கமல் கோரிக்கையை நிராகரித்த விஜய்.. மேஜைக்கு வந்த 6 எச்சரிக்கை ரிப்போர்ட்.. உள்ளே இருந்தது என்ன?

  • சென்னை: இரு வாரங்களுக்கு முன்பு முதல்வர் விஜய்யை சந்தித்து சினிமா இண்டஸ்ரியின் நலன்களுக்காக 6 கோரிக்கைகளை முன்வைத்தார் மக்கள் நீதி மய்யத்தின் தலைவரும் எம்.பி.யுமான கமலஹாசன். அந்த 6 கோரிக்கையில், தினமும் 5 காட்சிகள் திரையிட அனுமதிக்க வேண்டும் என்கிற கோரிக் கையில் கொஞ்சம் மாற்றம் செய்து அனுமதித்ததோடு, மற்ற 5 கோரிக்கைகளையும் நிராகரித்துள்ளார் முதல்வர் விஜய். இதனால், கமல்ஹாசன் எடுத்த முயற்சி பலனளிக்கவில்லை என்கிற பேச்சு கோடம்பாக்கம் வட்டாரங்களில் எதிரொலிக்கிறது.

    Advertisement

    கமல் வைத்த கோரிக்கையில் என்ன நடந்தது?

    1. தமிழ்ச்சினிமாவுக்காக ஓடிடி தளத்தை தமிழக அரசே உருவாக்க வேண்டும்.
    2. தமிழ்ச்சினிமாக்களுக்கு வழங்கப்படும் உள்ளாட்சித்துறை வசூலிக்கும் 4 சதவீத வரியை முழுமையாக ரத்து செய்ய வேண்டும் .
    3. இணையத்தில் திருட்டுத்தனமாக படங்கள் ரிலீஸ் செய்யப்படுவதை தடுக்க, காவல்துறையில் தனிப்படை ஒன்றை உருவாக்க வேண்டும்.
    4. தினமும் 5 காட்சிகள் திரையிட அனுமதிக்க வேண்டும்.
    5. ஓடிடி ப்ளாட்ஃபார்மில் படத்தை ரிலீஸ் செய்ய 8 வாரங்களுக்குப் பிறகே ரிலீஸ் செய்யும் வகையில் கட்டுப்பாடு விதிக்கவேண்டும்.
    6. படத்தயாரிப்பின் மொத்த பட்ஜெட்டில் 10 சதவீதம் மானியமாக அரசு தரவேண்டும்.

    -இவைகள் தான் முதல்வர் விஜய்யிடம் கமல் வைத்த கோரிக்கையின் சாரம்சம்.

    Advertisement

    இதுகுறித்து நிதித்துறை, வருவாய்த்துறை உள்ளிட்ட துறைகளின் உயரதிகாரிகளிடம் விவாதித்த முதல்வர், இந்த கோரிக்கையில் அரசு தரப்பில் நாம் என்ன செய்ய சாத்தியம் இருக்கிறது என்பதை ஒரு அறிக்கையாக கொடுங்கள் என்று கேட்டுக்கொண்டார்.

    அதனடிப்படையில் 6 கோரிக்கைகளுக்கும் தனித்தனியாக ரிப்போர்ட் சமர்ப்பிக்கப்பட்டுள்ளது.

    அது குறித்து விசாரித்தபோது, ''ஓடிடி தளத்தை தமிழக அரசு உருவாக்க முடியாது. இதற்கான அனுமதி தரும் அதிகாரம், மத்திய தகவல் மற்றும் ஒளி பரப்பு அமைச்சகத்திடம் தான் இருக்கிறது. தமிழக அரசுக்கு அதிகாரம் இல்லை. தமிழக அரசே நினைத்தாலும் மத்திய அரசிடம் தான் அனுமதி பெற வேண்டும். ஏற்கனவே தமிழ்நாடு கேபிள் நிறுவனம் தொடங்கப்பட்டு, அது தற்போது நட்டத்தில் இயங்கிக்கொண்டிருக்கிறது. தமிழக அரசு ஓடிடி ஆரம்பிப்பது நிதி நெருக்கடியை உருவாக்கும்.

    Advertisement

    உள்ளாட்சி அமைப்புகளின் வரிவாய்க்காகத்தான் பொழுதுப் போக்கு வரியை திரைப்படங்களிலிருந்து வசூலிக்கப்படுகிறது. அந்த வரி வருவாய் தான் ஓரளவுக்கு சமாளிக்க உதவுகிறது. ஏற்கனவே 8 சதவீத வரியை கடந்த திமுக ஆட்சியில் 4 சதவீதமாக குறைத்தனர். இப்போது முழுமையாக வரியை ரத்து செய்வது உள்ளாட்சி அமைப்புகளின் வருவாயில் பெரிய நெகட்டிவ் தாக்கத்தை ஏற்படுத்தும். அதுமட்டுமல்லாமல், படத்தின் தயாரிப்பாளரும், தியேட்டர் உரிமையாளர்களும் தினசரி கலெக்சனை உண்மையாக சொல்வதில்லை. அதில் பல ஊழல்கள் நடக்கிறது. அதனாலேயே, உள்ளாட்சி அமைப்புகளுக்கு கிடைக்க வேண்டிய வரி வருவாய் முழுமையாக கிடைப்ப தில்லை. இதில் ஸ்ட்ரிக்டான ஆக்சன் எடுக்க வேண்டும்.

