சென்னை: "அண்ணாவையும் மறந்துவிட்டு அவர் ஆரம்பித்த அந்தக் கட்சியையும் மறந்து விட்டு தீய சக்தி திமுகவுடன் மறைமுகமாக பினாமியாக கூட்டு சேர்ந்துள்ளது அதிமுக" எனப் பேசியுள்ளார் முதல்வர் விஜய். அதிமுகவை விஜய் அண்ணா ஆரம்பித்த கட்சி எனக் குறிப்பிட்டுப் பேசியதை பலரும் கிண்டல் செய்து வருகின்றனர்.
மதுராந்தகம் மற்றும் தாராபுரம் ஆகிய இரண்டு சட்டசபை தொகுதிகளில் வரும் 6 ஆம் தேதி இடைத்தேர்தல் நடைபெறும் நிலையில் பரப்புரை தீவிரமடைந்து வருகிறது. தமிழக முதலமைச்சரும், தவெக தலைவருமான விஜய் நேற்று தாராபுரத்தில் தவெக வேட்பாளர் சத்யபாமாவை ஆதரித்து பிரச்சாரம் மேற்கொண்டார்.
அப்போது பேசிய முதலமைச்சர் விஜய், திமுக மற்றும் அதிமுகவை கடுமையாக விமர்சித்தார். "2026 தேர்தலில் மக்கள் தமிழக வெற்றிக் கழகத்தை வாக்களித்து ஜெயிக்க வைத்து விட்டார்கள் என்பதையெல்லாம் மறந்துவிட்டு.. திமுகவை வீட்டுக்கு அனுப்பி விட்டார்கள் என்பதை எல்லாம் மறந்துவிட்டு, இன்னும் நாங்க தான் முதலமைச்சர்.. இன்னமும் நம்மளுடைய குடும்பம் தான் அதிகாரத்தில் இருக்கிறது.. இன்னமும் நம் குடும்பத்துக்கு கீழ்தான் அடிமையாக இருக்க வேண்டும் என சில பேரு நினைக்கிற மாதிரி இந்த மன்னர் ஆட்சி மனப்பான்மை நமக்கு கிடையாது. 'மக்களிடம் செல் மக்களுடன் வாழ்' என்று அண்ணா சொன்னதைத் தான் நாம் பின் தொடர்கிறோம். ஆனால் இன்றைக்கு அண்ணாவையும் மறந்துவிட்டு அவர் ஆரம்பித்த கட்சியையும் மறந்து விட்டு தீய சக்தி திமுகவுடன் மறைமுகமாக பினாமியாக கூட்டுச் சேர்ந்து கொண்டு சுயநலவாதிகள் நாம் கிடையாது. நாம் மக்களுக்காக அரசியலுக்கு வந்திருக்கிறோம். அவர்களுக்காக நன்றிக் கடன் செலுத்துவதற்காக அரசியலுக்கு வந்திருக்கிறோம்" எனப் பேசினார். அதிமுகவை விமர்சித்துப் பேசிய முதலமைச்சர் விஜய், அதிமுகவை "அண்ணா ஆரம்பித்த கட்சி" எனக் குறிப்பிட்டுப் பேசியது அனைவரையும் அதிர்ச்சிக்கு உள்ளாக்கியது. "தவெகவைச் சேர்ந்த தொண்டர்களுக்கு அரசியல் வரலாறு தெரியாது என்பது அனைவருக்கும் தெரிந்ததுதான், விஜய்க்கே தெரியாது போல" என நெட்டிசன்கள் பலரும் கிண்டல் செய்து வருகின்றனர். "அண்ணா திமுகன்னு பெயர் பார்த்து.. யாரோ இது அண்ணா ஆரம்பிச்ச கட்சின்னு எழுதி கொடுத்திருக்காங்க. அதையும் அப்படியே மனப்பாடம் பண்ணிட்டு வந்து ஒப்பிச்சிருக்காரு விஜய்" என நெட்டிசன்கள் சமூக வலைதளங்களில் விமர்சித்து வருகின்றனர். செய்தியாளர்களைச் சந்தித்த அமமுக பொதுச் செயலாளர் டி.டி.வி. தினகரன், முதலமைச்சர் விஜய்யின் பிரச்சார பேச்சை விமர்சித்தார். "முதல்வர் பேசும்போதே தற்குறித்தனத்தை காட்டுகிறார். அண்ணா ஆரம்பித்த கட்சி அதிமுக என தோல்வி பயத்தில் என்னென்னவோ உளறுகிறார். அண்ணா ஆரம்பித்தது திமுக, எம்.ஜி.ஆர் ஆரம்பித்தது அதிமுக. அதைக்கூட ஒழுங்காக பேச முடியாமல் தற்குறித்தனமாக அவர் பேசுகிறார்" எனக் காட்டமாக விமர்சித்துள்ளார்.