சௌமியா அன்புமணி சட்டசபையில் பேச பேச வாயடைத்து நின்ற விஜய்.. டிரெண்டாக மாறிய வீடியோக்கள்

  • சென்னை: பாமக தலைவர் அன்புமணி ராமதாஸின் மனைவியும், தர்மபுரிசட்டமன்ற தொகுதி உறுப்பினருமான சௌமியா அன்புமணி சட்டசபையில் பேசும் ஒவ்வொரு விஷயமும் பாராட்டத்தக்கதாக இருக்கிறது என்று நெட்டிசன்கள் கூறுகிறார்கள். அவர் முன் தயாரிப்புடன், மிக சரியான விஷயங்களை எடுத்துரைப்பதாக கூறும் நெட்டிசன்கள், சுற்றுச்சூழல் மற்றும் ஆறுகள் குறித்த அவரது கருத்துக்களை கண்டிப்பாக தவெக அரசு ஏற்க வேண்டும் என்றும் வலியுறுத்துகிறார்கள். கடந்த மூன்று நாட்களாகவே சௌமியா அன்புமணியின் ஒவ்வொரு பேச்சும் அற்புதமாக இருந்ததாக பலரும் பாராட்டுகிறார்கள்.

    Advertisement

    சௌமியா அன்புமணி பேச்சின் முக்கியமான அம்சங்களை மட்டும் பார்ப்போம்

    Advertisement

    "நம் கண்முன்னாடியே ஒரு சொத்து வீணாகிக்கொண்டிருக்கிறது என்று சொன்னால் அது நீர்வளம்தான். எத்தனையோ ஏரிகள், ஆறுகள், குளங்கள் காணாமல் போய்விட்டன. ஆனால் இயற்கை கொடுத்த வளத்தை நாம் தக்கவைத்துக்கொள்ள வேண்டும். உலகத்திலேயே இருக்கக்கூடிய அதிசயங்கள் நம் தமிழ்நாட்டில் இருக்கிறது. உலகிலேயே தன்னூத்து (நிலத்திற்கு அடியில் சுரக்கக்கூடிய நீர்) இரண்டே இடங்களில்தாம் இருக்கிறதாம். ஒன்று ஆஸ்திரேலியாவில் இருக்கிறது.

    இன்னொன்று நம்முடைய ஊர் நெய்வேலியில் இருந்திருக்கிறது. ஆனால் இன்று அங்கு தன்னூத்து இல்லை. ஏனென்றால் லிக்னைட் கார்பொரேஷன் மூலமாக தண்ணீர் முழுவதும் உறிஞ்சப்பட்டிருக்கிறது. அதேபோல இன்னொரு அதிசயம் சென்னை பள்ளிக்கரணை சதுப்பு நிலம். இந்தியாவில் எந்த நகரத்திலும் சதுப்பு நிலம் கிடையாது. இந்தச் சதுப்பு நிலம் சரியாக இருந்தால் எவ்வளவு மழை பெய்தாலும் தண்ணீரை இந்த நிலங்கள் உறிஞ்சிவிடும்.

    Advertisement

    மற்றொரு அதிசயம் கூவம். 72 கிலோ மீட்டர் இந்த ஆறு ஓடுகிறது. திருவள்ளூரில் உள்ள கூவம் என்ற ஊரில் இருந்து அது தொடங்குகிறது. அங்கு இந்தத் தண்ணீரை இன்றும் குடிக்கிறார்கள். கோயிலுக்கு அந்தத் தண்ணீரில்தான் அபிஷேகம் செய்கிறார்கள். விவசாயத்திற்கும் பயன்படுத்துகிறார்கள்.ஆனால் அந்தக் கூவம் எப்போது சென்னைக்கு வருகிறதோ ரசாயனக் கழிவு, நம்முடைய சாக்கடை கழிவு, திடக்கழிவு எல்லாம் கலந்து சாக்கடை மாதிரி மாறிவிட்டது. கூவம் ஆற்றைத் தூய்மைப்படுத்துவோம் என்று அதற்காக நிதியை நீங்கள் (தவெக) ஒதுக்கி இருக்கிறீர்கள். அதை நீங்கள் தூய்மைப்படுத்தினால் மட்டும் போதாது. முதலில் கூவத்தில் கொட்டும் குப்பையைத் தடுத்து நிறுத்த வேண்டும்.

    Advertisement

    எல்லா ஏரியிலும் அரசு கட்டிடங்களை கட்டி விட்டது.. வள்ளுவர் கோட்டம், நேரு ஸ்டேடியம் எல்லாமே ஏரில தான் இருக்கு.. நீதிமன்றம் கூட ஏரியில தான் இருக்கு.. எல்லா அரசு அலுவலகங்களும் ஏரியில்தான் இருக்கு.. இனிமேலாவது நீர் நிலைகள் ஆக்கிரமிக்கப்படுவதைத் தடுத்து பாதுகாக்க வேண்டும்.

