ஸ்கூலுக்கு லேட் ஆச்சு.. யூடர்ன் கூட போட முடியலை.. விஜய்யால் ஸ்தம்பித்த ஈசிஆர்.. டென்ஷனான பெற்றோர்!

  • செங்கல்பட்டு: முதலமைச்சர் வாகனம் செல்வதற்காக நீலாங்கரை முதல் அக்கறை வரை சாலை ஒரு வழி பாதையாக மாற்றியதால் குழந்தைகளை பள்ளிக்கு நேரத்திற்கு செல்ல முடியாமல் அவதி அடைந்தனர். தங்களின் குழந்தைகள் பாதிக்கப்படுவதை உணர்ந்த பெற்றோர், போலீசாருடன் வாக்குவாதத்தில் ஈடுபட்டதால் பரபரப்பு ஏற்பட்டது.

    Advertisement

    செங்கல்பட்டு மாவட்டம் கோவளத்தில் 31வது தென்மண்டல முதலமைச்சர்கள் மாநாடு நடைபெற்று வருகிறது. மத்திய உள்துறை அமைச்சர் அமித்ஷா தலைமையில் நடைபெறும் இந்த மாநாட்டில் கர்நாடகா முதல்வர் டிகே சிவக்குமார், ஆந்திரா முதல்வர் சந்திரபாபு நாயுடு, தெலங்கானா துணை முதல்வர் மல்லுபாட்டி விக்ரமார்கா, கேரளா முதல்வர் சதீஷன், புதுச்சேரி துணை நிலை ஆளுநர் ஆகியோர் பங்கேற்றுள்ளனர்.

    Advertisement

    இந்த மாநாட்டில் கலந்து கொள்வதற்காக முதலமைச்சர் ஜோசப் விஜய் நீலாங்கரையில் உள்ள தனது இல்லத்தில் இருந்து காலை 9 மணிக்கு கோவளத்திற்கு புறப்பட்டு சென்றார். இதற்கு முன்பாக முதலமைச்சரின் வருகையால் ஈசிஆர் சாலைகளில் உள்ள அனைத்து பாதைகளும் சுமார் அரைமணி நேரத்திற்கு முன்பாகவே போக்குவரத்து இல்லாமல் தடை செய்யப்பட்டுவிட்டது.

    அதுமட்டுமல்லாமல் சாலை திரும்பும் இடத்தில் போலீசார் கயிறு கட்டி ஒரு வழி பாதையாக மாற்றிவிட்டனர். நீலாங்கரை முதல் அக்கறை வரை அனைத்து யூ டர்ன்களும் தடை செய்யப்பட்டது. காலை 9 மணி என்பது குழந்தைகள் பள்ளிகளுக்கு செல்லும் நேரம். பெற்றோர் தங்களின் குழந்தைகளை பள்ளிகளுக்கு அழைத்து செல்லும் நேரம்.

    Advertisement

    இப்படியான நேரத்தில் சுமார் அரை மணி நேரம் போக்குவரத்து தடை, யூடர்ன்களுக்கு தடை என்பது பள்ளிக்கு செல்லும் குழந்தைகளுக்கு மிகப்பெரிய பாதிப்பை உருவாக்கி இருக்கிறது. குழந்தைகளை குறித்த நேரத்தில் பள்ளிக்கு அழைத்து செல்ல முடியாமல் அவர்களின் பெற்றோரும் அவதி அடைந்திருக்கின்றனர்.

    இதனிடையே நீலாங்கரை சேர்ந்த பெற்றோர் ஈஞ்சம்பாக்கத்தில் உள்ள பள்ளிக்கு தங்களது குழந்தைகளை காரில் அழைத்து சென்று கொண்டிருந்த போது சாலையில் திரும்பும் வசதி இல்லாத காரணத்தினால் நீண்ட தூரம் சென்று சுற்றி வரும் சூழ்நிலை ஏற்பட்டுள்ளது. இதனால் ஆத்திரமடைந்த பெற்றோர் காவல்துறையிடம் வாக்குவாதத்தில் ஈடுபட்டனர். இந்த சம்பவத்தால் அப்பகுதியில் சிறிது நேரம் பரபரப்பான சூழல் ஏற்பட்டது.

    Advertisement

    அப்போது பெற்றோர், சுமார் 5 கிமீ வரை அத்தனை யூடர்ன்களும் மூடப்பட்டிருக்கிறது. என் குழந்தைக்கு என்ன சார் பதில் சொல்வேன்.. இதெல்லாம் மாற்றம் செய்யணும்னு தான முதல்வரா வந்திருக்காரு.. அவருக்கு தெரியலைனா, நீங்கள் தான சார் சொல்லணும்" என்று வாக்குவாதம் செய்தனர். முதல்வராக விஜய் ஆட்சிப் பொறுப்பேற்ற பின் தொடர்ச்சியாக இப்படியான சம்பவங்கள் அரங்கேறி வருகிறது. ஏற்கனவே விஜய் திருச்சிக்கு வந்த போது, சுமார் 7 மணி நேரம் வரை முக்கிய சாலைகளில் போக்குவரத்து தடை செய்யப்பட்டது. கரூர் சென்ற போதும் இதே கதை தான்.

    Advertisement

    இதனிடையே சென்னையில் ஈசிஆர் சாலையில் இருந்து விஜய் வரும் போது, போலீசார் நீண்ட தூரம் பாதுகாப்பு ஏற்பாடுகளை செய்து வருகின்றனர். இதனால் ஈசிஆர் சாலையில் இருந்து காலை தலைமைச் செயலகம் வரை முதல்வர் விஜய் பயணிக்கும் போது, பொதுமக்கள் பயணம் மேற்கொள்வதிலும் சிரமம் ஏற்படுகிறது. இதனை முதல்வர் விஜய் விரைவாக சரி செய்ய வேண்டும் என்று பொதுமக்கள் பலரும் பேசத் தொடங்கி இருக்கின்றார்.

    English Summary

    Vijay: Parents Argue With Police After Traffic Diversion for CM Vijay Convoy Delays School Children Near Neelankarai