இருக்குற இடம் தெரியாம இருந்துட்டு போயிடனும்.. பாஜக மீது லேசான பாசம்! ‘இந்தியா’வுக்கு நோ சொன்ன விஜய்!

  • சென்னை: தமிழக அரசியலில் தேர்தலுக்குப் பிறகும் கூட்டணி அரசியல் தொடர்ந்து பரபரப்பை ஏற்படுத்தி வருகிறது. குறிப்பாக, தேசிய அளவில் செயல்பட்டு வரும் 'இந்தியா' கூட்டணியுடன் தமிழக வெற்றிக் கழகம் இணையுமா என்ற கேள்வி அரசியல் வட்டாரங்களில் தீவிரமாக விவாதிக்கப்பட்டு வந்த நிலையில், தற்போது அதற்கு முற்றுப்புள்ளி வைக்கும் வகையில் முக்கிய தகவல்கள் வெளியாகியுள்ளன.

    Advertisement

    தேசிய அளவில் பாஜகவுக்கு எதிராக கடந்த 2024 மக்களவைத் தேர்தலுக்கு முன்பு காங்கிரஸ் தலைமையில் உருவாக்கப்பட்ட கூட்டணிதான் 'இந்தியா' கூட்டணி. இதில் திமுக முக்கிய பங்குதாரராக செயல்பட்டு வந்தது. ஆனால் 2026 தமிழ்நாடு சட்டப்பேரவைத் தேர்தலுக்குப் பிறகு மாநில அரசியல் சூழல் முற்றிலும் மாறிவிட்டது.

    Advertisement

    சட்டப்பேரவைத் தேர்தலில் தமிழக வெற்றிக் கழகம் ஆட்சியை பிடித்த பிறகு, காங்கிரஸ், இந்திய கம்யூனிஸ்ட், மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட், விடுதலை சிறுத்தைகள், இந்திய யூனியன் முஸ்லிம் லீக் உள்ளிட்ட கட்சிகள் திமுக அணியில் இருந்து விலகி விஜய் தலைமையிலான அரசுக்கு ஆதரவு அளித்தன.

    காங்கிரஸ்

    அதில் முக்கியமாக, காங்கிரஸ் கட்சி முதலில் திமுக கூட்டணியில் இருந்து வெளியேறி தமிழக வெற்றிக் கழக அரசில் அமைச்சரவை இடத்தையும் பெற்றது. இதனால் காங்கிரஸ் மீது திமுக கடும் அதிருப்தியில் இருப்பதாக அரசியல் வட்டாரங்கள் கூறுகின்றன. இந்த சூழலில்தான் டெல்லியில் நடைபெற்ற சமீபத்திய 'இந்தியா' கூட்டணி ஆலோசனைக் கூட்டத்தில் திமுக பங்கேற்கவில்லை. இது தேசிய அரசியல் அளவிலும் பரபரப்பை ஏற்படுத்தியது.

    Advertisement

    இந்தியா கூட்டணி

    அரசியல் வட்டாரங்களில் வெளியாகியுள்ள தகவலின்படி, தற்போது தமிழகத்தில் ஆளும் கட்சியாக இருக்கும் தமிழக வெற்றிக் கழகத்திற்கும் 'இந்தியா' கூட்டணி தரப்பில் அழைப்பு சென்றதாக கூறப்படுகிறது. ஆனால், "இப்போதைக்கு தேசிய அரசியலில் எந்த கூட்டணியிலும் அதிகாரப்பூர்வமாக இணைய வேண்டாம்" என்ற மனநிலையில் முதலமைச்சர் விஜய் இருப்பதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.