    நதி நீர் இணைப்பை பொறுத்தவரை பெரிய நதிகளை இணைப்புது ஒருபுறம் இருந்தாலும், மாநிலத்துக்குள் பாயும் சிறு நதிகளை இணைக்க முயற்சி எடுப்பது அவசியம். காவிரி-குண்டாறு, அத்திக்கடவு-அவிநாசி (இரண்டாம் கட்டம்), மேட்டூர் உபரி நீர் திட்டம், பாலாறு தடுப்பணை திட்டம், நொய்யல், தாமிரவருணி சீரமைப்புத் திட்டம் என நீராதாராங்களை காக்கும் நடவடிக்கைகளை ஆக்கபூர்வமாக முன்னெடுக்க வேண்டும். நமது ஊரில் இருக்கும் நதிகளை இணைத்து தூர்வாரி கரைகளை பலப்படுத்தினாலே போதும், சட்டவிரோத மணல் திருட்டை குறைத்துவிடலாம்.

    Advertisement

    கடன் வாங்கிதான் சம்பளம் கொடுக்குறோம். கடன் வாங்கிதான் ரோடு, மருத்துவமனை, மேம்பாலம் என எல்லாவற்றையும் செய்கிறோம். கடன் வாங்கிதான் கடன்களையே அடைக்கிறோம்.நான் சொன்ன இத்தனை திட்டத்துக்கு ஒரு லட்சம் கோடி தேவைப்படும் என்று தெரியும். கடன் வாங்கியாவது ஏரி திட்டங்களை கண்டிப்பாக செயல்படுத்த வேண்டும். நீர்நிலைகளை சீரமைத்தால் விவசாயம் பெருகும், சுகாதாரம் மேம்படும், பொருளாதாரம் உயரும். எனவே இந்தக் கடனை 10 ஆண்டுகளில் அடைத்துவிடலாம் என உறுதியாக சொல்கிறேன்" என்று அவர் கூறினார். இவரது இந்த பேச்சு பலரது கவனத்தையும் ஈர்த்துள்ளது.

    இதுபற்றி ஸ்ரீராம் என்ற நெட்டிசன் ஒருவர் கூறுகையில், "செயிண்ட் மைக்கேல் அகாடமியில் படித்தவர்களுக்கு அனிதா சார்லஸ் என்ற ஆசிரியர் நினைவிருக்கலாம். கடினமான, சிக்கலான விஷயங்களைக்கூட மிக எளிமையாகப் புரியவைக்கும் அரிய ஆற்றல் அவருக்கு இருந்தது. அதனால், எங்கள் காலத்தில் அவர் அனைவராலும் மிகவும் நேசிக்கப்பட்ட, மதிக்கப்பட்ட ஆசிரியராக விளங்கினார்.

    Advertisement

    தமிழ்நாடு சட்டப்பேரவையில் சௌமியா அன்புமணி அவர்களின் செயல்பாடும் அவரைப் போலவே உள்ளது. தீவிரமான, கனமான தலைப்புகளைத் தெளிவான, சுவாரசியமான கதைகளாக மாற்றி அவர் பேசுகிறார். அரசின் கவனத்தை ஈர்த்து, நடவடிக்க எடுக்க வைக்கும் பேச்சு அது.

    உண்மையைச் சொல்லப்போனால், ராமதாஸ் அவர்கள் பல ஆண்டுகளாகவே சௌமியா இன்று எழுப்பும் பெரும்பாலான பிரச்சனைகள் குறித்து ஆழமாகப் பேசி இதற்கான அடித்தளத்தை அமைத்துக் கொடுத்தவர். இருப்பினும், பொதுமக்களின் கவனத்தையும் ஈர்ப்பையும் தன்பக்கம் ஈர்த்தவர் சௌமியாதான்.

    இதற்காக அன்புமணிக்கு நாம் நிச்சயம் கடன் பட்டிருக்கிறோம். அரசியலில் ஆண்கள் தங்கள் இடத்தைப் பிடித்துவிடுவார்களோ என்ற அச்சத்தில், பெண்களுக்கு வழிவிட்டுப் பின்வாங்குவது மிகவும் அரிது. சௌமியா தனக்கான தாக்கத்தை ஏற்படுத்த ஒரு தளத்தை அமைத்துக் கொடுத்ததன் மூலம், அன்புமணி தனது சொந்த பாரம்பரியத்தையே மேலும் உயர்த்தியுள்ளார்.

