக்கள் பெரும் கரகோஷம் எழுப்பிய நிலையில், அவர்களை பார்த்து முதல்வர் விஜய் கைகூப்பி வணக்கம் தெரிவித்தார். பிறகு திரண்டிருந்த மக்களிடம் ஹார்ட்டின் சைகையை காட்டினார். முதல்வர் விஜய்யின் இந்த சைகை பார்த்தவுடன் அங்கிருந்த கூட்டம் மேலும் சத்தம் எழுப்பியது. கிட்டத்தட்ட தியேட்டர் போல அங்கு சத்தம் வானை பிளந்தது. அதைத் தொடர்ந்தே முதல்வர் விஜய் அங்கிருந்து புறப்பட்டு சென்றார்.

    முதல்வர் விஜய் எமிரேட்ஸ் EK547 (UAE547) விமானம் மூலம் துபாய் செல்கிறார். இரவு 10.15 மணியளவில் சென்னையில் இருந்து புறப்படும் விமானம், நள்ளிரவில் துபாய் சென்றடையும். பிறகு நாளைய தினம் அங்கிருந்து முதல்வர் விஜய் லண்டன் செல்கிறார். அவருடன் அவரது தனிச்செயலர்களும் லண்டன் செல்வதாக தெரிகிறது.

    Advertisement

    முதல் வெளிநாட்டு பயணம்

    விஜய் தமிழ்நாடு முதல்வரான பிறகு மேற்கொள்ளும் முதல் வெளிநாட்டு பயணம் என்பதால்.. அவருக்கு உற்சாக வரவேற்பை கொடுக்க லண்டனில் உள்ள தமிழ் சமூகத்தினரும் காத்திருக்கிறார்கள்.. செப்டம்பர் 16ம் தேதி வரை லண்டனில் பல்வேறு நிகழ்ச்சிகளில் முதல்வர் விஜ் கலந்து கொள்ள இருக்கிறார். குறிப்பாக பல முன்னணி நிறுவனங்களின் தலைவர்களையும் விஜய் சந்திப்பார் என தெரிகிறது. முதல்வரின் 1.5 டிரில்லியன் என்ற பொருளாதார இலக்கை அடைய இந்த பயணம் முக்கிய பங்கு வகிக்கும் என தெரிகிறது.

    விஜய்- அஜித் சந்திப்பு

    மேலும், இந்த பயணத்தில் அஜித்தையும் முதல்வர் சந்திக்கலாம் என தெரிகிறது. ஏனென்றால் வரும் 11, 12ஆம் தேதிகளில் லண்டனில் நடக்கும் கார் பந்தயத்தில் நடிகர் அஜித்குமார் பங்கேற்கும் அணியும் கலந்து கொள்கிறது. எனவே, அந்த ரேஸின்போது முதல்வர் விஜய்- அஜிஸ் சந்திப்பு நடக்க வாய்ப்பு இருப்பதாக கூறப்படுகிறது. இப்படி 16ஆம் தேதி வரை லண்டனில் பல்வேறு நிகழ்ச்சிகளில் கலந்து கொள்ளும் முதல்வர் விஜய், 17ஆம் தேதி காலை 8 மணிக்கு துபாய் வழியாக சென்னை திரும்புகிறார்.

    English Summary

    Tamil Nadu Chief Minister Vijay left for London on his first foreign trip after becoming Chief Minister(லண்டன் புற்பபட்டார் முதல்வர் விஜய்): Vijay Leaves for London for getting investment.