    Advertisement

    இணையத்தில் திருட்டுத்தனமாக ரிலீஸ் செய்யப்படும் குற்றத்தை மாநில அரசு தடுப்பதை விட, தயாரிப்பாளர்கள் நினைத்தாலே தடுத்து விட முடியும். தயாரிப்பாளர்கள் விழிப்புடனும் எச்சரிக்கையுடனும் இருந்தால் போதும், இந்த குற்றம் நடக்காது. ஏனெனில், அவர்களுக்குத் தெரியாம இந்த குற்றம் நடப்பதில்லை. ஏற்கனவே தமிழக காவல்துறையில் சட்டம் ஒழுங்கை பாதுகாக்க போதுமான எண்ணிக்கையில் ஆட்கள் இல்லை. இந்த நிலையில், சினிமாக்களின் திருட்டை ஒழிக்க தனிப்படையை எங்கிருந்து உருவாக்குவது? அப்படியே உருவாக்கினாலும், பொது மக்களின் ஆதரவு நமக்கு கிடைக்காது. சினிமாக்காரர்களின் குற்றங்களை தடுக்க மக்கள் வரி பணத்தில் தனி படையை உருவாக்கமா? என்கிற விமர்ச்சனங்கள் வரும்.

    Advertisement

    தினமும் 5 காட்சிகளுக்கு அனுமதி கொடுக்கக்கூடாது என நீதிமன்றம் உத்தரவு ஏற்கனவே இருக்கிறது. அதனால் புதிய படங்களுக்கு ரிலீஸ் செய்யப் படும் நாட்களில் தொடர்ச்சியாக 5 காட்சிகளுக்கும், விடுமுறை மற்றும் பண்டிகை நாட்களில் 5 காட்சிகளுக்கும் அனுமதி வழங்கலாம்.

    ஓடிடியில் படங்களை ரிலீஸ் செய்ய 8 வாரங்கள் கட்டுப்பாடு விதிப்பதை அரசு செய்யத் தேவையில்லை. படத்தயாரிப்பாளர் நினைத்தால், 8 வாரங்களுக்கு பிறகே ரிலீஸ் செய்யும் வகையில் ஓடிடி நிறுவனத்துடன் ஒப்பந்தம் போட்டுக்கொள்ள முடியும். அப்படியிருக்கையில் இதில் அரசு தலையிட வேண்டும் என எதிர்பார்ப்பது தேவையற்றது. இது அரசின் வேலையும் இல்லை.

    Advertisement

    தமிழகத்தில் தயாரிக்கப்படும் இந்திய சினிமாக்களுக்கு அதன் மொத்த பட்ஜெட்டில் 10 சதவீதம் மானியத் தொகையை அரசு வழங்க வேண்டும் என்கிறார் கமல்ஹாசன். இது மிக பேராசை. 100 கோடியில் ஒரு படத்தின் பட்ஜெட் எனில் 10 கோடி ரூபாயை மானியமாக தரவேண்டும் என்கிறார். இதனை தமிழக அரசு ஒப்புக்கொள்ளக்கூடாது. சுமார் 48,000 கோடிக்கு அதிகமான வருவாய்ப் பற்றாக்குறையை எதிர்கொள்ளும் தமிழக அரசு, வணிக ரீதியிலான சினிமாக்களுக்கு மக்களின் வரிப்பணமான பொது நிதியிலிருந்து 10 சதவீதம் மானியம் வழங்கினால், அரசியல் ரீதியாகவும், நிதி ரீதியாகவும் மக்களின் கோபத்தை எதிர்கொள்ள வேண்டியதிருக்கும். அதனால் எந்த வகையிலும் இது ஏற்புடையதல்ல! '' என்று நிதித்துறை மற்றும் வருவாய்த் துறை அதிகாரிகள் தங்களின் கருத்துக்களை முதல்வர் விஜய்க்கு அறிக்கையாக சமர்பித்துள்ளனர்.

    அதனை முழுமையாகப் படித்துப்பார்த்து திருப்தியடைந்த விஜய், அதிகாரிகளின் கருத்துக்களை ஏற்றுக்கொண்டு, கமல் வைத்த 6 கோரிக்கை யில் 5 காட்சிகளுக்கு அனுமதி கோரிக்கையை மட்டும் ஒப்புக்கொண்டுவிட்டு மற்ற 5 கோரிக்கைகளையும் நிராகரித்து விட்டார் முதல்வர் விஜய். தினசரி 5 காட்சிகள் கோரிக்கையில் கூட, அதிகாரிகள் சொன்ன திருத்தத்தை வைத்தே அனுமதி வழங்கப்பட்டுள்ளது.

    தற்போது கமலின் கோரிக்கையை விஜய் நிராகரித்து விட்டார் என்கிற பேச்சு கோலிவுட் வட்டாரங்களில் பரவி வருகிறது.

    - சிறப்பு நிருபர் எழில்

    English Summary

    Vijay Rejects Kamal Haasan's 6 Demands! What Did The 6 Warning Reports Reveal?