    இறுதியாக, தலைவர்களை நாம் மதிப்பிடும் விதத்தில் சமூகம் வைத்துள்ள ஒரு சுவாரசியமான இரட்டை நிலையை இது வெளிப்படுத்துகிறது. ஒரு ஆணைச் சமூகம் அவர் யார், அவரது சாதி, பின்னணி மற்றும் பிராந்தியம் என்ற கண்ணோட்டத்தின் வழியேதான் மதிப்பிடுகிறது; அவரது வார்த்தைகளால் கூட அந்த எல்லையைக் கடப்பது கடினம். உதாரணமாக, ஒரு பிராமண சமூகத்தைச் சேர்ந்த ஆண், இந்தப் பிராந்திய தடைகளை உடைத்து தமிழ்நாட்டின் முதலமைச்சராகியிருக்க முடியாது. ஆனால் ஒரு பெண்ணைப் பொறுத்தவரை, அவர் என்ன சொல்கிறார் என்பதை முதலில் கேட்க சமூகம் தயாராக இருக்கிறது. ஜெயலலிதா அவர்கள் மறுக்க முடியாத பிராமண சமூகத்தைச் சேர்ந்தவராக இருந்தபோதிலும், அவர் அந்த ஒரு குறிப்பிட்ட அடையாளத்திற்குள் மட்டும் சுருக்கப்படவில்லை.

    சமூகம் நம் மீது வலுக்கட்டாயமாக திணிக்கும் கடுமையான எல்லைகளைக் கடந்து, ஒரு தெளிவான குரல் வெளிப்படுவதற்குப் பெண்களுக்கு என்றுமே ஒரு தனித்துவமான ஆற்றல் உண்டு" இவ்வாறு நெட்டிசன் கூறினார்.

    இன்னொரு நெட்டிசன் கூறுகையில், "சௌமியா அன்புமணி அவர்கள் அவையில் பேசும்போது வெறும் காகிதக் குறிப்புகளைப் பார்த்துப் படிக்காமல், தரவுகளையும் புள்ளிவிவரங்களையும் மிக இயல்பாகவும் தெளிவாகவும் முன்வைப்பதற்குக் காரணம் அவருடைய கல்விப் பின்னணியும், சூழலியல் குறித்த ஆழமான புரிதலும்தான் காரணம் ஆகும்.

    சென்னை ஸ்டெல்லா மேரிஸ் கல்லூரியில் சமூகவியலில் இளங்கலை மற்றும் முதுகலைப் பட்டம் பெற்ற இவர், 2019-இல் மதுரை காமராசர் பல்கலைக்கழகத்தில் தனது முனைவர் பட்டத்தைப் பெற்றார். கிராம வனக் குழுக்கள் மூலம் தமிழ்நாட்டின் காடுகளின் பல்லுயிர் பெருக்கத்தைப் பாதுகாப்பது மற்றும் கிராமப்புற மக்களின் வாழ்வாதாரத்தை மேம்படுத்துவது" எனும் தலைப்பில் சமூகவியல் மற்றும் சூழலியல் சார்ந்த தனது முனைவர் பட்ட ஆய்வைச் சமர்ப்பித்தார். கடந்த 20 ஆண்டுகளுக்கும் மேலாக 'பசுமைத் தாயகம்' அமைப்பின் தலைவராகச் செயல்பட்டு, காடுகள் பாதுகாப்பு, நீர்நிலைச் சீரமைப்பு, காலநிலை மாற்றம் தொடர்பான சர்வதேச உச்சி மாநாடுகளில் பங்கேற்று வருகிறார்.

    இதன் காரணமாகவே, சட்டமன்றத்திலோ அல்லது பொது மேடைகளிலோ நதிநீர் பிரச்சனைகள், வன அழிப்பு அல்லது சூழலியல் சார்ந்த தலைப்புகள் குறித்து அவர் பேசும்போது, யாரோ எழுதிக்கொடுத்த உரையைப் படிக்காமல், ஒரு பாடத்தில் தேர்ச்சி பெற்ற வல்லுநரைப் போலத் தன்னிச்சையாகவும் தரவுகளுடனும் பேச முடிகிறது" என்று கூறினார்.

    இன்னொரு நெட்டிசன் கூறுகையில், "சட்டமன்றத்தில் தினந்தோறும் மக்களின் பிரச்சனைகளையும், நடப்புச் சூழலுக்கு மிகவும் தேவையான தலைப்புகளையும் பேசக்கூடிய ஒரே சட்டமன்ற உறுப்பினராக சௌமியா அன்புமணி திகழ்கிறார். அவையில் தினமும் மிகவும் நியாயமான, அறிவுப்பூர்வமான கருத்துகளை அவர் எழுப்பி வருகிறார்; சௌமியா அன்புமணி இதனைத் தொடர்ந்து செய்ய வேண்டும். சட்டமன்றத்தில் சௌமியா அன்புமணி அவர்கள் பேசும் முக்கியப் புள்ளிகளைக் குறிப்பெடுத்து, மக்கள் நலனைக் கருத்தில் கொண்டு அவற்றைச் செயல்படுத்துவதற்கான உரிய நடவடிக்கைகளைத் தமிழ்நாடு அரசு எடுக்கும் என்று நம்புகிறேன்." இவ்வாறு கூறினார்.

    English Summary

    Netizens say that every point raised in the Legislative Assembly by Sowmya Anbumani—wife of PMK leader Anbumani Ramadoss and MLA for the Dharmapuri constituency—is praiseworthy.