பனையூரில் மெகா சம்பவம் ரெடி.. முதல்வர் விஜய்யின் பிறந்தநாளில் தவெகவில் இணையும் மாஜி அமைச்சர்கள்!

  • சென்னை: முதல்வர் விஜய்யின் பிறந்தநாளான ஜூன் 22ஆம் தேதி பனையூர் தவெக அலுவலகத்தில் மிகப்பெரிய இணைப்பு விழாவுக்கு ஏற்பாடுகள் செய்யப்பட்டு வருகிறது. அதிமுகவின் மாஜி அமைச்சர்களான விஜயபாஸ்கர், செல்லப்பாண்டியன், செந்தில்நாதன், பாமக எம்எல்ஏ அருள், அதிமுக மாவட்டச் செயலாளர் பாலகங்கா ஆகியோர் இணைய இருக்கின்றனர்.

    Advertisement

    தமிழக அரசியல் களத்தில் மிகப்பெரிய அதிரடி திருப்பமாக, தமிழக முதலமைச்சர் ஜோசப் விஜய்யின் பிறந்தநாளான ஜூன் 22ஆம் தேதி, அக்கட்சியில் மாற்றுக்கட்சியினர் இணையும் மெகா இணைப்பு விழாவுக்கு பிரம்மாண்ட ஏற்பாடுகள் செய்யப்பட்டு வருகின்றன. சென்னை பனையூரில் உள்ள தவெக தலைமை அலுவலகத்தில் இந்த விழா நடைபெறவுள்ளதாக கட்சி வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.

    Advertisement

    இந்த விழாவில் அதிமுகவின் முக்கிய முன்னாள் அமைச்சர்கள் மற்றும் பிற கட்சிப் பிரமுகர்கள் முதல்வர் விஜய் முன்னிலையில் தவெகவில் இணையவிருப்பது அரசியல் வட்டாரத்தில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. அதிமுகவின் முன்னணி முகங்களாக இருந்த முன்னாள் அமைச்சர்கள் விஜயபாஸ்கர், செல்லப்பாண்டியன் மற்றும் செந்தில்நாதன் ஆகியோர் தவெகவில் அதிகாரப்பூர்வமாக இணையவுள்ளனர்.

    இவர்களுடன் பாமக முன்னாள் எம்எல்ஏ அருள் மற்றும் அதிமுகவின் சென்னை முக்கியப் புள்ளியான மாவட்டச் செயலாளர் பாலகங்கா ஆகியோரும் தவெகவில் ஐக்கியமாக உள்ளதாகத் தகவல்கள் வெளியாகியுள்ளன. தலைவர் விஜய்யின் பிறந்தநாளை முன்னிட்டு பொதுமக்களுக்கு இடையூறு ஏற்படும் வகையில் பேனர்கள், கட்-அவுட்டுகள் வைப்பதைத் தவிர்த்து, மக்கள் நலப்பணிகளில் ஈடுபட வேண்டும் என அமைச்சர் ஆனந்த் உத்தரவிட்டுள்ளார்.

    Advertisement

    அதே நேரத்தில், கட்சியின் வலிமையை அதிகரிக்கும் நோக்கில் பனையூர் அலுவலகத்தில் இந்த பிரம்மாண்ட மாற்றுக்கட்சியினர் இணைப்பு விழா நடத்தப்பட உள்ளது என தவெக தரப்பினர் மத்தியில் உற்சாகத்தை அதிகரித்துள்ளது. ஆட்சிப் பொறுப்பேற்ற பிறகு வரும் முதல்வர் விஜய்யின் முதல் பிறந்தநாள் என்பதால், தவெக தொண்டர்கள் பெரும் உற்சாகத்தில் உள்ளனர்.

    ஏற்கனவே கடம்பூர் ராஜு உள்ளிட்ட முன்னாள் அமைச்சர்கள் தவெக பக்கம் சாய்ந்துவிட்ட சூழலில், உள்ளாட்சித் தேர்தலை மனதில் வைத்து அதிமுகவின் பெரும் பட்டாளமே தவெகவை நோக்கி நகர்ந்து வருகிறது. இதனால் அதிமுக விஸ்வாசிகளும், கட்சித் தலைமையும் அதிர்ச்சியில் உறைந்துள்ளது.

    English Summary

    Vijay: Panaiyur TVK Office Prepares for Massive Induction of AIADMK and PMK Leaders on June 22