பாரதிராஜா உடலுக்கு முதல்வர் விஜய் நேரில் அஞ்சலி.. நீலாங்கரை இல்லத்தில் திரண்ட திரையுலகினர்

  • சென்னை: இயக்குநர் இமயம் பாரதிராஜாவின் மறைவையடுத்து, அவரது நீலாங்கரை இல்லத்திற்கு சென்ற தமிழக முதல்வர் விஜய், உடலுக்கு மலர்தூவி நேரில் அஞ்சலி செலுத்தினார். பின்னர் குடும்பத்தினருக்கு ஆறுதல் தெரிவித்த அவர், பாரதிராஜாவின் மறைவு தமிழ் சினிமாவிற்கு பேரிழப்பு என இரங்கல் தெரிவித்துள்ளார். மேலும் அவரது உடல் அரசு மரியாதை ததாக தகவல் வெளியாகியுள்ளது.

    Advertisement

    தமிழ் சினிமாவின் முன்னணி இயக்குநரான பாரதிராஜா மறைவுக்கு அரசியல் மற்றும் திரையுலக பிரபலங்கள் தொடர்ந்து இரங்கல் தெரிவித்து வருகின்றனர். உடல்நலக்குறைவு காரணமாக காலமான பாரதிராஜாவின் உடலுக்கு சென்னை நீலாங்கரையில் உள்ள அவரது இல்லத்தில் பொதுமக்கள் மற்றும் பிரபலங்கள் அஞ்சலி செலுத்தி வருகின்றனர்.

    Advertisement

    இந்த நிலையில், தமிழக முதல்வர் விஜய் இன்று நேரில் சென்று பாரதிராஜாவின் உடலுக்கு மலர்தூவி அஞ்சலி செலுத்தினார். பின்னர் அவரது குடும்பத்தினருக்கு ஆறுதல் கூறி தனது இரங்கலை தெரிவித்தார். பாரதிராஜாவின் மறைவு தமிழ் திரையுலகிற்கு ஈடுசெய்ய முடியாத இழப்பு என்றும் அவர் கூறினார். அவர் வெளியிட்டுள்ள இரங்கல் செய்தியில் கூறியிருப்பதாவது:-

    தமிழ்த் திரையுலகின் இயக்குநர் இமயம் திரு. பாரதிராஜா அவர்கள் காலமானார் என்ற செய்தி அறிந்து மிகுந்த மனவேதனையும் துயரமும் அடைந்தேன். கிராமியப் பின்னணியில் வாழ்வியல் உயிரோட்டத்துடன் பல வெற்றிப் படங்களை உருவாக்கி, தமிழ்த் திரைப்பட உலகில் தனக்கென தனி முத்திரை பதித்தவர் இயக்குநர் திரு. பாரதிராஜா அவர்கள்.

    Advertisement

    தனது படைப்புகளுக்காக நாட்டின் உயரிய விருதான பத்மஸ்ரீ உள்ளிட்ட பல்வேறு தேசிய, மாநில விருதுகளைப் பெற்றவர். பல தலைமுறைக் கலைஞர்களை உருவாக்கிய அவரது பங்களிப்பு தமிழ்த் திரைப்பட வரலாற்றில் என்றென்றும் நிலைத்திருக்கும்.

    இயக்குநர் இமயம் திரு. பாரதிராஜா அவர்களின் மறைவு, தமிழ்த் திரையுலகிற்கு ஈடுசெய்ய முடியாத பேரிழப்பாகும். அவரை இழந்து வாடும் குடும்பத்தினருக்கும், நண்பர்களுக்கும், திரைப்படத் துறையினருக்கும், ரசிகர்களுக்கும் எனது ஆழ்ந்த இரங்கலைத் தெரிவித்துக் கொள்கிறேன். அவரது ஆன்மா இறைவன் திருவடி நிழலில் இளைப்பாற பிரார்த்திக்கிறேன்.

    திரைத்துறையில் திரு. பாரதிராஜா அவர்களின் பங்களிப்பைப் போற்றி, அஞ்சலி செலுத்தும் வகையில் அவரது இறுதிப் பயணத்திற்கு அரசு மரியாதை வழங்கப்படும்” என்று கூறியிருந்தார்.

    Advertisement

    முன்னதாக முன்னாள் முதல்வர் மு.க ஸ்டாலின் பாரதிராஜா உடலுக்கு நேரில் அஞ்சலி செலுத்தினார். நடிகர்கள், இயக்குநர்கள், தயாரிப்பாளர்கள் உள்ளிட்ட ஏராளமான திரைப்பிரபலங்கள் பாரதிராஜாவின் இல்லத்திற்கு வருகை தந்து அஞ்சலி செலுத்தினர். கிராமத்து வாழ்க்கையை இயல்பாக திரையில் பதிவு செய்து தமிழ் சினிமாவின் போக்கையே மாற்றிய பாரதிராஜாவின் மறைவு ரசிகர்கள் மற்றும் திரையுலகினரை ஆழ்ந்த சோகத்தில் ஆழ்த்தியுள்ளது. அவரது இறுதி அஞ்சலியில் திரையுலகினர் மற்றும் ரசிகர்கள் பெருமளவில் பங்கேற்று வருகின்றனர்.

    English Summary

    Vijay Pays Last Respects to Bharathiraja: Tamil Nadu Chief Minister Vijay paid his last respects to legendary filmmaker Bharathiraja at his Neelankarai residence. Vijay offered floral tributes and conveyed condolences to the bereaved family, while film personalities and fans continued to gather to honor the iconic director.