சென்னை: கரூர் கூட்ட நெரிசல் சம்பவத்தில் உயிரிழந்த 41 பேரின் குடும்பங்களை நேரில் சந்திக்க முதல்வர் விஜய் கரூருக்கு செல்லத் திட்டமிட்டுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. கடந்த ஆண்டு நடந்த அந்த சோக சம்பவத்திற்குப் பிறகு, உயிரிழந்தவர்களின் குடும்பத்தினரை நேரில் சந்திக்கவில்லை என்ற குற்றசாட்டு தொடர்ந்து எழுந்து வந்த நிலையில், வரும் ஜூலை இரண்டாவது வாரத்தில் முதல்வர் விஜய் கரூருக்கு செல்ல முடிவு செய்திருப்பதாக தகவல்கள் வெளியாகியுள்ளன. இதற்கு விஜயபாஸ்கரும் ஒரு காரணம் என்கின்றனர்.
2026 தமிழக சட்டசபை தேர்தலுக்கு முன்னோட்டமாக கடந்த ஆண்டு செப்டம்பர் 27-ஆம் தேதி, தமிழக வெற்றிக் கழகத் தலைவர் விஜய், தமிழகம் முழுவதும் பிரச்சாரம் செல்ல திட்டமிட்டிருந்தார். அந்த வகையில், நாமக்கல் மற்றும் கரூரில் நடைபெற்ற தேர்தல் பிரசாரக் கூட்டங்களில் பங்கேற்றார்.
அப்போது கரூர் வேலுச்சாமிபுரத்தில் நடைபெற்ற பொதுக்கூட்டத்தில் எதிர்பாராத அளவுக்கு மக்கள் திரண்டதால் கடும் கூட்ட நெரிசல் ஏற்பட்டது. அந்த துயர சம்பவத்தில் 41 பேர் உயிரிழந்தனர். மேலும், பலர் படுகாயமடைந்தனர். இந்த சம்பவம் தமிழகம் முழுவதும் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியது. சம்பவம் நடந்த உடனேயே தனது தேர்தல் பிரச்சார பயணத்தை நிறுத்திய விஜய், சென்னைக்கு திரும்பினார். பின்னர் உயிரிழந்தவர்களின் குடும்பங்களை நேரில் சந்திக்காமல் இருந்தது குறித்து பல்வேறு தரப்பில் கேள்விகள் எழுந்தன. இந்நிலையில், சம்பவம் நடந்த ஒரு மாதத்திற்குப் பிறகு, உயிரிழந்தவர்களின் குடும்பத்தினரை மகாபலிபுரத்தில் உள்ள தனியார் விடுதிக்கு வரவழைத்து விஜய் சந்தித்தார். அப்போது குடும்பத்தினருக்கு ஆறுதல் கூறியதுடன், அவர்களது குறைகளையும் கேட்டறிந்தார். அந்த சந்திப்பில் பாதிக்கப்பட்ட குடும்பங்களுக்கு தேவையான உதவிகள் வழங்கப்படும் என்றும் உறுதியளித்தார். அப்போது நேரத்தில், "நான் விரைவில் கரூருக்கு வந்து அனைவரையும் நேரில் சந்திப்பேன்" என்றும் விஜய் தெரிவித்திருந்தார். ஆனால் அதன் பின்னர் தேர்தல் பிரசாரம், தேர்தல், ஆட்சி அமைப்பது, அமைச்சரவை விரிவாக்கம் உள்ளிட்ட அரசியல் பரபரப்புகள் காரணமாக அந்த பயணம் நடைபெறவில்லை. இந்நிலையில், தமிழக வெற்றிக் கழகம் ஆட்சியை அமைத்து, விஜய் முதல்வராக பொறுப்பேற்ற பிறகு, அவர் எப்போது கரூருக்கு பயணம் மேற்கொள்வார் என்பது குறித்து மீண்டும் எதிர்பார்ப்பு அதிகரித்தது. குறிப்பாக உயிரிழந்தவர்களின் குடும்பங்களை இன்னும் நேரில் சந்திக்கவில்லை என்ற விமர்சனங்களும் சமூக வலைதளங்களில் தொடர்ந்து எழுந்தன.இதற்கெல்லாம் பதில் சொல்லும் வகையில் வரும் ஜூலை இரண்டாவது வாரத்தில் முதல்வர் விஜய் கரூருக்கு செல்ல முடிவு செய்திருப்பதாக தகவல்கள் வெளியாகியுள்ளன. உயிரிழந்த 41 பேரின் குடும்பத்தினரையும் ஒரே இடத்தில் சந்திக்கும் வகையில் கட்சி நிர்வாகிகள் ஏற்பாடுகளை செய்து வருவதாக கூறப்படுகிறது. இந்த சந்திப்பில் பாதிக்கப்பட்ட குடும்பங்களின் தற்போதைய நிலை, அவர்களுக்கு வழங்கப்பட்ட உதவிகள், மேலும் தேவையான நலத்திட்ட உதவிகள் குறித்து முதல்வர் விஜய் கேட்டறியலாம் என்றும் தகவல்கள் தெரிவிக்கின்றன. இந்த விவகாரம் மட்டுமல்லாமல் விஜய்யின் பயணம் அரசியல் ரீதியாகவும் முக்கியத்துவம் வாய்ந்ததாக பார்க்கப்படுகிறது. கரூர் மாவட்டத்தில் கடந்த தேர்தலில் தமிழக வெற்றிக் கழகம் கணிசமான ஆதரவை பெற்றிருந்த நிலையில், அதற்கு நன்றி தெரிவிக்கும் நிகழ்ச்சியாகவும் நடத்த விஜய் திட்டமிட்டுள்ளாராம். இதற்கிடையில் கரூர் அரசியலில் மற்றொரு முக்கிய திருப்பமும் ஏற்பட்டுள்ளது. கரூர் தொகுதி சட்டமன்ற உறுப்பினரான முன்னாள் அமைச்சர் எம்.ஆர். விஜயபாஸ்கர் தனது எம்.எல்.ஏ. பதவியை ராஜினாமா செய்துள்ளார். அவர் விரைவில் தமிழக வெற்றிக் கழகத்தில் இணையக்கூடும் என்ற தகவலும் அரசியல் வட்டாரங்களில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. இந்நிலையில், முதல்வர் விஜய்யின் கரூர் பயணம் மேற்கொள்ளும் நிலையில், அதே நிகழ்வில் அவர் தவெகவில் இணையலாம் எனவும் சொல்லப்படுகிறது. இதற்கிடையே கரூர் ஆறுதல் நிகழ்வை ஒருங்கிணைப்பதே விஜயபாஸ்கர் தான் என்றும் சொல்கின்றனர்.கரூர் கூட்ட நெரிசல்
விஜய்
தமிழக வெற்றிக் கழகம்
கரூர் பயணம்
குடும்பங்களுக்கு ஆறுதல்
அதேநேரத்தில், உயிரிழந்தவர்களின் குடும்பங்களுக்கு ஆறுதல் தெரிவிக்கும் நிகழ்வை தனிப்பட்ட நிகழ்வாக நடத்த வேண்டும் எனவும் உத்தரவும் பிறப்பிக்கப்பட்டுள்ளதாம்..எம்.ஆர். விஜயபாஸ்கர்