    விஜய் வியூகம்

    விஜயின் அரசியல் வியூகத்தை அறிந்தவர்கள் கூறுவதாவது, தற்போது மத்திய அரசுடன் நேரடி மோதல் அரசியலில் ஈடுபடுவது தமிழக நலனுக்கு உகந்ததாக இருக்காது என்று அவர் கருதுகிறார். தமிழகத்திற்கு கூடுதல் நிதி, புதிய திட்டங்கள், முதலீடுகள் மற்றும் உள்கட்டமைப்பு மேம்பாட்டு திட்டங்களை பெறுவதற்காக மத்திய அரசுடன் இணக்கமான உறவை பேண வேண்டும் என்பதே தற்போதைய அணுகுமுறையாக இருப்பதாக கூறப்படுகிறது. இதன் காரணமாகவே, தேசிய அளவில் பாஜகவுக்கு எதிராக செயல்படும் 'இந்தியா' கூட்டணியில் இணைவதில் விஜய் ஆர்வம் காட்டவில்லை என கூறப்படுகிறது.

    Advertisement

    2029 மக்களவைத் தேர்தல்

    அரசியல் பார்வையாளர்களின் கருத்துப்படி, விஜயின் தற்போதைய கவனம் மாநில ஆட்சியை நிலைப்படுத்துவதில்தான் உள்ளது. ஆட்சியின் ஆரம்ப கட்டத்தில் மத்திய அரசுடன் தேவையற்ற மோதலை உருவாக்காமல், நிர்வாக வெற்றிகளை குவிப்பதே அவரது நோக்கமாக இருக்கலாம். அதேநேரத்தில், 2029 மக்களவைத் தேர்தல் நெருங்கும் போது தேசிய அரசியல் நிலைமையைப் பொறுத்து தனது நிலைப்பாட்டை தீர்மானிக்கலாம் என்ற கணக்கும் இருப்பதாக கூறப்படுகிறது. இதனுடன் தொடர்புபடுத்தி பார்க்கப்படும் மற்றொரு விஷயம், சமீபத்தில் கிடைத்த முதல் ராஜ்யசபா இடத்தை தமிழக வெற்றிக் கழகம் தங்களது கட்சி வேட்பாளருக்கு வழங்காமல் காங்கிரஸுக்கு ஒதுக்கியது.

    Advertisement

    மாநிலங்களவை

    இதற்குப் பின்னாலும் அரசியல் கணக்கு இருப்பதாக கூறப்படுகிறது. தற்போது தமிழக வெற்றிக் கழகத்திற்கு மக்களவையிலோ, மாநிலங்களவையிலோ நேரடி பிரதிநிதித்துவம் இல்லாததால், மத்திய அரசுக்கு எதிரான கடுமையான அரசியல் நிலைப்பாட்டை எடுக்க வேண்டிய அவசியமும் இல்லை என கருதப்படுகிறது. தேசிய அரசியலில் தனித்த பாதையில் செல்ல விரும்பும் விஜய், மாநில அரசியலில் மட்டும் தற்போதைய கூட்டணியை வலுப்படுத்த திட்டமிட்டுள்ளதாக கூறப்படுகிறது.

    தமிழக வெற்றிக் கழகம்

    காங்கிரஸ், கம்யூனிஸ்ட் கட்சிகள், விடுதலை சிறுத்தைகள் உள்ளிட்ட கட்சிகளுடன் இணைந்து செயல்பட்டு வரும் கூட்டணிக்கு விரைவில் தனிப்பெயர் சூட்டி அரசியல் நடவடிக்கைகளை தீவிரப்படுத்தவும் தமிழக வெற்றிக் கழக தலைமை ஆலோசித்து வருவதாக தகவல்கள் தெரிவிக்கின்றன. ஒருபுறம் திமுக இந்தியா கூட்டணியில் இருந்து விலகியிருக்கும் சூழல், மறுபுறம் விஜய் தலைமையிலான தமிழக வெற்றிக் கழகம் தேசிய கூட்டணியில் இணைய தயக்கம் காட்டுவது ஆகியவை தமிழக அரசியலில் புதிய பரபரப்பை உருவாக்கியுள்ளன.

    English Summary

    Vijay reportedly avoids INDIA bloc for now, prioritising Tamil Nadu governance and maintaining cordial ties with the BJP-led Centre.